எனக்கு அப்போது சுமார் பத்து வயதிருக்கலாம். ஆண்டு, தேதி நினை வில்லை. தமிழ் மாநில முதல்வர், பெருந்தலைவர் காமராஜர், சேலத்தில் ஏதோ நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார். என் தந்தை என்னையும் அழைத்துப் போயிருக்கிறார். சிந்தனை, செயல் மட்டுமின்றி, உடல்வாகிலும் உயர்ந்தவர் அல்லவா பெருந்தலைவர்? கூட்டத்தில் ஒரு புறம் நிற்கும் என் தந்தையை அவர் கண்கள் கண்டு கொண்டன. உடனே அருகில் வந்து என் தந்தையிடம், 'என்ன கிருஷ்ணன், நல்லா இருக்கீங்களா?' என முகமன் விசாரித்துப் பின் அவர்கள் ஏதேதோ பேசினார்கள். முதன் முறையாகச் சிறுவனாகிய எனக்கு, ஒரு மாநில முதலமைச்சரே அடையாளம் தெரிந்து கொள்ளும் அளவுக்கு, என் தந்தை, ஏதோ வகையில் சிறந்தவர் என்ற முதல் குறிப்பு, சிறிது பெருமையைத் தந்தது.
கிட்டத்தட்ட அதே ஆண்டில், நாமக்கல்லில் ஏதோ நிகழ்ச்சிக்காகச் செல்லும் போது, அப்போது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஓட்டல் ஊழியர், நாங்கள் அங்கு உணவருந்தச் சென்ற போது, என் தந்தையிடம் காட்டிய பரவ சம் மிகுந்த மரியாதையும், என் தந்தை கை கழுவச் சென்றபோது, என்னிடம், 'உன் அப்பா, தேச விடுதலைக்காக நாமக்கல்லில் ஒரு மறியல் செய்தபோது அவர் உடல் முழுவதும் அடி வாங்கி, இரத்த மயமான உடலோடு சந்தைப் பேட்டையில் விழுந்து கிடந்ததை என் பத்து வயதில் பார்த்த காட்சி என் நினைவில் நிற்கிறது' என்பது போல செய்தி சொன்னார். என் தந்தையின் உடலெங்கும், - குறிப்பாகக் கால்தொடை முதல் கணுக்கால் வரை நிறைந்திருந்த காயத் தழும்புகளின் காரணம் சற்று விளங்கிற்று. ஆனாலும் அவ்வளவு அடி வாங்கிட வேண்டிய தேவை என்ன என்பது சற்று குழப்பமாகத்தான் இருந்தது.
நான் உயர்நிலைப் பள்ளி மாணவனான போது, பள்ளிக்குச் சம்பளம் செலுத்த வேண்டும். எனக்கு மாதச் சம்பளம் ரூபாய் நான்கு; என் அக்காளுக்கு, ரூபாய் ஐந்தேகால்; என் அண்ணனுக்கு ரூபாய் ஏழரை; வீட்டு வாடகை ரூபாய் இருபது. என் வீட்டில் விருந்தினர் வராத நாளே கிடையாது. மாதச் சம்பளம் கட்டப் பணம் கேட்கும் போதெல்லாம், அந்தப் பணத்தைத் தர என் அன்னை மிகவும் சிரமப்படுகிறார் என்பதை உணர முடிந்தது. பள்ளியில் 92 MER Scholarship என்று பெற்றோரின் மாதச் சம்பள அடிப்படையில் கற்பிப்புக் கட்டண விலக்கிற்கான படிவம் பெற்று, என் தந்தையிடம் தந்தபோது, அவர் அதை முழுவதும் படித்துப் பார்த்து, ரூபாய் நூறுக்குக் குறைவான மாத ஊதியம் பெரும் பெற்றோருக்கு மட்டுமே இது செல்லுமென்றும், தன் மாதச் சம்பளம் ரூபாய் நூற்று ஒன்று என்றும் சொல்லி ஒப்பமிட மறுத்தார். படிவத்தைப் பள்ளியில் நிறைவு செய்யாமலேயே திருப்பித் தந்தபோது பள்ளி ரைட்டர், என்னைத் தெரிந்து கொண்டு தலைமை ஆசிரியரிடம் அறிமுகப்படுத்தினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு வி.சுப்பிரமணியம், சேலம் பிரமுகர் ஸ்ரீ அப்பாவு செட்டியார் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏதோ எண்டோமெண்ட் தொகை பெற்று அதன் மூலம் என் பள்ளிக் கட்டணம் கட்டாமலிருக்கும் சலுகை பெற்றுத் தந்தார். பொருளாதார ரீதியில் குடும்பத்தில் வறுமையே நிலவியதாக நான் நினைத்தேன். என் தந்தை ஏன் அந்த 92 MER Scholarship Applicationல் கையொப்பமிடவில்லை என்பது அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னை விடப் பொருளாதார அடுக்கில் மேம்பட்ட பல மாண வர்களும் 92 MER Concession பெற்றதாக நினைவு.
பின்னர், நான் உயர் நிலைப் பள்ளி மாணவனாக வளர்ச்சி பெறப்பெற, எங்கள் பள்ளியிலும், பிற பள்ளிகளிலும் என் தந்தை, பாரதி விழா, சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, தமிழ் மன்றக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக வந்து, ஒலி பெருக்கி இல்லாமல், ஆயிரம் பேர் வரை கேட்கத் தக்க வகையிலும், உள்ளம் உருகுமாறும் உரத்த குரலில் பேசிய பேச்சுகளும், பாடிய பாடல்களும், அவற்றில் நிறைந்திருந்த ஆவேசமும் அவர் இந்த நாட்டை எவ்வளவு நேசித்தார் என்பதை எனக்குப் புலப்படுத்தத் தொடங்கியது.
என் தந்தை தன் முப்பதாவது வயதில், என் தாயை மணந்து கொண்ட தாகவும், சுமார் பதினைந்து ஆண்டுகள் பூண் நூல் அணியாமலும், சமயச் சடங்குகள் ஏதும் நிகழ்த்தாதவராகவும், அவருடைய தாய் தந்தையர் நினைவு நாட்களில், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் உட்பட அனைத்து சாதியினரையும் அழைத்து, வீட்டில் விருந்து படைத்ததாகவும், என் தாய் கூறுவார். ஆனால், என் பன்னிரண்டாம் வயதில், எனக்கும் என் அண்ணனுக்கும் பூண்நூல் அணிவித்து, மரபுகள் ஒரு நாட்டின் பண்பாட்டு விளக்கங்கள் என்பதை விரித்துச் சொல்லி, 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - மன்னிப்பற்ற பெருங்குற்றம்! முன்னையோர், நமது நாட்டின் முனிவரர் தேடி வைத்த முழு முதல் ஞான மெல்லாம், மூட நம்பிக்கைகளல்ல' என்றெல்லாம் புரிய வைத்தார்.
சிருங்கேரி சாரதாபீட சங்கராச்சாரியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், பாரதியார், காந்திஜி, ஸ்ரீ ரமண மஹரிஷி,
புதுக்கோட்டை சாந்தானந்த ஸ்வாமிகள், வடகுமரை அப்பண்ண ஸ்வாமிகள், திருக்கோவிலூர் ஞானானந்த ஸ்வாமிகள், யோகி ராம்சரத்குமார், போன்றோரின் அறிமுக மும், அணுக்கமும், என் தந்தையுடைய ஆன்மிக ஏற்றங்களுக்கு உகப்பாய் அமைந்தன.
என் தந்தைக்கு மெக்காலே கல்வி முறையில் ஏனோ நம்பிக்கை இருக்க வில்லை. என் அண்ணன் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் உயர் மதிப்பெண்கள் பெற்ற போதும், அவனை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மாணவரில்லத்தில் சேர்த்து, ஆட்டோமொபைல் டிப்ளமொ படிக்கச் செய்தார். கல்லூரிப் பட்டத்தில் எப்படியோ மோகங்கொண்ட என் அண்ணன், வேண்டா வெறுப்பாக டிப்ளமொ படித்து முடித்து வேலை பெற்றார். என் அக்காளும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் மாவட்ட அளவில் உயர் மதிப்பெண்கள் பெற்ற போதும், சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரி நிர்வாகத்தில் நெருக்கமும், உரிமையும் பெற்றவராக என் தந்தை இருந்த போதும், என் தமக்கையை பி.யூ.சி.யில் சேர்க்காமல், அக்கல்லூரி பௌதிக சோதனைச்சாலை அட்டெண்டராகப் பணி செய்ய வைத்து, Dignity of Labour என்பதை நடைமுறைப்படுத்தினார்.
நான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த போதும், மேற்படிப்பு கொள்கை ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தமக்கு உகந்தது இல்லை எனக் கூறி, என்னைக் கல்லூரியில் சேர்க்கத் தயங்கினார். சேலம் அரசுக் கல்லூரியில், முதல்வராக இருந்த திரு. அச்சுதன் நாயர், சேலம் விஜயராகவச்சாரியார் பேரன் திரு. ஆர். டி. பார்த்தசாரதி, அப்போதைய சேலம் ஆட்சியரும் என் தந்தையின் பள்ளித் தோழருமான திரு மோணி ஆகியோர் முயற்சிகளால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை பெற்று, உயர்வகுப்பில் இளம் அறிவியல் பட்டம் பெற்றேன். காந்தி ஆசிரம ஊழியர் திரு.எம்.கே.வெங்கடராமன் மற்றும் தீரர் சத்தியமூர்த்தியின் உறவினரான பேராசிரியர் ஆர்.கே. விஸ்வநாதன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, தேசிய கல்விக் கடன் பெற்று, எம்.எஸ்சி. பட்டம் உயர்வகுப்பில் தேறினேன்.
