காந்தி ஆசிரமம் அ. கிருஷ்ணன் தன் மனைவி மங்களம்அம்மாளுடன்

Wednesday 7 September 2011

என் முதல் சிறைவாசம்

நான் காந்தி ஆசிரமத்தில் சேர முடிவு செய்ததே அதன் மூலம் சத்தியாக் கிரகம் செய்து சிறை செல்வது என்ற எண்ணத்தில்தான். உப்பு சத்தியாக்கிரக காலத்தில் 1930 - 31 இல் எனக்கு சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1932ம் வருட இயக்கத்தில் ஆங்காங்கே பலர் சிறை சென்று கொண்டிருந்தனர். ஆசிரம ஊழியர்கள் சிலரும் சிறை சென்று விட்டனர். ஆகவே என்னுள் சிறை செல்லும் எண்ணம் பெருங்கனலாக மூண்டது. நாமக்கல்லில் வெ. இராமலிங்கம் பிள்ளை என். நாகராஜ அய்யங்கார், கூடுதுறை கே.வி.வெங்கடாசல ரெட்டியார், முகம்மது ஊஸ்மான் போன்றவர்கள், தங்களுடன் 3, 4 தொண்டர்களைச் சேர்த்துக் கொண்டு சிறை சென்று விட்டனர். இதையெல்லாம் நாமக்கல்லில் நான் இருந்து பார்த்து வந்தேன். அவர்கள் அந்த ஊர்த் தலைவர்கள் . அவர்களை விசேஷ தொந்திரவு கொடுக்காமல் கைது செய்து தண்டனை அளித்து சிறைக்கு அனுப்பி விட்டார்கள்.  நாமக்கல்லில் இயக்கம் சற்று சுணக்கம் கண்டது.

திரு கே மாரப்ப கவுண்டர் நாமக்கல்லில் காந்தி ஆசிரம கதர் விற்பனை ஏஜன்டாக இருந்தார். அவருடன்தான் நான் தங்கியிருந்தேன். இயக்கத்தை மேற்கொண்டு எப்படித் தொடர்ந்து நடத்துவது என்று அங்குள்ள தேச பக்தர்கள் ஆலோசித்து வந்தார்கள். நாமக்கல் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே காங்கிரஸ் ஆபீஸ். அங்கு தினமும் கூடி ஆலோசித்தோம். ஒரு குறிப்பிட்ட நாளில் சில பேர் சேர்ந்து தேசிய பாடல்களைப் பாடிக் கொண்டு ஊர்வலமாகச் சென்று கடை வீதியில் அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வதெனத் தீர்மானித்து, மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரி, நாமக்கல் இன்ஸ் பெக்டர் முதலியோருக்கு தேதி, இடம், நேரம் எல்லாம் குறிப்பிட்டுக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தோம். 1932 பிப்ரவரி மாதம் முதல் அல்லது இரண்டாவது சனிக்கிழமை (சரியான தேதி நினைவில்லை) பிற்பகல் 3 30 மணிக்கு மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்படுவதாக அறிவிப்பு செய்திருந்தோம்.
எங்கள் குழுவுக்குத் தலைவர் 1) திரு. வரதராஜ முதலியார். இவர் நாமக்கல்¢லில் யூனியன் பிரஸ் என்ற அச்சகத்தின் உரிமையாளர். 2) திரு. சந்தான முதலியார் - இவர் சில தறிகள் வைத்து நடத்தி வந்தார். 3) திரு. கணபதி முதலியார்- இவர் தவில் வித்வான். இன்று உலகப்புகழ் பெற்று விளங்கும் நாகஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் தாய் மாமன் முறையானவர். 4) அடியேன் அ.கிருஷ்ணன் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்.) 5) திரு.அப்துல் கஃபார் - இவர் முகம்மது ஊஸ்மானின் (ஏற்கனவே சிறை சென்றவர்) இளையவர்.          6) திரு. அனுமந்த ராவ். (ஹனுமி என்று அழைக்கப்பட்டவர்), பின்னாட்களில் லாரி புரோக்கராகவும், லாரி டிரைவராகவும் வேலை பார்த்தவர். 7) திரு.என் ஏ. கிருஷ்ணமூர்த்தி - இவர் பின்னாட்களில் எல். ஐ.சி ஏஜன்டாக இருந்தார். 8) திரு.காசி விஸ்வநாதப் பண்டாரம் - (இவர் பின்னாட்களில் திராவிட கழகத்தில் சேர்ந்தார்). (இன்று 13 10 84 இல் என்னைத்தவிர முதல் ஆறு பேர்களில் ஐவர் பல்வேறு காலகட்டங்களில் மறைந்து விட்டார்கள். 7, 8 நம்பர்களைப் பற்றிய தகவல் இன்று எனக்குத்தெரியவில்லை.) முதல் மூன்று பேர்களும் அந்நாளி லேயே நாற்பது வயதைத் தாண்டியவர்கள். குடும்பஸ்தர்கள். மற்றவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

