காந்தி ஆசிரமம் அ. கிருஷ்ணன் தன் மனைவி மங்களம்அம்மாளுடன்

Wednesday 7 September 2011

தோற்றுவாய்

30 01 1984 (சர்வோதய தினம்) மாலை 5 15

காந்தி வழி வெல்க! உலகம் வாழ்க!

இன்று சர்வோதய தினம். தியாக சீலர்களுக்கெல்லாம் தலைவரான தியாகேசன் நம் தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகள் அமரத்துவம் அடைந்த தினம். இன்றைக்குச் சரியாக 36 ஆண்டுகளுக்கு முன் 30 1 1948 வெள்ளிக் கிழமை மாலை புதுடெல்லி பிர்லா மாளிகையின் வெளித் தோட்டத்துப் புல் வெளியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரமாகி விட்டதேயென்று அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்த காந்திpயை நமvகரிக்கும் பாவனை யாகக் குனிந்து எழுந்த நாதுராம் கோட்சே என்ற மராட்டிய இளைஞன் - பம்பாயைச் சேர்ந்தவன் - முன் திட்டப்படி - தன்வசம் ஒளித்து வைத்திருந்த ரிவால்வரால் அடிகளின் மார்பை நோக்கி மூன்று முறை ஒரே நிமிடத்தில் சுட்டான். 'ஹே! ராம்!' என்ற கடைசி வார்த்தையுடன் காந்திp தன்னுடன் கைத் தாங்கலாக வந்த பேத்திகளின் கைகளில் சாய்ந்தார். பலர் சேர்ந்து மாளிகையின் உள்ளே அவரைத் தூக்கிச் சென்றார்கள். சரியாக மாலை 5 17 க்கு அவர் உடலை விட்டு ஆவி பிரிந்து விட்டதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது - உலகம் துக்கத்திலாழ்ந்தது- அடிகளின் விருப்பப்படியே அவர் முடிவு ஏற்பட்டது.

குத்தீட்டி  ஒரு புற‌த்தில் குத்த‌ வேண்டும்
  கோடாறி ஒரு புற‌த்தைப் பிள‌க்க‌ வேண்டும்
ர‌த்த‌ம் வ‌ர‌த் த‌டியால் ர‌ண‌முண்டாக்கி
  நாற்புற‌‌மும் ப‌ல‌ர் உதைத்து ந‌லிய‌த்திட்ட‌
அத்த‌னையும் நான் பொறுத்து அகிம்சை காத்து
  அனைவ‌ரையும் அதைப்போல‌ ந‌ட‌க்கச் சொல்லி
ஒத்து முக‌ம் ம‌ல‌ர்ந்து உத‌ட்டில் சிரிப்பினோடும்
  உயிர் துற‌ந்தால் அதுவே என் உய‌ர்ந்த‌ ஆசை
   
என்று 'உலகம் வாழ' வாழ்ந்த காந்தியடிகளைப் பற்றி நாமக்கல் கவிஞர் பாடி யுள்ளார். அப்படியேதான் அண்ணலின் பூத உடல் மறைந்து புகழுடம்பு எய்தியது.

'மிக நல்லவராக வாழ்வது எவ்வளவு பேராபத்து என்று புலனாகிறது' என்று ஒரு உலக மேதையும், '2000 ஆண்டுகளுக்குப் பின்னரும் மனிதன் காட்டு மிராண்டியாகத்தான் இருக்கிறான்' என்று மற்றொரு மேதையும்,
அடிகளாருக்கு நேர்ந்த முடிவைப் பற்றி மனம் நொந்து கூறினார்கள்.

அண்ணலின் முடிவு சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு வழி காட்டி. தன்னைச் சீர்திருத்திக் கொள்ள, நல்ல மனிதனாகச் சிறந்தோங்க, அண்ணலின் 79 ஆண்டு (1869-1948) கால வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
அண்ணல் 'சத்திய சோதனை' என்ற தலைப்பில் தன் சுயசரிதத்தினை எழுதினார். உலக மொழிகள் பலவற்றிலும் இப்புத்தகம் மொழி பெயர்க்கப் பட்டுப் பல பத்துலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. உலக மேதைகள் பலரும் தங்கள் சுய சரிதைகளை எழுதியிருக்கிறார்கள்.ஆனால் உலக மேதை களில் ஒருவரான ராஜாஜியவர்களோ தன் சுயசரிதையை எழுதவில்லை. 'ஏன் தாங்கள் சுயசரிதை எழுதவில்லை?' என்று ராஜாஜியை ஒருவர் கேட்ட போது, பல சுய சரிதைகளைப் படித்துச் சுவைத்த ராஜாஜி - அவர்களுடைய படைப்பு களுக்கெல்லாம் சிறிதும் மதிப்புக் குறைவு எண்ணாமல் - 'சுயசரிதை எழுதும் போது தன் அகங்காரத்திற்கு - Ego விற்கு - சிறிது இடம் கிடைத்து விடத்தான் செய்கிறது' என்று சொல்லி மழுப்பினார்.