எம்.எஸ்சி. முடித்த பின், என் தந்தை என்னிடம், 'என் விருப்பத்திற்¢கு மாறாக என்னை அறிந்தவர்கள் உதவியால் இந்த நிலைக்குப் படித்துள்ளாய்; ஆனால் இனி என் பெயரைப் பயன் படுத்தி, நீ ஏதும் வேலை தேடிக்கொண்டால், அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன்.' என்று அழுத்தம் திருத்தமாய் கூறினார். அதன்படியே, என் பணி தொடர்பாகவோ, என் தனிப் பட்ட முன்னேற்றங்களுக்காகவோ, நான், என் தந்தை பெயரைப் பயன் செய்ய வில்லை. என் தம்பி கல்லூரி சேரும் காலம் வந்த போது, அவன் காட்டிய ஆர்வத்தினால், நாங்கள் அனைவருமாகவே முடிவெடுத்து அவனை கல்லூரியில் படிக்கச் செய்தோம். அவனும் சிறப்பாக படித்துப பட்டம் பெற்றான். என் தமக்கையின் திருமணம், வறுமையில் செம்மை என்ற வகையில் மிகச் சிறப்பாக, பல ஆன்மிக, தேசியச் சான்றோர்கள் ஆசியுடன், 1967ல் நிகழ்ந்தது.
என் தந்தையின் 68வது வயதில், என் அண்ணன் தனது 34வது வயதில், மூன்று குழந்தைகளைத் தவிக்க விட்டு 1977ல் அகால மரணமடைந்த ஒரு பெருந் துன்பம் தவிர, அவர் வாழ்வு பல நிலைகளிலும் நிறைவாகவே இருந்தது.
சுமார் நாற்பத்தியொரு ஆண்டுகள், காந்தி ஆசிரமத்தில் நிர்மாணப் பணிகளில் பங்கு பெற்று, 1971ல் பணி நிறைவு செய்து, 1973 முதல் தஞ்சை யில் என் வீட்டிலும என் தம்பி வீட்டிலும் வசிதது வந்தார். கிராமராஜ்யம், கலை மகள், கல்கி விகடன், சர்வோதயம் போன்ற பல பத்திரிகைகளுக்கு, விஷய தானம் செய்து வந்துள்ளார். அவர் பணி செய்த காலம் முழுவதும், தேசப்பணி, கதர்ப் பணி, ஆன்மிகப் பணி, பாரதி தமிழ்ப் பணி ஆகியவற்றில் சேலம் மாவட்டத்தில் முழு நேரமும் ஈடுபட்டதால், அவரோடு அளவளாவி அவர் பற்றி அறிய அவர எங்களுக்கு நேரம் ஒதுக்கியதில்லை. அதே போல, அவர் எங்க ளோடு வசித்த போது, எங்களுடைய பணி, அதில் எங்கள் வளரச்சி பற்றிய வேகத்தில், அவருடன் அளவளாவ, எங்களாலும் நேரம் ஒதுக்க முடியவில்லை.
அண்மையில், வீட்டில் உள்ள பழையன, தேவையற்றன என்பவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு டயரி கிடைத்தது. 1984 ஜனவரி முதல் 1985 மார்ச்சு முடிய ஆன காலத்தில், தான் பிறந்தது முதலான சுயசரிதைக் குறிப்புக்களை அந்த டயரியில் பதிவு செயதுள்ளார்.
இக் குறிப்புகளில், அவர் பிறப்பு, குடும்பப் பின்னணி, சிறுவனாக தேசியக் கூட்டங்களில் பங்கேற்றது, காந்திய மாதாந்திர பஜனைகளில் பங்கேற்றது, பம்பாயில் தோள் சுமையாக கதர் விற்றது, விளாத்திகுளத்தில் மேஸ்திரியாகப் பணி செய்யும் போதே தேசியப் பணி செய்தது, சுதந்திரப் பிரகடனம் வாசித்தது, விமோசனம் பத்தரிகைக்கு சந்தா சேர்த்தது, காந்தி ஆசிரமப்பணி, சுதந்திரப் போராட்ட வீரர் புள்ளி விவரம் சேகரித்தது, பெங்களூர் அச்சகங்களில் தேசியப் பிரசுரங்கள் அச்சிட்டது, இரு முறை சிறை சென்றது போன்ற பல செய்திகள் மூலம், தேசியத் தொண்டராக அவர் பங்கைப் பலவாறாக அறிய முடிகிறது. 2008, என் தந்தை நூற்றாண்டு. இக் குறிப்பக்களை உலகுக்கு வெளிக் கொணர்வதே அவருக்கு என்
நூற்றாண்டு அஞ்சலி.
கி.கண்ணன்.
Gandhi Ashram A.Krishnan;A Gandhiyan Constructive Worker
Wednesday 7 September 2011
தோற்றுவாய்
30 01 1984 (சர்வோதய தினம்) மாலை 5 15
காந்தி வழி வெல்க! உலகம் வாழ்க!
இன்று சர்வோதய தினம். தியாக சீலர்களுக்கெல்லாம் தலைவரான தியாகேசன் நம் தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகள் அமரத்துவம் அடைந்த தினம். இன்றைக்குச் சரியாக 36 ஆண்டுகளுக்கு முன் 30 1 1948 வெள்ளிக் கிழமை மாலை புதுடெல்லி பிர்லா மாளிகையின் வெளித் தோட்டத்துப் புல் வெளியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரமாகி விட்டதேயென்று அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்த காந்திpயை நமvகரிக்கும் பாவனை யாகக் குனிந்து எழுந்த நாதுராம் கோட்சே என்ற மராட்டிய இளைஞன் - பம்பாயைச் சேர்ந்தவன் - முன் திட்டப்படி - தன்வசம் ஒளித்து வைத்திருந்த ரிவால்வரால் அடிகளின் மார்பை நோக்கி மூன்று முறை ஒரே நிமிடத்தில் சுட்டான். 'ஹே! ராம்!' என்ற கடைசி வார்த்தையுடன் காந்திp தன்னுடன் கைத் தாங்கலாக வந்த பேத்திகளின் கைகளில் சாய்ந்தார். பலர் சேர்ந்து மாளிகையின் உள்ளே அவரைத் தூக்கிச் சென்றார்கள். சரியாக மாலை 5 17 க்கு அவர் உடலை விட்டு ஆவி பிரிந்து விட்டதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது - உலகம் துக்கத்திலாழ்ந்தது- அடிகளின் விருப்பப்படியே அவர் முடிவு ஏற்பட்டது.
குத்தீட்டி ஒரு புறத்தில் குத்த வேண்டும்
கோடாறி ஒரு புறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம் வரத் தடியால் ரணமுண்டாக்கி
நாற்புறமும் பலர் உதைத்து நலியத்திட்ட
அத்தனையும் நான் பொறுத்து அகிம்சை காத்து
அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி
ஒத்து முகம் மலர்ந்து உதட்டில் சிரிப்பினோடும்
உயிர் துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை
என்று 'உலகம் வாழ' வாழ்ந்த காந்தியடிகளைப் பற்றி நாமக்கல் கவிஞர் பாடி யுள்ளார். அப்படியேதான் அண்ணலின் பூத உடல் மறைந்து புகழுடம்பு எய்தியது.
'மிக நல்லவராக வாழ்வது எவ்வளவு பேராபத்து என்று புலனாகிறது' என்று ஒரு உலக மேதையும், '2000 ஆண்டுகளுக்குப் பின்னரும் மனிதன் காட்டு மிராண்டியாகத்தான் இருக்கிறான்' என்று மற்றொரு மேதையும்,
அடிகளாருக்கு நேர்ந்த முடிவைப் பற்றி மனம் நொந்து கூறினார்கள்.
அண்ணலின் முடிவு சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு வழி காட்டி. தன்னைச் சீர்திருத்திக் கொள்ள, நல்ல மனிதனாகச் சிறந்தோங்க, அண்ணலின் 79 ஆண்டு (1869-1948) கால வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
அண்ணல் 'சத்திய சோதனை' என்ற தலைப்பில் தன் சுயசரிதத்தினை எழுதினார். உலக மொழிகள் பலவற்றிலும் இப்புத்தகம் மொழி பெயர்க்கப் பட்டுப் பல பத்துலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. உலக மேதைகள் பலரும் தங்கள் சுய சரிதைகளை எழுதியிருக்கிறார்கள்.ஆனால் உலக மேதை களில் ஒருவரான ராஜாஜியவர்களோ தன் சுயசரிதையை எழுதவில்லை. 'ஏன் தாங்கள் சுயசரிதை எழுதவில்லை?' என்று ராஜாஜியை ஒருவர் கேட்ட போது, பல சுய சரிதைகளைப் படித்துச் சுவைத்த ராஜாஜி - அவர்களுடைய படைப்பு களுக்கெல்லாம் சிறிதும் மதிப்புக் குறைவு எண்ணாமல் - 'சுயசரிதை எழுதும் போது தன் அகங்காரத்திற்கு - Ego விற்கு - சிறிது இடம் கிடைத்து விடத்தான் செய்கிறது' என்று சொல்லி மழுப்பினார்.
உலகனைத்தும் விசேட முக்கியத்துவம் பெற்ற இந்த சர்வோதய தினத்தில் 76வது வயதில் இருந்து கொண்டிருக்கும் அடியேனுக்கு - அவயவங்கள் சற்று ஒத்துழைக்கும் நிலையில் இருக்கும் போதே என் நினைவில் உள்ளவற்றை - அவ்வப்போது சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைக்கலாமே என்ற அவா ஏற்படுகிறது.