நாங்கள் அறிவிப்பு அனுப்பியதின் பேரில், அந்த மூன்று பெரியவர்களையும் தனித் தனியாக அவர்களின் வீடுகளில் சென்று, காவல் துறையினர் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இனி யாரா யிருந்தாலும் கைது செய்ய வேண்டாமென்றும் அவர்களை அடித்துத் துரத்த வேண்டுமென்றும் மேலிடத்து உத்திரவு வந்திருப்பதாகவும், ஆகவே தங்களுக்குத் தர்மசங்கடமான நிலையிருப்பதாகவும், சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென் றும், இன்ஸ்பெக்டர் சொல்லி யனுப்பியதாகவும் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக் டர் ரங்கசாமி அய்யங்கார், என்னை மாரப்ப கவுண்டர் வீட்டில் சந்தித்து 'ஏம்ப்பா! எங்க கழுத்தை அறுக்கிறே!, திருச்செங்கோட்டிலே சத்தியாக்கிரகம் பண்ணுவதுதானே, இங்கு ஏன் வந்து தொந்தரவு கொடுக்கிறே? உன் பிடிவாதத்தால்தானே அந்த மூன்று முதலியார்களும் பிடிவாதமாக இருக்கிறார் கள்! உங்களையெல்லாம் அடித்துத் துரத்தும்படி சர்க்கார் உத்திரவு. இன்ஸ்பெக் டரும் தெய்வ பக்தி உடையவர்; சங்கடப்படுகிறார். எனக்கோ ஒரே பிள்ளை. உங்களையெல்லாம் எப்படி நானடிப்பேன்? ஆகையினால் அந்த முதலியார்களிட மும் சொல்லி திட்டமிட்ட சத்தியாக்கிரகத்தைக் கைவிடுங்கள்' என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டார். நாங்கள் முன் வைத்த காலைப் பின் வாங்குவ தில்லையென்று தீர்மானித்து விட்டோம்.

(14 10 1984) நாமக்கல் ஊரில், சனிக்கிழமை வாராந்திர சந்தை தினம். நாங்கள் திட்டமிட்டபடி பிற்பகல் மூன்றரை மணிக்கு 8 பேர்களும், 'வந்தே மாதரம்!' 'அல்லாஹூ அக்பர்' 'மகாதமா காந்திஜிக்கு ஜே!' என்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டோம். அதற்கடுத்த பத்து கஜ தூரத்தில், கிராம முன்சீஃப் சாவடி, PWD Section Office, Girls High School போன்றவை இருந்தன. அன்பர்கள் சுமார் 200 பேர்களுக்கு மேல் கூடியிருந்து எங்களை உற்சாகப்படுத்தி, வழியனுப்பி வைத்தனர். ஆனால், PWD Section Office முன்னிலையில், ஒரு மேஜை போட்டு அதன்மேல் ஒரு நாற்காலியில், சப் மாஜிஸ்ட்ரேட் திரு ராமஸ்வாமி நாயுடு உடகார்ந்திருந்தார். அவருக்கு இடப்புற மும், வலப்புறமுமாக போலீஸ் இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தனர். 16 போலீஸ்காரர்கள் போலீஸ் உடையில், ரோட்டை மறித்து சுவர் வைத்தாற் போல் கையில் அரை அங்குல விட்டமும் நாலடி நீளமும் உள்ள பிரம்புகள் கையில் தாங்கி நின்று கொண்டிருந்தனர். சாதாரண உடையில் சி.ஐ.டி. போலீஸ்காரர்கள் சிலர் கூட்டத்தினிடையே கலந்து நின்றனர். போலீஸ் ரைட்டர், சப்மாஜிஸ்ட்ரேட் ஆபீஸ் குமாஸ்தாக்கள் இருவர், கையில் நோட்டுப்புஸ்தகங்களுடன் நின்று கொண்டிருந்தனர். எங்களை மேலே செல்லவொட்டாமல், 16 போலீசாரும், நின்று கொண்டனர். அவர்களை நெருங்கியதும் ஒரு போலீஸ் விசில் பெரிய சத்தத்துடன் கேட்டது. உடனே சப் இன்ஸ்பெக்டர், “இது சட்ட விரோதமான செயல். 144 சட்டத்தை மீறுகிறீர்கள். ஐந்து நிமிடத்தில் நீங்கள் கலைந்து செல்லாவிடில், உங்களை அடித்துத் துரத்துவோம்.” என்று உரத்த குரலில் கூறினார். “சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்; இனி அஞ்சிடோம்!” என்ற பாரதி பாடலை மிக ஆவேச உணர்ச்சியுடன் நான் பாடினேன். எல்லோரும் சேர்ந்து 'அச்சமில்லை! அச்ச மில்லை' என்ற பாடலை பாடிக் கொண்டும், கோஷங்கள் இட்டுக் கொண்டும், நின்றிருந்தோம்.

ஐந்து நிமிடங்கள் சென்றதும், மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்றார். உடனே 16 போலீஸ்காரர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் எட்டு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித்தார்கள். நாங்கள் நின்று கொண்டே அடிகளை வாங்கிக்கொண்டு, கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந் தோம். என்னைத் தவிர மற்ற ஏழு பேர்களும், உள்ளூர்வாசிகள். ஆகவே அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்து அவர்களை இழுத்துச் சென்றார்கள். ஆனால் முதல் மூன்று பெரியவர்கள் மட்டும் “செத்தாலும் திரும்ப மாட்டோம்.” என்று உறுதியாகக் கூறி விட்டனர்.