உலகனைத்தும் விசேட முக்கியத்துவம் பெற்ற இந்த சர்வோதய தினத்தில் 76வது வயதில் இருந்து கொண்டிருக்கும் அடியேனுக்கு - அவயவங்கள் சற்று ஒத்துழைக்கும் நிலையில் இருக்கும் போதே என் நினைவில் உள்ளவற்றை - அவ்வப்போது சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைக்கலாமே என்ற அவா ஏற்படுகிறது.

'ஊருக்கு ந‌ல்ல‌து சொல்வேன்;
என‌க்கு உண்மை தெரிந்த‌து சொல்வேன்
சீருக்கெல்லாம் முத‌லாகும்
தெய்வ‌ம் துணை செய்ய‌ வேண்டும்'


என்பது மகாகவியின் தெய்வ வாக்கு. அவன் தெய்வாம்சம் பெற்றவன். அவன் சொன்னதனைத்தும் 'ஊருக்கு நல்லதுதான். அவனுக்கு அதில் முழு நம்பிக்கை. ஆனால் சந்தேகப் பிறவியான நான் அப்படிச் சொல்லலாமா? ஆகவே, நான் சொல்வது ஊருக்கு நல்லதோ இல்லையோ 'எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன். நான் கண்டதும் கேட்டதும் அவ்வப்போது மனதில் படுவதை எழுதுவேன். ஆகவே அவை காலத்தால் வரிசைக் கிரமமாக இருக்கும் என்று சொல்வதற் கில்லை.

இதில் ஒவ்வொரு நாளும் எழுதும் தேதியே குறிப்பிட்டுள்ளேன். இந்த தேதிகளுக்கும் இதில் எழுதப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் நடந்த தேதிகளுக்கும் சம் பந்தமில்லை. எப்போதோ நடந்தவற்றை இப்போது நினைவு படுத்தி எழுது கிறேன். முன்னும் பின்னுமாகவும் சில சமயம் வரிசைக் கிரமத்திலும் இருக்கவும் கூடும்.

நான் பிறந்த குடும்பம், நான் வளர்ந்து ஆளானது, தெய்வ பக்தி, உத்தியோகம் வகித்தது, சந்தித்த மகான்கள், பெரிய மனிதர்கள், என் வாழ்வில் நடந்த நல்லது கெட்டது இன்னும் எதை எதையோ எழுதி வருவேன்- 'இதனால் யாருக்கு என்ன பயன்?' என்று பலர் கேட்பது - கூச்சலிடுவது - என்னைச் சற்று அசத்துகிறது.

'பல வேடிக்கை மனிதரைப்' போலே நானும் வீழ்பவன்தான். ஆயினும் நான் தேச விடுதலைக்காகப் பாடுபட்டு, காந்தியடிகளின் ஆகர்ஷண சக்தியால் ஈர்க் கப்பட்டு, போலீசாரின் தடியடிக்கு இலக்காகி, இருமுறை சிறைவாசம் அனுப வித்து, ராஜாஜி தோற்றுவித்த காந்தி ஆசிரமத்தின் காந்திய நிர்மாணப் பணி ஊழியனாக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்ற முறையில் பெருமிதம் கொள்கின்றேன்-என் மக்கள், பேரக் குழந்தைகள் எப்போதாவது வாய்ப்பு ஏற்படின் படித்துப் பார்க்கக் கூடும் என்ற எண்ணத்திலேயே இதை இந்த விசேட (சர்வோதய தினம்) நாளில் எழுதத் தொடங்கி யிருக்கி றேன்.

அண்ணல் காந்தியடிகளின் ஆத்ம சக்தி என்னை வழி நடத்துமாக.

‘காந்தி ஆசிரமம்’ அ.கிருஷ்ண‌ன்

No comments:

Post a Comment