'ஊருக்கு நல்லது சொல்வேன்;
எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக்கெல்லாம் முதலாகும்
தெய்வம் துணை செய்ய வேண்டும்'
என்பது மகாகவியின் தெய்வ வாக்கு. அவன் தெய்வாம்சம் பெற்றவன். அவன் சொன்னதனைத்தும் 'ஊருக்கு நல்லதுதான். அவனுக்கு அதில் முழு நம்பிக்கை. ஆனால் சந்தேகப் பிறவியான நான் அப்படிச் சொல்லலாமா? ஆகவே, நான் சொல்வது ஊருக்கு நல்லதோ இல்லையோ 'எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன். நான் கண்டதும் கேட்டதும் அவ்வப்போது மனதில் படுவதை எழுதுவேன். ஆகவே அவை காலத்தால் வரிசைக் கிரமமாக இருக்கும் என்று சொல்வதற் கில்லை.
இதில் ஒவ்வொரு நாளும் எழுதும் தேதியே குறிப்பிட்டுள்ளேன். இந்த தேதிகளுக்கும் இதில் எழுதப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் நடந்த தேதிகளுக்கும் சம் பந்தமில்லை. எப்போதோ நடந்தவற்றை இப்போது நினைவு படுத்தி எழுது கிறேன். முன்னும் பின்னுமாகவும் சில சமயம் வரிசைக் கிரமத்திலும் இருக்கவும் கூடும்.
நான் பிறந்த குடும்பம், நான் வளர்ந்து ஆளானது, தெய்வ பக்தி, உத்தியோகம் வகித்தது, சந்தித்த மகான்கள், பெரிய மனிதர்கள், என் வாழ்வில் நடந்த நல்லது கெட்டது இன்னும் எதை எதையோ எழுதி வருவேன்- 'இதனால் யாருக்கு என்ன பயன்?' என்று பலர் கேட்பது - கூச்சலிடுவது - என்னைச் சற்று அசத்துகிறது.
'பல வேடிக்கை மனிதரைப்' போலே நானும் வீழ்பவன்தான். ஆயினும் நான் தேச விடுதலைக்காகப் பாடுபட்டு, காந்தியடிகளின் ஆகர்ஷண சக்தியால் ஈர்க் கப்பட்டு, போலீசாரின் தடியடிக்கு இலக்காகி, இருமுறை சிறைவாசம் அனுப வித்து, ராஜாஜி தோற்றுவித்த காந்தி ஆசிரமத்தின் காந்திய நிர்மாணப் பணி ஊழியனாக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்ற முறையில் பெருமிதம் கொள்கின்றேன்-என் மக்கள், பேரக் குழந்தைகள் எப்போதாவது வாய்ப்பு ஏற்படின் படித்துப் பார்க்கக் கூடும் என்ற எண்ணத்திலேயே இதை இந்த விசேட (சர்வோதய தினம்) நாளில் எழுதத் தொடங்கி யிருக்கி றேன்.
அண்ணல் காந்தியடிகளின் ஆத்ம சக்தி என்னை வழி நடத்துமாக.
‘காந்தி ஆசிரமம்’ அ.கிருஷ்ணன்

என் பிறப்பும் குடும்பமும்
31 01 1984
திருநெல்வேலி ரயில் நிலையம் அன்று 'திருநெல்வேலி பாலம்' என்ற பெயருடன் விளங்கிற்று. பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அது
திருநெல்வேலி சந்திப்பு ஆயிற்று. அப்பகுதியில் திருநெல்வேலி நகராட்சிக்குட்பட்ட 'சன்னியாசிக் கிராமம்' என்ற தெருவில் இன்றைய 38ம் நம்பர் (அன்றைய 21ம் நம்பர்) வீட்டில்தான் நானும் எனக்குப் பெரியவர்களும் பிறந்தோம்.
என் பெற்றோர்கள் பெயர் - தகப்பனார் வக்கீல் குமாஸ்தா அய்யாவய்யர்; தாயார் பெயர் ராமலக்ஷ்மி அம்மாள். நான் என் பெற்றோர்களுக்கு எட்டாவது குழந்தை. கீலக வருஷம் ஆவணி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்த தாலும் எட்டாவது குழந்தையாதலாலும் எனக்கு கிருஷ்ணன் என்று பெயர். பெயருக்கேற்ற என் நிறம்: கருப்பு. நான் பிறந்த நாளுக்கு மறுநாள் என் தகப்பனாரைப் பெற்ற என் தாத்தா காரையாத்து சுப்பையர் காலமானார். நான் மாலை சந்தியா நேரத்தில் பிறந்தேன். என் SSLC புத்தகத்தில் என் பிறந்த தேதி 15 09 1908 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாங்கப்படி 07 09 1908 என்று என் 50வது வயதில் ஒரு ஜோஸ்யர் நூறாண்டுப் பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொன்னார்.
திருநெல்வேலியையடுத்த 'அருவங்குளம்' என்ற நாரணம்மாள்புரத்தில் என் தகப்பனார் பிறந்தார். அவருக்கு ஒரு அண்ணனும் தம்பியும் தங்கையும் உண்டு. என் பாட்டனார் பெயர் 'காரையாத்து' சுப்பையர். அந்த நாளில் அந்த ஊரில் எல்லா வீடுகளும் மண் சுவர்களால் ஆனது போலும். என் பாட்டனார்தான் வீட்டுக்குச் சுண்ணாம்புக் காரையை உபயோகித்தார் போலும். எனவே அவர் 'காரையாத்து' சுப்பையர். என் பெரியப்பா 'காரையாத்து' செல்லப்பா. என் சித்தப்பா பெயர்: சங்கரன். என் அத்தை பெயர் கிட்டம்மா.
என் தகப்பனார் 1928 ஆகடு மாதம் காலமாகி விட்டார். அப்போது அவருக்கு வயது 56 அல்லது 58 என்று சொல்லிக் கொண்டார்கள். எனக்கு அப்போது வயது 20. என் தகப்பனாருடன் பிறந்தவர்கள் அவருக்குப் பின் பல்லாண்டுகள் வாழ்ந்து 70-75 வயதைத் தாண்டிய பின்தான் இயற்கை எய்தினர்.
எனக்கு மேலே ஏழு பேர்கள் பிறந்தார்கள் என்று சொன்னேன். முதலாவது பொன்னம்மாள், இரண்டாவது மீனாம்பாள்; மூன்றாவது ஹரிஹரசுப்பிர மணியன். நான்காவது ரங்கசாமி; ஐந்தாவது சங்கரன். ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகச் சொன்னார்கள். அவள் பெயர் என்ன, எத்தனை காலம் வாழ்ந்தாள், யார் யாருக்கிடையே பிறந்தாள் என்பது எனக்குத் தெரியாது. நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. நான் எட்டாவது குழந்தையென்று சொன்னேன். எனக்கு அடுத்த மூத்தவள் பெயர் லக்ஷ்மி. என் சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரும் பல்வேறு காலகட்டங்களில் இயற்கை எய்தி விட்டனர்.
நாங்கள் சாமவேதிகள். ஆகவே உபநயனம் செய்து வைக்கும் வரை அவ்வப்போது தலையை மொட்டை அடித்துக் கொள்வது வழக்கம், ஆகவே என் வீட்டில் பெரிய, சின்ன, நடு, கடை மொட்டைகள் என்றே எங்களை மற்ற உறவினர்களும் நண்பர்களும் அழைப்பது வழக்கம்.
(01 02 1984) என் தாயார் 1930 அக்டோபர் மாதம் 30ந் தேதியன்று விளாத்திகுளம் என்ற ஊரில் காலமானாள். எனக்கு அப்போது வயது 22. நான் திருச்செங்கோடு காந்தி ஆசிரம ஊழியனாக 1930 ஏப்ரல் 23ந் தேதி முதல் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் தாயார் இயற்கை எய்திய பின் அவள் முகத்தை மறுநாள் சென்றுதான் பார்க்க முடிந்தது.
ஆனால் என் தகப்பனார் காலமானபோது பம்பாயில் வேலையிலிருந்த நான் நான்கு தினங்கள் முன்னதாகவே தந்தி கிடைத்து வந்து விட்டேன். என் மடியில் நான்கு தினங்கள் உயிருடன் இருந்தார். கடைசி நிமிடம் வரை நினை வுடன் பேசிக் கொண்டிருந்தார். என் தகப்பனார் நீரிழிவு நோயினால் காலில் புண் ஏற்பட்டு மூன்று மாதம் படுக்கையிலிருந்தார். என் சகோதரர் ரங்கசாமி தனக்குக் கிடைத்த CEYLON, RANGOON உத்தியோகங்களைப் புறக்கணித்து திருநெல்வேலி ஜில்லா உத்தியோகத்தையேற்று, தகப்பனாருக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.
(02 02 1984) என் சகோதரர் கட்டி முடித்த வைப்பாறு ரோடு பாலம் அன்றைய ஆளுனரால் (ஆங்கிலேயர்) திறக்கப்படுவது மறுநாள். முதலில் முடித்த வேலையாதலால் அது சமயம் தான் அங்கு இருக்க என் சகோதரர் விரும்பினார். என் தகப்பனாரும் நல்ல நிலையில் தான் இருப்பதாக எண்ணி என் அண்ணாவுக்கு அனுமதி தந்தார். என் சகோதரர் Taxi ல் மாலை 4 மணிக்கு வாசுதேவ நல்லூருக்குப் புறப்பட்டுச் சென்றார். என் தகப்பனாருக்கு 6 மணிக்குக் கடும் ஜுரம் Delirium ஏற்பட்டு இரவு 8 30 மணிக்கு அவர் ஆவி பிரிந்தது. உடனே வேறொரு Taxi ல் சென்று என் அண்ணனை அழைத்து வந்தார்கள். தகப்பனாருக்கு மூன்று மாதங்கள் பக்கத்திலிருந்து பணிவிடை செய்து வந்த என் சகோதரர்க்கு, தகப்பனின் கடைசி மூச்சு நிற்கும்போது தான் பக்கத்தில் இருக்க முடியாது போனது 1973ல் அவர் இறக்கும் வரை மனதை விட்டு அகலவே இல்லை.