15 நிமிடங்கள் ஆனதும், சப் இன்ஸ்பெக்டர் 'ஸ்டாப்' என்று சத்தம் கொடுத்தார். உடனே 16 போலீஸ்காரர்களும் அடிப்பதை நிறுத்தி விட்டு, முன் போல் வழி மறித்து சுவர் வைத்தால் போல் நின்று கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் 'கலைந்து போகும்படி' சொன்னார். 15 நிமிடங்கள் இடைவெளிக்குப் பின், மீண்டும் மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்று குரல் கொடுத்தார். 16 போலீஸ்காரர்களும் மீண்டும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் எட்டு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித் தார்கள். உடனே நாங்கள் தரையை முத்தமிட்டவாறு ரோட்டில் படுத்துக் கொண்டோம். முதல் தடவை, தலை, கண், காது, உடல் முன் பின் பக்கங்கள், எல்லாப் பகுதிகளிலும் அடிகள் விழுந்தன. இத்தடவை உடலின் பின் பகுதி களில மட்டுமே அடிகள் விழுந்தன. அது திருச்சி - சேலம் நெடுஞ்சாலை; திருச் செங்கோடு - நாமக்கல் ரோடு. ஆகவே, அங்கங்கே பஸ்கள், வண்டிகள், தட்டாரத் தெரு வழியாகத் திருப்பி யனுப்பப்பட்டன. சந்தை தினமானதால், 5 மணி யளவில், 5000க்கும் மேறபட்ட கிராமத்து மக்கள், ஆண் பண்கள் கூடிவிட்டனர். ”முதலியாரே! உத்தரவு கொடு! - இவங்கள் என்ன, முப்பது நாப்பது பேர்கள் தானே, நாங்கள் நினைத்தால் இவர்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடுகிறோம். இந்தக் கணறாவியைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருப்பதா?” என்று கூச்சல் போட்டனர். வரதராஜ முதலியார் கையெடுத்துக் கும்பிட்டபடியே, ஆத்திரமடைந்துள்ள மக்களைப்பார்த்து, “அப்படி ஏதும் அசம பாவிதமாகச் செய்து விடாதீர்கள். இது சத்தியாக்கிரகம். நீங்கள் பலாத் காரத்தில் இறங்கினால் காந்தியடிகள் மிகுந்த வேதனைப் படுவார். ஆகவே இந்த சத்தியாக்கிரகம் வெற்றி பெற, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று உரத்த குரலில் கூறினார். மாஜிஸ்ட்ரேட், போலீஸ்காரர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடமான நிலை உண்டாகி விட்டது. மீண்டும் இரண்டு முறை 'சார்ஜ்' சொல்லி நாடகம் நடத்தி விட்டு, எங்கள் நால்வரையும் அப்படி அப்படியே விட்டு விட்டு அரசு உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

கூட்டத்தினர் ஓடி வந்து டாக்டர்கள் சாம்பசிவ அய்யர், சௌந்தர ராஜன் இருவரையும் அழைத்து வந்து, அவர்களின் மருத்துவ மனைகளுக்கு எங்களை வண்டிகளில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். குண்டாந்தடிகளால் தாக்கியிருந்தால் திருப்பூர் குமரனுக்குக் கிடைத்த அமரத்துவம் எங்களுக்கும் கிடைத்திருக்கும். பிரம்புகளால் அடித் ததால், உடல் முழுவதும், பெருமளவு உடலின் பின் பகுதியில், தடித்த காயங்களும், ரத்தக் கசிவுகளும் ஏற்பட்டிருந்தன. ரோட்டு மண்ணில் நாங்கள் படுத்துக்கொண்டதால், காயங்களிலெல்லாம் ரோட்டுப் புழுதி மண் ஒட்டிக்கொண்டிருந்ததால், ஒவ்வொரு காயமும் தனித் தனியாகக் கழுவி, பஞ்சு வைத்துக் கட்ட வேண்டியதாயிற்று. நான் 24 வயது வாலிபன். வரதராஜ முதலியாரும், கணபதி முதலியாரும், சதைப்பற்றுள்ள தேக முடையவர்கள். சந்தான முதலியார் மெலிந்த உடல்வாகு உடையவர். அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அந்த மூவருக்கும், அவரவர்கள் வீட்டிலேயே சிகிச்சை நடந்தது. எனக்கு கே. மாரப்ப கவுண்டர் வீட்டில் டாக்டர் வந்து புண்களுக்கு மருந்து போட்டார். ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களில், நாங்கள் ஓரளவு குண மடைந்து வந்தோம். சி.ஐ.டி. போலீசார் வந்து, எங்கள் நிலைமைகளை விசாரித் தறிந்து சென்றார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை, நான் இருக்குமிடத்துக்கு, சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார் வந்து, மேற்கொண்டு என்ன செய்ய உத்தேசம் என்று கேட்டார். இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்வேன் என்றேன். அன்று மாலை ஒரு குதிரை வண்டியில் .......