(03 02 1984) என் மூத்த சகோதரர் ஹரிஹரசுப்பிரமணியன் 1898-99ஆம் ஆண்டு பிறந்திருக்க வேண்டும். அவரை அடுத்தவர் ரங்கசாமி 1900ம் ஆண்டு பிறந்ததாக அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என் மூத்த சகோதரர் V Form படித்தபோது ஒரு ஆண்டு பரிட்சை சமயம் டைபாய்டு ஜுரத்தாலும் மறு ஆண்டு கைகால்களில் அழுகச் சிறங்கு ஏற்பட்டு தேர்வு எழுத முடியாது போனதாலும் அவருடைய தம்பி 1916ல் SSLC தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று சென்னை கிண்டி எஞ்ஜினியரிங் கல்லூரியில் Upper Subordinate வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டதாலும், என் மூத்த சகோதரர் மேலே படிக்க விரும்பவில்லை. அது சமயம் 1914ம் ஆண்டு ஆரம்பித்த முதலாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அதற்குப் பட்டாளத்திற்கு ஆள் சேர்ப்பு நடந்தது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் 18 வயது நிரம்பியதும் என் மூத்த சகோதரர் பட்டாளத்தில் சேரக் கையெழுத்திட்டு விட்டார். அதை வாபஸ் பெற என் தகப்பனார் எவ்வளவோ முயன்றும் முடிய வில்லை. ஆகவே அவர் (என் சகோதரர்) நெல்லையை விட்டு 1919 ஆகஸ்டு மாதம் சென்னை Army Campக்கு ஓரு வியாழக்கிழமை ரயிலேறினார். அடுத்த வாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை General Hospitalல் இறந்து போனார். அவர் தம்பி ரங்கசாமி, ஆஸ்பத்திரிக்குச் சென்று மிகுந்த
சிரமங்களுக்கிடையே உடலைப்பெற்று, கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்தார். அன்று B & C Mills Strike ஆதலால், வண்டிகளே கிடைக்கவில்லை. புதுத்துணி வாங்கவும் கடைகள் திறக்கவில்லை. என் தகப்பனாரின் தாய் மாமா கணபதி அய்யர் நெல்லையிலிருந்து சென்னை சென்று சஞ்சயனம் முதலியன செய்து திரும்பினார். என் தகப்பனார் அன்று முதல் ஆறு மாதங்கள் பிரமை பிடித்தவராக இருந்தார். பின்னர் தன் நிலைக்கு வந்து இறக்கும் வரை ஒரு வைராக்கியத்துடன் வைதிக சிரத்தையுடன் வாழ்ந்து வந்தார். புத்திர சோகம் பொல்லாதது. என் தாயாரோ 11 ஆண்டுகள் அதே கவலையாக இருந்து மறைந்தார். அது பற்றிப் பின்னர் எழுதுவேன்.
(04 02 1984) T.S. வெங்கடாசலம் அய்யர் என் மூத்த சகோதரியின் கணவர். Pleadership pass செய்து (ப்ளீடராக) வக்கீலாக இருந்தார். அவர் தன் பெற்றோர்களுடன் எங்களுடனேயே கூட்டுக் குடும்பமாக இருந்தார். அவருடைய சகோதரிகள் ஐந்து பேர். அவ்வப்போது வந்து செல்வார்கள். என் அடுத்த சகோதரியின் கணவர் P.P. சுப்பையா அய்யர், திருநெல்வேலி ஜில்லா போர்டு இஞ்சினியர் ஆபீஸ் மேனேஜர். அவரும் என் வீட்டிற்கு எதிர் வீட்டிலேதான் இருந்தார். எனக்கு அடுத்த பெரியவளின் கணவர் G.P. ஹரிஹர அய்யர் என் சொந்த அத்தை பிள்ளைதான்; மேலும் என் பெரியப்பா சித்தப்பா குடும்பங்களென எங்கள் இல்லத்தில் தினமும் 30, 35 பேர்கள் சாப்பாடு நடக்கும். காலையில் நான்கு மணிக்கு அடுப்பு மூட்டினால் இரவு 11 மணிக்குத்தான் அடுப்பு அணைப்பார்கள். எப்போதும் வீடு ஜே ஜே என்று இருக்கும். அந்த நாட்களிலேயே என் தகப்பனார் வக்கீல் குமாஸ்தா தொழிலில் மாதம் ரூ 500 முதல் 700 வரை சம்பாதிப்பார். விலைவாசியும் மிக மலிவு. தரித்திர புத்திக்கு இடமேயில்லை. எப்போதும் பக்ஷணங்களும் விருந்துகளும் இருந்து கொண்டே இருக்கும். அந்நாளில் மனிதன் தன் அன்றாடத் தேவைகளை மிகக் குறைவாகவே வைத்திருந்தான். இன்று போல் Material Comforts என்று தன் அன்றாடத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு எப்படியாவது சம்பாதித்து இவற்றை அனுபவிக்க வேண்டுமென்ற பேராசை இல்லாமல் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தான். அன்று ரூபாய்க்கு 192 தம்பிடி. இன்றோ ரூபாய்க்கு 100 பைசாதான்.
(05 02 1984) இன்று ஐந்தாம் தேதி. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் 1928-39 களில் டாக்டராகப் பணியாற்றிப் பின்னர் திருச்செங்கோடு நகரத்தில் Private Practice நடத்தி வந்து ஓய்வு பெற்றுள்ள Dr. K. ரங்கநாதன் என்னைப் பார்க்க வந்ததால் டயரி எழுதவில்லை.
(06 02 1984) அந்நாட்களில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய பொருட்களை இந்நாட்களில் ரூ 5 முதல் 10 வரை கொடுத்தால்தான் வாங்க முடியும். அரசியல் பொருளாதார தவறான திட்டங்களால் விலைவாசிகள் விஷம் போல் ஏறி வருகின்றன.
நான் பள்ளிப் படிப்பில் அவ்வளவு சூடிகையானவன் இல்லை. ஆகவே 1919-20ல் III Formல் தேர்வு பெறவில்லை. 1920ல் மீண்டும் III Form நாமக்கல் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். 1925 மார்ச் மாதம் SSLC எழுதி னேன். தேறவில்லை. 1926லும் எழுதினேன். தேறவில்லை. Short hand Typewriting கற்று வந்தேன். 1927 July மாதம் என் அண்ணா ரங்கசாமியுடன் பம்பாய்க்கு ரயிலேறினேன். (நாமக்கல் வந்த வரலாறு மற்றும் என் அண்ணன் ரங்கசாமியின் பணி விவரங்கள்: 1920ம் வருடம் Upper Subordinateஇல் நல்ல மதிப் பெண்கள் பெற்றதால் என் சகோதரர் ரங்கசாமிக்கு உடனேயே நாமக்கல்லில் P.W.D.Station Officer ஆக உத்தியோகம் கிடைத்தது. அவருக்குத் திருமணமாகியிருந்தும் மன்னி பெரியவளாகவில்லையாதலால் குடித்தனம் வைக்கவில்லை. என் தாயார் வந்து வீட்டை நடத்தினார். அவருக்குத் துணையாக ஒரு ஆண்டு மட்டும் நான் நாமக்கல்லில் படித்தேன்.
Retrenchmentல் என் அண்ணனுக்கு வேலை போயிற்று. Mopla Rebellion Rehabilitation Schemeல் சில மாதங்களும், பின்னர் Southern Railwayல் சில மாதங்களும், தூத்துக்குடி Port Trustல் இரண்டரை ஆண்டுகளும் B B & C I RAILWAYல் Panjoo என்ற இடத்தில் கடலுக்குள் சுமார் இரண்டு மைல் இரும்புப் பாலம் அமைப்பதிலும் வேலை பார்த்துப் பின்னர் கல்கத்தா ரயில்வே Braith weight கம்பெனியில் வேலைகள் பார்த்து கடைசியாக 1927 கடைசி மாதங்களில் திருநெல்வேலி ஜில்லா போர்டு தலைவர் ஸ்ரீ குமாரஸ்வாமி ரெட்டியார் காலத்தில் Supervisor ஆகச் சேர்ந்து Provinicial Serviceல் A.E. Highways ஆகி 1956ல் ரிடையர் ஆனார். இரண்டு தடவைகள் அவர் மீது Corruption Charges ஏற்பட்டு இரண்டு தடவைகளிலும் he was completely exhonorated. அவர் ஓய்வு பெற்ற பின் தான் அவர் உத்தி யோகத்திலிருந்ததை விட அதிகம் சம்பாதிக்க முடிந்தது. வாய்ப்புக்கள் அவருக்கு அப்படி வந்தமைந்தன. தன் 73 வயது முடிந்த 74வது வயதில் காலமானார்.)
(07 02 1984) என் அடுத்த சகோதரர் சங்கரய்யர் Secondary Grade Training பாஸ் பண்ணி பல ஊர்களில் ஆரம்பப்பள்ளி உபாத்தியாயராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுத் தன் 56 வயதில் 1958 கார்த்திகை மாதம் கடுமையான நீரிழிவு வியாதியால் பீடிக்கப்பட்டு உதகை எமரால்டில் TNEB Chief Accountant ஆகப் பணியாற்றி வந்த தன் முதல் மகன் இடத்துக்குச் சென்ற இரண்டொரு தினங்களில் மாரடைப்பால் காலமானார்.
இப்படியாக என் 3 சகோதரர்களும் இயற்கை எய்தினர். என் சகோதரிகள் லக்ஷ்மி 1931 ஜனவரியிலும் மீனாம்பாள் 1952ம் வருடமும் சுமங்கலிகளாக காலமானார்கள். பெரிய சகோதரி 1955ம் வருடம் கைம்பெண்ணாக காலமானாள். இப்போதைக்கு என் குடும்ப வரலாறு இத்துடன் நிறுத்திக் கொண்டு மேலும் என் சுய புராணம் பாடுகின்றேன்.

தேச பக்தனானேன்
12 02 1984 ஞாயிற்றுக்கிழமை
1908ம் வருடம் செப்டம்பர் ஏழாம் தேதி நான் பிறந்ததாக முன்னரே எழுதியுள்ளேன். 1905ம் வருடம் வெள்ளையராட்சியில் வங்கப் பிரிவினை செய்யப்பட்டது. இதை எதிர்த்து நாடெங்கிலும் சுதேசி இயக்கம் தோன்றி சுதந்திர உணர்ச்சி உத்வேகம் கொண்டது. 1911ஆம் வருடம் தமிழகத்தின் தென்கோடியில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் வெள்ளையரான ஆஷ் துரையை மணியாச்சி ரயில் சந்திப்பில் வாஞ்சிநாதன் என்ற பிராமண இளைஞன் சுட்டுக் கொன்று விட்டுத் தன் இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போனான். நான் பிறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன் தோன்றிய சுதேசி இயக்கமும் நான் பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பின் நடந்த ஆஷ்துரை கொலை நிகழ்ச்சியும் என் பெற்றோர்களின் உள்ளங்களைப் பாதித்திருக்கக் கூடும் என்று நம்ப இடமுள்ளது.
என் தகப்பனார் என் 20வது வயதில் 1928ம் வருடம் காலமானார். என் நினைவு தெரிந்த வரையில் அவர் சேலம் கைத்தறி குண்டஞ்சு வேஷ்டிதான் அணிந்து வந்தார். அஸ்கா சர்க்கரை (லண்டன் ஜீனி)யை உபயோகிக்காமல் சேலம் பழுப்பு குழைவு சீனியைத்தான் உபயோகித்து வந்தார். அந்நாட்களில் இதை வைதீக மனப்பாங்கென்றே எண்ணினேன். ஆனால் பின்னாட்களில் யோசிக்குங்காலை அது அவருள் இருந்த சுதேசிப்பற்று என எண்ணவும் இடமுள்ளது. ஆகவே என் சுதேசிப் பற்று எனக்கு என் பெற்றோர்களின் எண்ணத் தாக்குதல்களாலும் ஏற்பட்டிருக்கக் கூடும்.
1916ம் வருடம் அன்னி பெஸன்ட் அம்மையார் தோற்றுவித்த Indian Home Rule Movement தீவிரமாக நடந்து வந்தது. அப்போது எனக்கு எட்டு வயது. மகாகவி பாரதியாரின் 'வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குது மென்போம்' என்ற பாட்டை உரக்கப் பாடும் ஆற்றல் என்னிடம் இருந்தது. அப்போது பிரபல வக்கீலான சாது கணபதி பந்துலு என்பவர் இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். பொதுக் கூட்டங்களில் என்னை மேஜை மீது ஏற்றி நிறுத்தி பாடச் சொல்வார். நானும் பாடுவேன். கையில் சாக்லேட்டும் நீளமான பெரிய Safety Pin கொண்ட Home Rule Badgeம் எனக்குத் தருவார்கள். இப்படியாகத்தானே தேசப்பற்று என்னை வந்து தொற்றிக் கொண்டது.
பின்னர் காந்திஜி அலி சகோதரர்களுடன் சேலம் விஜயம் செய்தபோது நாமக்கல்லில் வேலை பார்த்து வந்த என் சகோதரர் சென்று பார்த்து வந்து சொன்ன செய்திகளும், ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்தியடிகள் மார்ச் 18ம் தேதி கைதாகி சிறை சென்றதும, அதன் காரணமாக மாதந் தோறும் 18ம் தேதி நடந்த பஜனைகளில் பங்கேற்றதும், தமிழாசிரியர் சொர்ணம் பிள்ளையிடம் அவ்வப்போது அடிகள் வாங்கியதும், 1923 - 24ல் நடந்த சுயராஜ்யக் கட்சி தேர்தல் பிரசாரமும் இது போன்ற பல சந்தர்ப்ப சேர்க்கைகளும் என் தேசபக்தியைக் கிளர்ந்தெழச் செய்தன.
(13 02 1984) தீரர் சத்தியமூர்த்தி, வேலூர் வி.எம்.உபயதுல்லா சாயபு, கோடையிடி குப்புசாமி முதலியார், பண்ருட்டி தெய்வநாயக அய்யா, நெல்லை எஸ்.என். சோமயாஜுலு போன்றோர் அனல் கக்கும் ஆவேசப் பிரசங்கங்கள் ஆற்றுவர். இவைகளைக் கேட்டும், என் தேசப்பற்று வளர்ந்தது. கூட்டங்களுக்குச் சென்று விட்டு வெகு நேரம் சென்று வீட்டுக்கு வருவேன். தன் மூத்த புதல்வனை இழந்து விட்ட தந்தையார் விரக்தி காரணமாக என்னைக் கண்டிப்பதில்லை. அதே விரக்தி காரணமாக என் தாயார் நானும் கை நழுவிப் போய் விடுவேனோ என்ற பயத்தில் என்னை மிகவும் கண்டிப்பார். ஆயினும் என் தேசபக்தி நாளுக்கு நாள் வளர்ந்ததே யன்றிக் குறையவில்லை. என் சகோதரர் ரங்கசாமி பம்பாயில் B B & C I RAILWAYல் இஞ்ஜினியராகத் தற்காலிக வேலையிலிருந்தார். அவருக்கு பர்ஸ்ட் க்ளாசில் சென்று வர குடும்ப பாஸ் உண்டு. நான் படிப்பில் கவனமில்லாது தேசிய உணர்வுடன் அலைவதைக் கண்ட என் பெற்றோர் என் அண்ணனுடன் கலந் தாலோசித்து என்னை பம்பாய்க்கு அனுப்பத் தீர்மானித்தனர். நெல்லையில் பிறந்த நான், திருச்சியைத் தாண்டி வடக்கே எந்த ஊருக்கும் சென்றிராத எனக்கு, பம்பாய் செல்வது - அதுவும் முதல் வகுப்பு பயணம் செய்வது - அந்த வயதில் நழுவ விடக் கூடாத அரிய வாய்ப்பு.
ஏற்கனவே நெல்லையில் சுமார் ஐம்பது சிறுவர்களைக் கொண்ட ஒரு வானர சேனையின் தலைவன் நான். 1927ம் வருடம் காந்தியடிகள் ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் நெல்லைக்கு கதர்ப் பணிக்கு நிதி வசூல் செய்ய யாத்திரை வருவதாக இருந்தது. எங்கள் குழுவின் சார்பில் சுமார் ரூ. 167 வரை வசூல் செய்தேன். ஆனால் அதை காந்தியடிகளிடம் சமர்ப்பிக்கு முன் நான் பம்பாய் சென்று விட நேர்ந்தது. குழுவின் சார்பில, சு. குற்றால லிங்கம் என்ற உறுப்பினர் காந்திஜியிடம் சேர்ப்பித்தார் என்று பம்பாய்க்கு கடிதம் வந்தது. பம்பாய் சென்று ஒரு மாத காலம் நகரைச் சுற்றிப் பார்ப்பதில் கழிந்தது. பின்னர் என் சகோதரர் விருப்பப்படி வேலை தேடியலைந்தேன். வீடு கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையி லமர்ந்தேன்.
பம்பாயில் கதர்ப்பணி...
(19 02 1984) நான் வேலையலமர்ந்த இரண்டொரு வாரங்களில் பம்பாயில் எனக்கொரு நண்பர் கிடைத்தார். அவர் பெயர் பாலகிருஷ்ணன். மன்னார் குடியைச் சேர்ந்தவர். இவர் அன்றைய G.I.P RAILWAYல் (இன்று Central Railway) நிர்வாக ஆபீஸில் வேலை பார்த்து வந்தார். காந்தியக் கருத்துக்கள் அவரை வெகுவாகக் கவர்ந்ததால் ரயில்வே உத்தியோகத்தை ராஜினாமா செய்து ஆமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் ஒரு தொண்டராகச் சேர்ந்தார். அங்குள்ள கட்டு திட்டங்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள முடியாததால் காந்தியடிகளிடம் தெரிவித்து விட்டு மீண்டும் பம்பாய் வந்து ஒரு போட்டோ சாதனங்கள் விற்பனை செய்யும் கம்பெனியில் வேலைக்கமர்ந்தார். அப்போது அவருக்கு திருமணமாகி யிருக்கவில்லை. இவர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீபாதசங்கர் என்பவரும் ஆசிரமத்தில் தொண்டராக இருந்து வந்தார். திரு பாலகிருஷ்ணனுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டு என் பாரதி பாட்டுக்களும் தேசிய உணர்வுகளும் எங்களிருவரிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் இருவரின் மாதச் சம்பளத்தை கல்பாதேவி காதி பண்டாரில் கொண்டு கொடுத்து கதர் ஜவுளி எடுத்து வந்து எங்கள் அலுவலக நேரம் போக மற்ற நேரங்களில் உரக்கக் கூவி தெரு விற்பனை செய்ய ஆரம்பித்தோம். தினமும் ரூ 50 முதல் ரூ 100 வரை விற்பனை செய்ய முடிந்தது. ஒரு ஆண்டில் சுமார் ரூ 25000 பெறுமானத்திற்கு விற்பனை செய்தோம். இந்த விவரம் காந்திஜிக்கு பாலகிருஷ்ணன் எழுதினார். பாபுஜி அவர்களும் எங்கள் பணியைப் பாராட்டிக் கடிதம் எழுதினார்.