((31 10 1984) புதன் கிழமை. இன்று பகல் 12 40 டெல்லி தமிழ்ச் செய்தி கேட்க ரேடியோவைத் திருப்பியதும், நம் பாரதப் பிரதமர் ஸ்ரீமதி இந்திரா காந்தி காலை 9 40க்கு தன் இல்லத்திலிருந்து தன் காரியாலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, வயிற்றில் சுடப் பட்டாரென்றும், உடனே அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டாரென்றும், அவர் கவலைக்கிடமாக இருக்கிறதென்றும் செய்தி, அறிவிக்கப்பட்டது.  மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செயது கொண்டிருந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி விமான மூலம் மாலை 4 மணியளவில், டெல்லி திரும்பினார். ராஷ்டிரபதி கியானி ஜெயில் சிங் வெளி நாடு சென்றிருந்தவர் செய்தி கேட்டு உடனே புறப்பட்டு மாலை 5 30 மணிக்கு, தலைநகர் திரும்பினார். 6 மணி செய்தியில்  இந்திரா காந்தி இறந்து விட்டார் என்ற துக்கச் செய்தி உலகுக்கு அறிவிக்கப்பட்டது.  சிலோன் ரேடியோ, பி.பி.சி., முதலியன, இந்திரா மறைந்து விட்டதாக முன்னமே அறிவித்து விட்டனவாம்.  ஆயினும் அவர் உயிர், பிற்பகல் 2 மணிக் குத்தான் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.  இரவு செய்தியில்தான், காலை 9 15 க்கு அவருக்குப் பாதுகாப்பாளர்களாக இருந்த இரண்டு  சீக்கிய காவலர்களே காலை 9 15 மணிக்கு அவரைச் சுட்டதாகவும், இவர்களை மற்ற காவலர்கள் தடுக்கும் முயற்சியில், சுட்டவர்களில் ஒருவர் இறந்து விட்டதாகவும், மற்றொருவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, அபாய நிலையைத்தாண்டி பழைத்துக்கொளவாரென்றும் அறிவிக்கப்பட்டது. 
மாலையிலேயே பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி செயற்கழு கூடி, ஸ்ரீ ராஜீவ் காந்தியை தலைவராகத் தேர்ந்தெடுத்து ராஷ்ட்ரபதிக்கு அறிவித்ததின் பேரில், ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்யப் பட்டதாக இரவு 9 மணி செயதியில் சொல்லப்பட்டது. 
இந்திரா காந்தி, அவர் தந்தை நேருஜியை விடக்கூட, More dynamic and quick decisions எடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர'¢ என்று உலகமே போற்றும், நாடு இதுவரை கண்டிராத தலைவராக விளங்கினார். அவர் ஆத்மா சாந்தியடையவும்,  இந்திய மக்கள் தன் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து பதவி சுயநலத்தை விடுத்த நேர்மை வழியில செல்லும் ஆற்றலை நம் தலைவர்களுக்கு இறைவன் அருளட்டும் என்று 70 கோடி மக்களில் ஒருவனாக அடியேனும் பிரார்த்திக் கிறேன். 'இந்திரா காந்தி மறைந்து விட்டார்.  ஆனால், இந்தியாவின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் அவர்.'  என்ற புகழ் நினைவு உலகு உள்ளவரை நிலைத்த நிற்கும்.  இறைவா! இந்திய மக்கள் இது போன்ற எதிர்பாராத துக்க நிகழ்ச்சிகளிலும் நிதானம் இழக்காமல் நாகரிகமாக நடந்து கொள்ள அருள்வாயாக என்று பிரார்த்திப்போம்.

(01 01 1985) இன்று 1985 புது ஆண்டு பிறந்தது.  சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 31 ந்தேதி, (31 10 1984) உலகமே கண்ணீரில் மிதக்கும்படி யான சோக நிகழ்ச்சி:  நம் பாரதப் பிரதமர் ஸ்ரீமதி இந்திரா காந்தி அம்மையார் இறந்து விட்டார்.  அவருடைய ஒரே மகன், ராஜீவ் காந்தி, தன் துக்கத்தை யெல்லாம் அடக்கிக் கொண்டு அன்றே ஆட்சிப் பொறுப்பை யேற்றுக் கொண்டு, உடனே செயலில் இறங்கி,டெல்லியிலும் பிற இடங்களிலும், வெடித்த வன்முறைச் செயல்களை இரும்புக்கரத்துடன் அடக்கி, 15 தினங்களிலேயே நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தத் தீர்மானித்து, தேர்தல் கமிஷனுக்கு அறிவித்து, அவர்கள் தேர்தல்களை நடத்தி, ஓரு மாதம் தேசம் முழுவதும், ஹெலிகாப்டரில் பறந்து சென்று, தினமும் பல ஊர்களில் கூட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து, டிசம்பர் 24, 27, 28 தேதிகளில் தேர்தல்களை நடத்தி, அறிவிக்கப்பட்ட 504 இடங்களில் 398 இடங்களைக் கைப்பற்றி 31 12 1984 (இந்திரா காந்தி மறைந்த சரியாக இரண்டாவது மாதத்திலேயே) பிரதம மந்திரியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகிலேயே இந்திய தேசிய காங்கிரஸின் சரித்திரத்திலேயே இது வரை நடந்திராத மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தி அமைச்சரவையையும் அமைத்து விட்டார் ராஜீவ்.
இந்த 1985 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் நூற்றாவது ஆண்டு.  இந்த ஆண்டு முதல் ராஜீவ் காந்தியின் தலைமையில், நாடு வீறு நடை போடும் என்ற நம்பிக்கை தேசம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.  அரசியல் ரீதியில் பார்த்தாலும், சிறந்த தலைரான மோதிலால் நேருஜியை விட அவர் ஒரே புதல்வரான ஜவஹர்லால் நேருஜி பலவிதத்திலும் பிரகாசித்தார்.  அவரை விடக் கூட அவருடைய ஒரே புதல்வியான இந்திரா காந்தி பன்மடங்கு அதிகமாகப் பிரகாசிக்கும் மகத்தான வாய்ப்புக்களைப் பெற்றுப் பேரும்  புகழும் பெற்று, உலகமே வியக்கும்படி விளங்கினார். அவருடைய மறைவு சம்பவித்த விதம், அவர் புகழை காந்தியடிகளுக்கு 1948 ஜனவரி 30ந்தேதி மாலை நிகழ்ந்தது போல் நிகழ்ந்து, மேலும் பன்மடங்கு பிரகாசிக்கிறது.  ராஜீவ் காந்தி யின் ஆரம்ப அதிர்வேட்டுக்கள், மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. ஆனால் சுயநல அரசியல் வாதிகளே நிறைந்த இந்தப் பாரத நாட்டில் ராஜீவ் காந்தியை, முன்னேற விடுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  இந்தத தேர்தலில், எதிர்க்கட்சிகள் படுதோல்வி யடைந்தன. கட்சித் தலைவர்கள் பலர் தோல்வி கண்டனர்.  தேசம் ஒரு கட்சி அரசியலை மட்டுமே விரும்புவதாகத்தான்  தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.  ஆகவே ராஜீவின் பொறுப்பு- சுமை அதிகம்.  அதை அவர் எப்படி சமாளிப்பாரோ?   இனி நடக்க விருக்கும் தேர்தல்களில், தேர்தல்களில் தோல்வி கண்ட நல்ல நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களைப் போட்டியின்றித் தேர்வு பெறச்செய்ய வழிமுறை கள் வகுக்க வேண்டும்.  இதுவரை வெறும் எதிர்ப்புக் கட்சிகளாக இருந்துவிட்ட எதிர்க் கட்சிக்காரர்கள், ஒரே கட்சியாக, ஒரே தலைவரின் கீழ் ஒன்ற சேர வேண்டும். அப்பொழுதுதான் பிற ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, பிரிட் டன் போல, இந்தியாவிலும் இரண்டு அல்லது மூன்று கட்சி அரசியல் தோன்ற முடியும். 
தமிழகத்திலும், சென்ற 3 மாதங்களாக உடல் நலமின்றி இருக்கும் பரட்சித் தலைவரின் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றிருப்பதும் மிகவும் வரவேற்கத் தக்கதல்லவா?)


(07 01 1985) அன்று மாலையில், திரு கே. மாரப்ப கவுண்டர் வீட்டுக்கு ஒரு குதிரை வண்டி வந்தது. ஒரு போலீஸ்காரர் வந்து 'உங்களை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச்சொன்னார்.' என்றார். நான் உடனே புறப்பட்டு குதிரை வண்டியில் சென்றடைந்தேன்.அங்கு ஏற்கனவே மூன்று முதலியார்களும் அவரவர் வீடுகளிலிருந்து தனித்தனி குதிரை வண்டிகளில், வந்து சேர்ந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சாமி. சிதம்பரனார் எங்களைப் பார்த்து, "மேற் கொண்டு என்ன செய்ய உத்தேசம்?" என்று கேட்டார். "புண் ஆறியபின், மீண்டும் அதே இடத்திலிருந்து 144 தடை உத்துரவை மீறி அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வோம்" என்றோம். "அப்படியானால் உங்களைக் கைது செய்வேன்" என்றார். நாங்கள் மீண்டும் சத்தியாக் கிரகம் செய்யத்தான் போகிறோம்" என்றோம். "உங்களை அரெஸ்டு செய்திருக் கிறேன். " என்றார். நாங்கள் கைதானோம். ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும் எதிர்ப்புறம் உள்ள சப் ஜெயிலில் எங்களை அடைத்தார்கள். தலையணை, போர்வை ஏதும் இல்லாமல், வெறும் கல் தரையில் படுத்தது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.

(10 01 1985) எங்கள் நால்வரைத் தவிர, வேறு குற்றங்கள் புரிந்த காவற்கைதிகளும், அந்த 15 X 10 அடி அறையில் ஆறு பேர்கள் இருந்தார்கள். அவர்களில் ஆஸ்துமா நோயாளி இரவு முழுவதும் இழுப்பு வேதனையில் இருந் தார். மற்றவர்கள் நிலையோ விரும்பத் தக்கதாய் இல்லை. ஆகவே, நாங்கள் நால் வரும் எங்கள் கதைகளைப் பேசிக்கொண்டே தூங்காமல் இரவைக் கழித்தோம் உடம்பில் அடிபட்ட காயங்கள் பல இன்னும் குணமாகவில்லை. ஆகவே, அந்த கரடுமுரடாள கல் தரையில் புரண்டு படுக்கும் போது, நாங்கள் பட்ட வேதனை சொல்லி முடியாது. மறுநாட் காலை ஆறு மணிக்கு இரும்புக் கதவுகளைத் திறந்தார்கள். இரண்டிரண்டு பேர்களாக சுமார் முப்பது கைதிகளை நிறுத்தி வைத்து, எண்ணிப் பார்த்து கழிவறைக்கு 'மார்க்' செய்யப் பட்டோம். அதைப் பற்றி (சுகாதாரத்தைப் பற்றி,) சொல்லாமல் விடுவது நல்லது. ஏதோ நரகம் எனகிறார்களே அது இதுதானோ என எண்ணிக் கொண்டோம். பல் துலக்கி முகம் கை கால் கழுவிக் கொண்ட பின் எங்கள் முப்பது பேர்களையும், (நாங்கள் நான்கு பேர்கள் மட்டுமே அரசியல் கைதிகள்). ஒரு இடத்தில் மண் தரையில் உட்கார வைத்து எத்தனையோ பேர்கள் மாறி மாறி உபயோகித்த நசுங்கி உருக் குலைந்த அலுமினியத் தட்டுகளில், அரிசிக் கஞ்சியை ஊற்றி அனைவரிடமும் ஒவ்வொரு தட்டாகக் கொடுத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிறிது சாப்பிட் டோம் மீதியை அங்குள்ள தொட்டியில் கொட்டினோம். தினமும் வந்து பழகின காக்கைகளும், நாய்களும், சந்தோஷமாக அவைகளைச் சாப்பிட்டன. பத்து மணியளவில் எங்கள் நால்வரையும் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு நான்கு போலீஸ் ஜவான்கள் இட்டுச் சென்றனர். தலைமை குமாஸ்தா எங்கள் நால்வரையும் பெயர் கேட்டுத் தெரிந்து பதிவு செய்து கொண்டார்.
(11 01 1985)
1) திரு. வரதராஜ முதலியார்: நாமக்கல்¢லில் யூனியன் பிரஸ் என்ற அச்சகத்தின் உரிமையாளர்.
2) திரு. சந்தான முதலியார் - மாஸ்டர் வீவர் மற்றும் ஊர்ப் பெரிய தனக்காரர்.
3) திரு. கணபதி முதலியார்: தவில் வித்வான். இன்று உலகப்புகழ் பெற்று விளங்கும் நாகஸ்வர வித்வான்நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் தாய் மாமன் முறையானவர்.
4) அடியேன் ‘காந்தி ஆசிரமம்’ அ. கிருஷ்ணன் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்)