(பாலகிருஷ்ணன் 1930 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ராஜாஜி தலைமை யில் நடந்த வேதாரண்ய உப்பு சத்தியாக்ரக பாதயாத்திரையில் பொறுக்கி எடுக்கப்பட்ட தியாக மணிகளான நூறு தொண்டர்களில் ஒருவராகப் பங்கேற்று சிறை சென்றார். இந்த யாத்திரையில் பம்பாயில் நல்ல வேலைகளில் இருந்த ஒன்பது பேர்கள் வேலைகளை ராஜினாமா செய்து விட்டு திரு கே ஏ சுப்பிரமண் யம் என்பவரை தலைவராகக் கொண்டு திருச்சி வந்து கலந்து கொண்டார்கள். ஆகவே அவருக்கு கேப்டன் சுப்பிரமணியம் என்ற பட்டப் பெயரும் ஏற்பட்டது.)
1928 ஆகஸ்டு மாதம் ஏழாந்தேதி என் தகப்பனார் காலமான பின் என் எண்ணமெல்லாம் முழு நேர தேசத் தொண்டனாக ஆக வேண்டுமென்ற உந்துதல் என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. இதையறிந்த விதவையான என் தாயார் ஏற்கனவே தன் முதல் மகனை பத்து ஆண்டுகளுக்கு முன் இழந்து விட்டதால் என்னையும் என் தேசப்பற்று உணர்வுகளையும் தெரிந்து கொண்டு என் பம்பாய் வேலையை விட்டு வீடு வந்து சேரும்படி என் அண்ணனிடம் நச்சரிக்கத் தொடங்கி விட்டாள். 1929 ஏப்ரலில் என் மருமாள் சாலுவின் திருமணம் பம்பாயில் எனக்கு நெருக்கமாகத் தெரிந்த திரு வி.கே.கணபதியுடன் நெல்லையில் நடந்ததற்கு திருநெல்வேலி வந்தவன், மீண்டும் நான் வேலைக்கென்று பம்பாய் செல்லவில்லை. ஆக என் பம்பாய் வாசம் 1927 ஜூலை முதல் 1929 ஏப்ரல் வரை சுமார் 21 மாதங்கள் மட்டுமே.
(20 02 1984) திருநெல்வேலி வந்த சில வாரங்களில் திருநெல்வேலி ஜில்லா போர்டில் Special Supervisor ஆக வேலை பார்த்து வந்த ரங்கசாமி அய்யர் (என் சகோதரர்) இடமே L.F.Maistry ஆக உத்தியோகம் கிடைத்து வேலை பார்த்து வந்தேன். என் சகோதரரும் தேசிய உணர்வு உடையவர். தீபாவளி சமயம் கதர் துணி விற்பனை செய்ய எண்ணி விளாத்திகுளத்திலிருந்து திருநெல்வேலி கதர் வஸ்திராலயம் சென்று சுமார் ரூ 200 க்கு கதர் ஜவுளி எடுத்து வந்தேன்.
அப்போது கதர் வஸ்திராலயத்தில் 'விமோசனம்' என்ற தமிழ் மாதப் பத்திரிகை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததில் ஒரு அணா விலை கொடுத்து வாங்கினேன். அது திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து ராஜாஜியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. அது தனிப்பிரதி விலை ஒரு அணாவா யிருந்தும் வருடச் சந்தா தபால் செலவு உள்பட ரூபாய் ஒன்று. மறுதினமே ரூ 1 மணியார்டர் மூலம் ஒரு அணா மணியார்டர் கமிஷனில் அனுப்பினேன். 3, 4 தினங்களில் பணம் பெற்றுக்கொண்ட ரசீதில் ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற கையெழுத்துடன் வந்தது. அத்துடன் ஒரு கார்டும் அவர் எழுதியிருந்தார். 'தங்கள் எம்.ஓ. கிடைத்தது. வந்தனம். தங்களை சந்தாதாரராகப் பதிவு செய்து கொண்டோம். நீங்கள் முயன்றால் மேலும் சில சந்தாதாரர்களைச் சேர்த்துத் தர முடியுமென்று எண்ணுகிறேன். தங்கள் ஆதரவு தாருங்கள்.' என எழுதியிருந்தார்.
விளாத்திகுளம் சிறிய ஊர். அரசு அதிகாரிகள் அதிக பட்சம் எல்லாமாகச் சேர்ந்து 20 பேர்களுக்கு மேற்படாது. என் சகோதரர் சூப்பர்வைசர். ஆகவே நான் யாரைக் கேட்டாலும் ஒரு ரூபாய் தந்து விடுவார்கள். ஐந்து ரூபாய் சேர்ந்ததும் ஒரு அணா கமிஷன் செலவு செய்து எம்.ஓ. அனுப்பி ஒரு அரையணா கார்டில் ஐந்து விலாசங்களையும் எழுதி அனுப்பி வைப்பேன்.
இப்படியாக ஒரு மாதத்திற்குள் சுமார் 75 ரூபாய் வரை சேர்த்து அனுப்பி னேன். இது ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் உள்ளத்தில் என்னைப் பற்றிய நல்ல எண் ணத்தை உண்டாக்கியது. ஏற்கனவே என் உள்ளத்தில் தேசிய உணர்வு கொப்பளித்துக் கொண்டிருந்ததால் ரா. கிருஷ்ணமூர்த்தியுடன் கடிதத் தொடர்பு ஏற்பட்டது.
பம்பாயில் கதர் விற்பன செய்து வந்த போதே திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். என் தகப்பனார் இறந்தபின் நான் மீண்டும் பம்பாய் சென்றபின் ஸ்ரீபாதசங்கரின் பரிச்சயம் பாலகிருஷ்ணன் மூலம் ஏற்பட்டது. அப்போதே அவருடன் தமிழகத்தில் கிராம சேவை செய்ய என் வேலையை ராஜினாமா செய்யத் தீர்மானித்து என் சகோதரருக்கு எழுதினேன். என் தாயார் இதையறிந்து மிகவும் வருத்தப்பட்டு ஊருக்கு வந்து விடும்படி எழுதினார். இதே சமயம் எனக்கு ஒரு பெரிய வேனல் கட்டி ஏற்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டியதாயிற்று. அதன் காரணமாக ஸ்ரீபாதசங்கருடன் தமிழ் நாடு வரமுடியாது போயிற்று. ஆயினும் அப்போதே காந்தி ஆசிரமத்தில் முழுநேர ஊழியனாகச் சேர்ந்து பணி செய்ய விரும்புவதாகவும் என்னை ஏற்றுக் கொள்ளும் படியாகவும் ராஜாஜிக்கு எழுதியிருந்தேன்.
(22 02 1984) ராஜாஜியிடமிருந்து உடனே பதில் வந்திருந்தது. அதில் டாடா கிருஷ்ணய்யரைப் பார்க்கும்படி எழுதியிருந்தார். அக்கடிதம் வந்த பிற்பகலில் என் அலுவலகத்திற்கு தொலைபேசியில் டாடா கிருஷ்ணய்யர் பேசினார். தன் விலாசத்தையும் அவர் இருக்கும் வீட்டிற்கு பாதை வழி யாவற்றையும் விவரமாகக் கூறி அன்று மாலை 6 மணிக்கே வருமாறு கூறினார். இந்த டாடா கிருஷ்ணய்யர் என்பவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். டாடா கம்பெனியில் முக்கியமான பதவி வகிப்பவர். பம்பாய் மாநில காங்கிரஸ் கமிட்டி பொக்கிஷதார். கதர் பக்தர். நான் அவரை முன்னதாகப் பார்த்த நினைவு இல்லை. அன்று மாலை அவர் வீட்டுக்குச் சென்று தட்டிய கதவைத் திறந்தவர், அவரே என்னைப் பார்த்ததும், 'அட! நீதானா? கே.ஏ. சுப்பிரமணியத்துடன் மாதுங்காவில் கதர் விற்பனை செய்கிறாயே! நான் உன்னைப் பார்த்திருக்கிறேனே!' என்று சொல்லி ராஜாஜியிடமிருந்து அவருக்கு வந்த கடிதத்தை என்னிடம் தந்தார். அதில் இந்த வாலிபர் இங்கு ஆசிரமத்தில் சேர விரும்பிக் கடிதம் எழுதியிருக்கிறார். அவரை நேரில் சந்தித்து இங்குள்ள கஷ்ட நஷ்டங்களைத் தெரிவித்து அவர் விருப்பம் தெரிந்து எழுதுங்கள். ஒரு வாலிபரை நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள அவருக்கு வேண்டிய ஆலோசனைகள் கூறவும்.' என எழுதியிருந்தார். நான் ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில் 'நான் என் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை யென்றும் என் சகோதரிகள், சகோதரர்கள் யாவரும் திருமணமாகி அவரவர் இடங்களில் சௌகரியமாக இருக்கிறார்கள் என்றும், என் தகப்பனார் காலமாகி விட்டதால் என் விதவைத் தாயார் என் பெரிய சகோதரருடன் இருந்து வருவ தாகவும், என்னால் யாருக்கும் பாரமில்லையென்றும் நான் பம்பாயில் வகிக்கும் உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டு ஆசிரமத்தில் முழு நேர ஊழி யனாகச் சேர விரும்புவதாகவும்” எழுதியிருந்தேன். டாடா கிருஷ்ணய்யர் என் குடும்ப விவரங்கள் எல்லாம் கேட்டறிந்து நான் பம்பாயில் உத்தியோகம், அலு வலக நேரம் போக மற்ற நேரங்களில் கதர் தெரு விற்பனை செய்து வருவதையும், மற்றும் என் ஆர்வங்களையும் நன்கு துருவித் துருவி கேட்டறிந்தார்.