எங்களை விசாரித்த சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட், என் பெயரில் - தொழில் என்ற இடத்தில், vagrant என்று போட்டிருந்ததைப் பார்த்து, "What do you mean by this?" என்று சற்றுக்கோபமாக ஹெட் கிளார்க்கைப் பார்த்துக் கேட்டார். " He is not employed, Sir!" என்றார். என்னைப் பார்த்து நீங்கள் ஏதாவது வேலை பார்த்தீர்களா என்றார். 'நான் இரண்டு ஆண்டுகளாக திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வேலை பார்த்து வருகிறேன். சத்தியாக்கிரகம் செய்வதற்காக, ராஜினாமா செய்தேன். ஆசிரமத்தில் சேருவதற்கு முன்பு திருநெல்வேலி ஜில்லா போர்டிலும், அதற்கு முன்பு, தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்தேன்.' என்றேன். "You see! you change it as at present unemployed." இவ்வளவுக்கும் ஹெட்கிளார்க் ராமஸ்வாமி அய்யங்கார் என்னை நனகு அறிந்தவர். வக்கீல்கள், சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டின் நேர்மையையும் அந்த சூழ்நிலையில் அவர் காட்டிய தைரியத்தையும் பாராட்டினர். காக்கையேறப் பனம் பழம் விழுந்த கதையாக அவரை அடுத்த மூன்று மாதங்களில் வேறொரு இடத்திற்கு மாற்றி விட்டார்கள..

மேற்கொண்டு அவர் வழக்கை விசாரித்தார். "நாங்கள் சத்தியாக்கிரகிகள்; ஆகவே எதிர் வழக்காட மாட்டோம். 144 தடை யுத்தரவை மீறித்தான் அன்னியத் துணிக் கடை மறியலுக்குப் புறப்பட்டோம்", என்றோம். இரண்டு செக்ஷன்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையளித்து இரண்டும் தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

சப் ஜெயிலுக்கு அழைத்து வந்து குழம்பும் சாதமும் தந்தார்கள். மாலை ஐந்து மணியளவில், எங்கள் நால்வரையும், பஸ் மூலம் திருச்செங்கோடு சப்ஜெயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். திருச்செங்கோடு சப் ஜெயில், நாமக்கல் ஜெயிலை விட மிகவும் சுகாதாரக் கேடான சூழ்நிலை. மறுநாள் காலையும் மதியமும் அங்கு ஜெயில் சாப்பாடு. மாலை ஐந்து மணியளவில், பஸ் மூலம் சங்கரி துர்க்கம் சென்று அங்கிருந்து ரயில் மூலம் கோவை சென்றோம். வழியில், எங்களை அழைத்துச் சென்ற போலீஸ்காரர்கள், ஈரோடு ஸ்டேஷனில் தின்பண்டங்கள் , காப்பி, வாங்கித் தந்தார்கள். அரசு செலவு. நாங்கள் அவரவர் வீடுகளி லிருந்து தனித் தனியாக போலீஸ் நிலையம் அழைத்து வரப் பட்டதால், கையில் பணமோ மாற்று உடையோ எடுத்து வரவில்லை. நண்பர்களும் உறவினர்களும் கூட, பயத்தால் எங்களை வந்து பார்க்கவுமில்லை. இரவு 11 30 மணிக்கு கோவை ஜங்ஷன் போய்ச் சேர்ந்து, Central Treasury Hall ல் படுத்தோம். சற்று தூங்கினோம்.

(13 01 1985) அதிகாலை 5 30 மணிக்கு, எழுந்து, காலைக் கடன்கள் முடித்து, அரசு செலவில் டிபன் காப்பி, ஓட்டலிலிருந்து கிடைத்தது. நாங்கள் அரசியல் கைதிகள் என்ற காரணத்தாலோ என்னவோ எங்களுக்குக் கை விலங்கு கள் அணிவிக்க வில்லை. மிக்க மரியாதையுடனேயே கைதானது முதல் நடத்தப் பட்டோம். கோவை மத்திய சிறையில் எங்கள் அங்க மச்ச அடையாளங்களைச் சரிபார்த்து, எங்கள் உடைகளை வாங்கி மடித்து நம்பர் போட்டு ஜெயில் உடைகள் இரண்டு செட் தந்து, உள்ளே அனுப்பினார்கள். நாமக்கல்லிலிருந்து திருச்செங்கோட்டுக்கு அழைத்து வந்த ஜவான்கள் நால்வரும், நாமக்கல்லுக்கு திரும்பினர். அது போலவே திருச்செங்கோடு ஜவான்கள் கோவை மத்திய சிறையில் எங்களை ஒப்படைத்த பின், திருச்செங்கோடு திரும்பினர்.