(23 02 1984) பின்னர் அவர் கூறினார்: 'நீ ஒரு வேலையில் அமர்ந்திருக்கிறாய். அது, உன் வாழ்க்கையைப் பொருளாதார நிலையில் வேறெவ ரையும் எதிர்பாராமல் உன் காலிலேயே நிற்கச் செய்கிறது. உன் தேசிய உணர்வை பிரதிபலிக்க அலுவலக நேரம் போக பாக்கி நேரங்களில் கதர் ஜவுளியைத் தோளில் சுமந்து சென்று பம்பாய் வீதிகளில் உரக்கக் கூவியும், 4,5 மாடிக் கட்டிடங்களில் ஏறி இறங்கியும் உற்சாகமாகத் தெரு விற்பனை செய்து வருகிறாய். இது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. It is a Volunatry Service and a hobby of your own choice. உன்னை விட வயதில் பல வருடங்கள் பெரியவன் என்ற முறையில் கூறுகிறேன். ஏன் நீ ஒரு ஸ்தாபனத்தில் முழு நேர ஊழியனாக அதன் கட்டு திட்டங்களுக்காட்பட்டு இருக்க எண்ணுகிறாய். Why should you loose your individuality and submerge yourself in the institution's adminitrative restrictions. See your friend Balakrishnan, - a nice young man - He resigned his job in the Railway and joined Gandhiji's Sabarmati Ashram with all enthusiasm of a young patriot, But he could not withstand the strain of the daily routine there and the work expected of him and so he has come away. உன் உற்சாகத்தில் தண்ணீர் ஊற்றி அணைப்பதாக நினைக்காதே. I can recommend you to Rajaji, or I can put you under Shri Javiandas Daulat Ram. He wants a Personal Secretary. But he is a very short tempered man. That is why I hesitate. என்று பல சொல்லி 'இன்னும் ஓரிரு வாரங்களில் யோசித்து முடிவு சொல்லு' என்று கூறி இரவு அவருடன் சாப்பிட்டபின் என்னை அனுப்பி வைத்தார். இது நடந்தது 1929 ஜனவரி மாதத்தில்.
(05 03 1984) நான் பம்பாயில் இருந்த போது மிஸ்டர். எச். டி. ராஜா என்பவருடைய நட்பும் ஏற்பட்டது இவர் BB&CI Lower Chawls என்ற பகுதியில் வசித்து வந்தார். ஏதோ காரியாலயத்தில் வேலை பார்த்து வந்தார்; தேசியவாதி. திரு பாலகிருஷ்ணன் மூலம் எங்களுக்குள் அறிமுகமாயிற்று, The Young Liberator என்ற ஆங்கில மாதப் பத்திரிகை வெளியிட்டு வந்தார். பல் வேறு தினசரி, வார மாத இதழ்களிருந்து யங் லிபரேட்டரில் வெளியிடத் தகுதி ஆனவற்றைச் சேகரிப்பது, ப்ரூஃப் பார்ப்பது, டெஸ்பாட்ச் செய்வது போன்ற காரியங்களில் அவருக்கு உதவியாக இருந்தேன். இது 1928ம் வருடம் சில மாதங்கள்தான். 1929ல் பம்பாயை விட்டு திருநெல்வேலி வந்து விட்டேன். எங்கள் தொடர்பு நின்று விட்டது. இந்த எச்.டி.ராஜா தான் பின் நாட்களில் வான்கார்ட் இன்சூ ரன்ஸ் கம்பெனியின் அதிபராக மிகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து மறைந்தார். நான் காந்தி ஆசிரம ஊழியனாகச் சேர்ந்து பணியாற்றி வந்ததனால் அவருடைய தொடர்புக்குத் தேவையில்லாமல் போய் விட்டது.
திரு ஸ்ரீபாதசங்கருடன் தமிழ்நாட்டின் கிராமங்களில் பணி செய்ய என் பம்பாய் வேலையை ராஜினாமா செய்ய எண்ணி என் சகோதரருக்கு எழுதினேன். என் தாயார் (விதவையாகி விட்டவர்) நான் தேசிய இயக்கத்தில் சேர்ந்து விடுவதை விரும்பாததால் என் வேலையை ராஜினாமா செய்து நெல்லை திரும்பி விடுமாறு வற்புறுத்தினார். இந்த சமயத்தில் எனக்கு ஒரு abcess ஏற்பட்டு ஆபரேஷன் செய்து ஒரு வாரத்திற்கு மேல் படுக்கையிலிருக்க வேண்டியதாயிற்று. ஸ்ரீபாதசங்கரும் தென்னகம் சென்று விட்டார. ஆதலின் அந்த வாய்ப்பும் கை நழுவிப்போயிற்று. Simon Commission Boycott, Gujarat Flood Relief Fund Collection, Khadi Street Hawking போன்றவை என் தேச பக்தியை மேலும் மேலும் கிளர்ந்தெழச் செய்தன. பம்பாயில் வேலை பார்த்து வந்த என் ஊர்க்காரர்கள் ஊருக்குச் செல்லும் சமயம், என் தேச சேவை வேலைகளில் நான் தீவிரமாக இறங்கியிருப்பதையும் கூடிய சீக்கிரம் வேலையை விட்டு விட்டு அதிலேயே முழு நேரமும் மூழ்கி விடுவேனென்றும் என் தாயாரிடம் சொன்னார்கள். ஆகவே என் தாயார் நான் நெல்லைக்கே வந்து விட வேண்டுமென்று என் சகோதரர் மூலம் வற்புறுத்த ஆரம்பித்து விட்டார். அதற்கேற்ப நான் நெல்லை வர வேண்டிய ஒரு சூழ்நிலையும் உருவாயிற்று.
(06 03 1984) தபால் தந்தி இலாகாவில் பொறியியல் பிரிவு கணக்குத் துறையில் வி. கே. கணபதி பீ.ஏ. வேலை பார்த்து வந்தார். இவர் நெல்லையில் என் சகோதரர் சங்கரனின் பள்ளித்தோழர். இவர் சகோதரர் வீ. கே. சங்கரன் என் பள்ளித்தோழர். எங்கள் குடும்பங்கள் இரண்டும் பரஸ்பரம் பரிச்சய முள்ளவர்கள். என் சகோதரி மீனாம்பாளின் புதல்வி சௌ. சாலு எனகிற விசாலாக்ஷ¤யை வி. கே. கணபதிக்கு பாணிக்கிரஹணம் செய்து கொடுப்பதாய்த் தீர்மானமாயிற்று. இந்த திருமணம் 1929 ஏப்ரல் மாதம் நெல்லை சிக்கல் நரசய்யன் கிராமத்தில் நடந்தது. இதற்கு நான் வர வேண்டியதாயிற்று என் தாயாரின் வற்புறுத்தலை என் சகோதரர் ரங்கசாமி தெரிவித்தபடி பம்பாய் வேலையை ராஜினாமா செய்து விட்டு நெல்லை வந்தேன். ஆக, 1927 ஜூலை மாதம் பம்பாய் சென்ற நான்¢ 1929 எப்ரலில் பம்பாயை விட்டு நெல்லை வந்து சேர்ந்தேன். ஆகவே என் பம்பாய் வாழ்க்கை 21 மாதங்கள் மட்டுமே இருந்தது. நான் பம்பாயில் செய்து வந்த தேசியப் பணிகள் எனக்கு மிகுந்த மனத் திருப்தியை அளித்தது. ஆனல் நெல்லையில் உடனடியாக அவற்றைச் செய்யும் சூழ்நிலை ஏற்படவில்லை. இரண்டு மாதங்கள் சும்மா இருந்த என் தாயார் நான் ஏதாவது வேலையில் சேர வேண்டுமென என் அண்ணனை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். என் சகோதரர் ரங்கசாமி ஜில்லா போர்டு சூப்பர்வைசராகப் பதவி பெற்று விளாத்திகுளத்தில் கட்டப்பட்ட ஆற்று தாம்போதிக்கு மேற்பார்வை யாளராக இருந்தார். ஜில்லா போர்டு இஞ்சினியராக இருந்த திரு என். கிருஷ்ண பிள்ளையின் உத்தரவுப்படி நான் 1929 ஜூன் மாதம் என் சகோதரர் கீழ் L.F.Maistry ஆக நியமிக்கப்பட்டேன். பம்பாயில் ரூ 110 சம்பளம் பெற்று வந்த நான் இங்கு ரூ 30 சம்பளத்தில் உத்தியோகத்தில் அமர்ந்தேன்.
விளாத்திகுளம் சிறிய ஊர். அரசு அதிகாரிகள் 10, 15 பேர்கள் மட்டுமே. என் சகோதரர் ரங்கசாமி இவர்களில் தோரணையுள்ள உத்தியோகஸ்தர். அவருக்கு நல்ல மதிப்பு. அவருடைய இளைய சகோதரர் நான். பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல எனக்கும் அந்த ஊரில் ஓரளவு மதிப்பு கிடைத்தது. Causeway கட்டுவதில் சுமார் 200 கூலியாட்கள் பணியாற்றினர். அவர்களுக்கெல்லாம் என் சகோதரர் எஜமான். என்னைப் போல வேறு மேஸ்திரிகளும் இருந்தார்கள். அவர்களை மேஸ்திரி சாமி, மேஸ்திரி ஐயா என்றே அழைப்பார்கள். நானோ 'எஜமானின் தம்பி. எனவே, என்னை 'சின்ன எஜமான்' என்று அழைப்பார்கள். வேலையாட்கள் என்னிடம் அதிக அன்பு காட்டினார்கள். நானும் மற்ற சக மேஸ்திரிகளைப் போலில்லாமல் வேலையாட்களுடன் நெருங்கிப் பழகி அவர்கள் அன்பைப் பெற்றேன்.
அவர்களில் சிலர் குடித்திருப்பார்கள். அவர்களின் குடிபோதை தௌந்தபின், அவர்களை ஒவ்வொருவராகத் தனியே சந்தித்துக் குடியினால் உடலுக்கும், உள்ளத்திற்கும், குடும்பத்திற்கும் ஏற்படும் கஷ்டங்களை எடுத்துக் கூறுவேன். ஓரிருவர் மட்டுமே திருந்தினர். குடிக்காத பல பேருக்கு என் மீது ஒரு பிரியம் ஏற்பட்டு ஓரிரண்டு மைல் தூரங்களிலுள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று என்னைப் பேசச் சொல்லி ஊர்க்கூட்டம் கூட்டுவார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் 4, 5 பேர்கள் என்னைக் கூடவே வந்து வீட்டில் விட்டுச் செல்வார்கள். இப்படியாக 'சின்ன எஜமான்' செல்வாக்கு வேலையாட்களிடம் பரவிற்று.