எங்களை ஜெயில் வார்டர்கள் ஜெயில் அன்னெக்ஸ் என்ற பகுதியில் கொண்டு விட்டு அங்கிருந்த தலைமை வார்டர் வசம்ஒப்படைத்துச் சென்றனர். 12 அடி உயர முள்ள பெரிய இரும்புக் கதவுகள் இரண்டில் ஒன்றை சற்றே திறந்து எங்களை உள்ளே அனுமதித்தனர். அங்கு எங்களுக்கு முன்னரே தண்டனை பெற்று வந்திருந்த நாமக்கல் நண்பர்களைச் சந்தித்ததில் நாங்கள் பெரிதும் மகிழ்வு கொண்டோம். கிளைச் சிறை, (ஜெயில் அன்னெக்ஸ்) என்பது Quarantine block ஆக மத்திய சிறைக்கு வெளியே இருப்பது. பிரதான சிறையில் சுமார் 1500 கைதிகள் இருக்க வசதி உண்டு. ஒவ்வொரு கைதியும் ஜெயிலுக்கு வந்ததும், தகுந்த மருத்துவர்களால் நன்கு பரிசீலிக்கப்பட்டு, பூரண நலமுள்ளவர்கள் மட்டுமே மத்திய சிறைக்குள் அனுப்புவார்கள். மற்றவர்களை குவாரன்டைன் சிறையில் 10, 15 தினங்கள் வரை வைத்திருந்து, நன்கு குணமாக்கிய பின்தான் மத்திய சிறைக்குள் அனுப்புவார்கள். ஆகவே அந்த சிறைக்கு குவாரன்டைன் என்று பெயர். மத்திய சிறைக்குள் தேச பக்தர்களை அனுமதித்தால் இவர்கள், மற்ற கைதிகளை தேசபக்தர்கள் ஆக்கி விடுவார்களோ, என்ற எண்ணத்தில், தேசிய கைதிகளை இந்த குவாரன்டைனில் வைத்தார்கள். 1930ம் வருடத்தி லேயே உப்பு சத்தியாக்கிரக காலத்தில், சிறை சென்ற தேசபக்தர்கள், கோவை சிறை குவாரன்டைனில் அடைக்கப் பட்டவர்கள், பெருங் கிளர்ச்சி செய்து சிறை நிர்வாகத்தினரைப் பணிய வைத்து, குவாரன்டைன் என்று பெயரை மாற்றி ஜெயில் அன்னெக்ஸ் என்று பெயரிட வைத்தார்கள்.

மேலும் அரசியல் கைதிகள் எத்தனை பேர்கள், எத்தனை முறை வந்தாலும், அவர்களுக்குப் புதிய ஜெயில் உடைகளும்,  சாப்பிடும் தட்டு, குவளை, (இரவு நேரங்களில் மலங் கழிக்கும்) சட்டி - மூடி,  படுக்கும் சணல் பாய், போர்த்திக் கொள்ளும் முரட்டுக் கம்பளி, ஆகிய அனைத்தும் புத்தம் புதிய தாகத்தான் தர வேண்டு மென்று போராடி வெற்றி பெற்றிருந்தார்கள்.   ஆகவே நாங்கள் நால்வரும் சிறைக்குள் சென்றதும், புதியவைகள் தரப்பட்டன. 
ஜெயில் அன்னெக்ஸில், மொத்தம் 72 அறைகள் தனித் தனியாக இருக்கும அமைப்பு. மூன்று பிளாக்குகள். ஒவ்வொரு பிளாக்கிலும், முன்புறம் ஆறு அறைகள் பின்புறம் ஆறு  அறைகள்.  அறைகள் ஒவ்வொன்றும் ஆறு அடி அகலம், பத்தடி நீளம், பன்னிரண்டடி உயரம்.  பத்தடி உயரத்தில், ஒன்றரை அடிக்கு மூன்றடி உள்ள இரண்டு குறுக்குக் கம்பிகளுடன் கூடிய ஒரே ஒரு ஜன்னல்.  முகப்பில் ஒவ்வொரு அறைக்கும் நாலடிக்கு ஆறடி உயரமுள்ள கெட்டியான இரும்புக் கதவு.  மழை, பனிக்காலத்தில், அறையின் பின சுவர் ஓரமாக முடங்கிக் கொள்ள வேண்டும்.  வெயில் காலங்களில் காற்றுக்காக இரும்புக் கதவு கிட்டே படுக்க வேண்டும்.  கீழே கரடு முரடான கல் தரை.  இந்த ஜெயில் அன்னெக்ஸ் சிறை யில், ஒவ்வொரு பிளாக் முன்னிலும், வரிசையாக புளிய மரங்கள்.  இவைகளை எப்படியோ மரமாக வளரும் வரை ஜெயில்அதிகாரிகள் காப்பாற்றி விட் டார்கள்.  நான் இருந்த ஒன்றரைஆண்டு காலத்திலும், அது புளியம் பழம் தந்ததே இல்லை. ஏனெனில் புளியம் பூவையே பறித்துத் தின்னும் கைதிகள்,  அவை பிஞ்சு விடக் கூட அனுமதிக்க மாட்டார்கள்.  50 ஆண்டுகளுக்குப் பின் இப்போது நிலைமை எப்படியோ?  மீண்டும் அங்கு செல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்க வில்லை.
 
   (14 01 1985) இன்று பொங்கல் திருநாள்.
   என் முதல் சிறைவாசம் ஒரு வருட காலம்.  1932 பிப்ரவரி மூன்றாம் வாரத்திலிருந்து, (17ந் தேதியிலிருந்து என்று நினைக்கிறேன்) 1933 ஜனவரி 6ந் தேதி வரை கோவை மத்திய சிறையில் ஜெயில் அன்னெக்ஸில் இருந்தேன்.  பாக்கி நாட்கள் ரிபேட் நாட்கள்.  இரண்டாவது முறை 1933 ஆகஸ்டு 7ந் தேதி யன்று காலை திருச்செங்கோட்டில், ராஜாஜியின் தலைமையில்,  16 பேர்களில் ஒருவனாக, 6 மாத சிறை தண்டனை பெற்று, இதையும் ஆகஸ்டு 8ந் தேதி காலை முதல் ஜனவரி 4ந் தேதி வரை இதே ஜெயில் அன்னெக்ஸில் கழித்தேன். ஆக, சுமார் 16 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தேன்.  ஜெயில் அன்னெக்ஸில் 72 அறைகள் மட்டுமே இருந்ததால், அதற்கு மேல் கைதிகள் இருந்தால், புதிய அரசியல் கைதிகள் வருவதை அனுசரித்து, ஏற்கனவே இருப்பவர்களை வேறு சிறைக்கு மாற்றி விடுவார்கள்.  ஆனால் எங்களில், காந்தி ஆசிரம ஊழியர் களில் 6, 7 பேர்களை மட்டும் வேறு சிறைகளுக்கு மாற்றவில்லை.  அவர்களில் நானும் ஒருவன்.  தென் பிராந்திய, கேரள, தமிழ், கர்நாடக, ஆந்திர அரசியல் கைதிகள் அவ்வப்போது புதிது புதிதாக வந்து, சில நாட்கள், வாரங்கள், மாதங் கள் தங்குவார்கள்.  பலர் வந்த சில நாட்களிலேயே கிளர்ச்சிகள் செய்து வாரம் ஒரு சிறையாக மாறிக்கொண்டே தென்னகத்திலுள்ள 20, 25 சிறைகளையும் பார்த்தவர்களும் உண்டு.    எங்களில் 'அப்பாவிகளான' சிலர் மட்டும், போட்ட இடத்திலேயே விழுந்து கிடந்தோம். என்னைப் பொறுத்தவரை சிறை வாசம் அவ்வளவு சிரமமானதாகத் தெரியவில்லை.  நான் திருமணமாகாதவன்.  நான் யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.  என் உறவினர்கள் எவரும் என்னைப் பற்றிக் கவலைப்படக் கூடியவர்களும் இல்லை.  கோவையில் மத்திய அரசு உத்தியோகத்தில் இருந்த என் உறவினர் (என் அக்காள் மருமகன்),  என் அக்காள் கணவரும், ஒரே ஒரு முறை என்னை சிறையில் வந்து பேட்டி கண்டனர்.  இந்த ஒன்றரை ஆண்டுகளில், 4, 5 முறை மட்டுமே என் நெருங்கிய உறவினர்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்தன.
(15 01 1985) இன்று மாட்டுப் பொங்கல்.

3 comments:

  1. நெஞ்சைத் தொடும் வர்ணனை. தேசத்தின் சுதந்திரத்திற்காகத் தியாகம் செய்தவர்களை நாம் வணங்கவேண்டும். தேசத்திற்காக தங்கள் சொத்து முழுவதையும் கொடுத்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். உன்னதமான மனிதர்கள். என்.ஆர். ரங்கனாதன்.

    ReplyDelete
  2. தியாகி திரு. காந்தி ஆசிரம கிருஷ்ணன் அவர்கள் தனது "என் முதல் சிறைவாசம்" என்ற பகுதியில் குறிப்பிட்டுள்ள தியாகி திரு. வரதராஜ முதலியார், யூனியன் பிரஸ், நாமக்கல் அவர்களின் பேரனான நான்
    எனது தாத்தாவின் சுதந்திர போராட்ட வரலாறுகளை எனது தந்தை மூலமாக அறிந்துள்ளேன். ஆனால் அவரோ போராடிய ஒரு தியாகியின் வரலாறில் அவரைப் பற்றி படிக்கும்போது ஏற்பட்ட சந்தோஷம் அளவிட முடியாதது. அதற்க்கு தியாகி திரு. காந்தி ஆசிரம கிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
    இன்றைய காலகட்டத்தில் ஒரு தலைமுறையே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறையும், நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் அறியாமலே வளர்ந்துகொண்டிருப்பது பார்த்து மிகவும் வேதனையாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் நமது நாட்டு விடுதலைக்கு பாடுபட்டவர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டுவிடும்.
    அவர்களின் தியாகங்களை போற்றாவிட்டாலும் மறக்காமல் இருக்க வரும் காலங்களில் பள்ளிகளில் சுதந்திரத்தின் அருமைகளை அவர்களின் போராட்டங்களை முழுமையாக போதிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. எங்களது நாமக்கல் தியாகி.மேலும் நன்பர்அவர்களின் தகப்பனார் என்பதிலும் பிரமிக்கும் வரலாறாக என்னுகிறேன்

    ReplyDelete