(08 03 1984) ஒரு தினம் ஐந்து மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊருக்கு என்னை ஒரு கூடு இல்லாத மொட்டை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றார்கள். இரவு சாப்பாட்டிற்கு அந்த ஊர் கோவில் குருக்கள் வீட்டில் ஏற்பாடு செய்தார்கள். 'நீங்க பச்சரிசி பிராமணாளா? புழுங்கரிசி பிராமணாளா?' எனக் கேட்டார்கள். முதலில் எனக்குப் புரியவில்லை. நல்ல வேளையாக குருக்கள் 'நீங்க வீட்டில் பச்சரிசி சாதம்தானே சாப்பிடுவீர்கள் என்று கேட்டு, “ஆம்” என்ற விடை பெற்று, பச்சரிசி வாங்கி வந்து சமையல் செய்து பரிமாறினார். இரவு கூட்டம் முடிந்து அந்த கிராமத்திலேயே தங்கி காலையில் மொட்டை வண்டியில் வீடு வந்து சேரந்தேன். இப்படியாக என் தேசிய உணர்வும் பணிகளும் தொடர்ந்தன.
பம்பாயில் கதர் விற்பனை செய்தது போல் தீபாவளி சமயமாவது ஒரு வார காலம் கதர் விற்பனை செய்யலாம் என என் சகோதரரையும் கலந்தா லோசித்து அவரிடம் ரூ 200 பெற்றுக் கொண்டு திருநெல்வேலி டவுன் அகில பாரத சர்க்கா சங்க கதர் வஸ்திராலயத்திற்குச் சென்று கதர் ஜவுளி வாங்கி வந்து விளாத்தி குளத்தில் விற்பனை செய்தேன். தினசரி ரூ ஒன்றுக்கும் குறைவான கூலி வாங்கும் வேலையாட்கள் கூட 2, 4 அணா மதிப்புள்ள தேசியக் கொடிகள் வாங்கினர். அந்த ஊரிலிருந்த அரசு உத்தியோகஸ்தர்கள் கூட ரூ 10, 15க்குக் கதர் வாங்கி ஆதரவு தந்தார்கள். மீண்டும் ஒருமுறை திருநெல்வேலி சென்று கதர் ஜவுளி வாங்கி வந்து விற்பனை செய்தேன்.
முதல் தடவை சென்ற போது 'விமோசனம்' என்ற தமிழ் மாதப் பத்திரிகை ஒரு அணா விலை கொடுத்து வாங்கினேன். இது ராஜாஜி அவர்களை ஆசிரி யராகக் கொண்டு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து மதுவிலக்குப் பிரச்சாரச் செய்திகள் கட்டுரைகள் கதைகளைத் தாங்கி வெளி வந்தது. தனிப் பிரதி விலை ஒரு அணா. வருடச் சந்தா தபாலில் பெற ரூபாய் ஒன்று. அதற்கு ரூபாய் ஒன்று “A.Krishnan, L.F.Maistry, Vilathikulam P.O.” என்று என் விலாசம் எழுதி எம்.ஓ. மூலம் அனுப்பினேன். அப்போது ரூபாய் ஐந்து வரை மணி ஆர்டர் கமி ஷன் ஒரு அணா மட்டுமே, அதாவது இன்றைய ஆறு புதுக் காசுகளுக்குச் சமம்.
(22 04 1984) (நீண்ட நாட்கள் இடைவெளிக்குப்பின் இன்று மீண்டும் எழுதுகிறேன். ஏதேதோ காரணங்கள், எழுதவில்லை.)
காந்தி ஆசிரமத்தில் என் மணி ஆர்டர் கிடைத்து ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற கையெழுத்துடன் மணி ஆர்டர் ரசீது வந்தது. அத்துடன் ஓரு கார்டும் வந்தது. 'தங்கள் எம்.ஓ. கிடைத்தது. வந்தனம். தங்களை சந்தாதாரராகப் பதிவு செய்து கொண்டோம். நீங்கள் முயன்றால் மேலும் சில சந்தாதாரர்களைச் சேர்த்துத் தர முடியுமென்று எண்ணுகிறேன். தங்கள் ஆதரவு தாருங்கள்.' என எழுதி அதிலும் ஆர். கிருஷ்ணமூர்த்திதான் கையெழுத்து இட்டிருந்தார். நானும் ஒரு வார காலத்திற்குள் சுமார் எழுபத்தைந்து சந்தாக்கள் சேர்த்து தினந்தோறும் 5,10,15 ரூபாய்களென மணி ஆர்டர் செய்து வந்தேன். ஒவ்வொரு எம்.ஓ. கிடைத்ததும் என்னை உற்சாகப்படுத்தி திரு ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களிட மிருந்து கார்டு வரும். 21 வயதே ஆன என் இளம் உள்ளத்தில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. 1930 ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் ஒரு புக்போஸ்டு காந்தி ஆசிரமத்திலிருந்து என் பெயருக்கு வந்தது. 1930 ஜனவரி 26ம் தேதி காலை 'சுதந்திரப்பிரகடனம்' பொதுக்கூட்டத்தில் படிக்கப்பட வேண்டுமென்றும் ஒரு கார்டின் விலை காலணா என்றும் புக்போஸ்டில் 30 சுதந்திரப்பிரகடன அட்டைகள் அனுப்பி இருப்பதாகவும், ஏழு அணா மட்டும் வசூல் செய்து எம்.ஓ.வில் அனுப்பும்படியாகவும், இரண்டு பிரதிகளை நான் வைத்துக்கொண்டு பிரகடன வாசகத்தை சிறு சிறு கூட்டங்களைக் கூட்டி அங்கு மக்களிடையே படிக்க வேண்டுமென்றும், ராகி அவர்கள் எழுதியிருந்தார்.
(30 04 1984) 'சுதந்திரப்பிரகடன' அட்டையை காலணாவுக்கு விற்பதாவது என்று எண்ணினேன். அதன் விளைவு முப்பது கார்டுகளையும் முப்பது பேர்களிடம் கொடுத்து ஒவ்வொரு ரூபாய் பெற்று ரூபாய் முப்பதும் ரா.கி. அவர்களுக்கு எம்.ஓ. மூலம் அனுப்பினேன் இதில் ஒரு விசேடம் என்னவென்றால் அந்த ஊர் சப் போஸ்ட் மாஸ்டர், எக்ஸைஸ் இனஸ்பெக்டர், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், வக்கீல், ஆப்காரி காண்ட்ராக்டர், நான் வேலை பார்த்து வந்த காஸ்வே காண்ட்ராக்டர், அதன் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்த என் சகோதரர், என்னைப் போன்ற மேஸ்திரிகள், சில ஜவுளிக் கடை, மளிகைக்கடை முதலாளிகள், எல்லோரும் ஒரு ரூபாய் கொடுத்து 'சுதந்திரப் பிரகடனம்' பெற் றார்கள். இவர்கள் எல்லோரும் மற்றும் உள்ளூர்ப் பொது ஜனங்களும் சுமார் 200 பேர் கூடி 'சுதந்திரப்பிரகடனம்' வாசித்தார்கள். உள்ளூர் சப் இன்ஸ்பெக்டரும் (எங்கள் நண்பர்) அங்கு ஆஜராகியிருந்தார். சர்க்கார் அலுவலர்களும் சேர்ந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தந்தார்கள். 54 ஆண்டுகளுக்குப் பின்பு இதை எண்ணிப் பார்க்கும்போது, மக்களுக்கு எவ்வளவு சுதந்திர தாகம் இருந்தது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. அதை விட ஆச்சரியமான விஷயம்: இதிலிருந்து 17வது ஆண்டுகளுக்குள்ளாகவே நாடு விடுதலை பெற்றதும் அதையடுத்த 2வது ஆண்டுக்குள்ளாகவே, நம் அரசியல் சாஸனத்தை வகுத்து சரியாக இருபது ஆண்டுகளில் அதே ஜனவரி 26ம் நாள் 1950ம் ஆண்டு, பரிபூரண சுதந்திர நாடாக உலகுக்குப் பிரகடனப்படுத்தி விட்டோம். இவ்வளவு குறுகிய காலத்தில் அகிம்சை வழியில் உலகில் எந்த நாடும் இதற்கு முன் குடியரசு ஆனதில்லை.
(07 09 1984) (இன்று என் 77வது பிறந்த நாள். 76 வயது முடிந்து 77வது வயது இன்று முதல் ஆரம்பமாகிறது. நேற்று மாலை பவானி நகர் வீட்டிற்கு வந்தேன். சென்ற நாலு மாதங்களுக்கு மேலாக இதைத் தொடர்ந்து எழுத முடியவில்லை. நியாயமான காரணம் எதையும் சொல்ல முடியாது.)
26 01 1930 'சுதந்திரப்பிரகடனம்' வாசித்த நிகழ்ச்சிகளின் அறிக்கையை திரு ரா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு காந்தி ஆசிரமத்திற்கு எழுதினேன். அவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து எனக்குக் கடிதம் எழுதினார். 1929 அக்டோபர் முதல் 1930 ஏப்ரல் 15ந் தேதி வரை சுமார் 15 கடிதங்களாவது ரா.கி. எனக்கு எழுதியிருப்பார். அவைகளின் மதிப்பை அன்று சரியான முறையில் மதிப்பிட முடியாத நான் அவைகளைப் பாதுகாத்து வைக்கவில்லை. இன்று அதைப் பெரிய நஷ்டமாக உணர்கிறேன்.
டொமினியன் அந்தஸ்தை ஏற்கத் தயாராயிருந்த, 01 01 1930 பிறந்த முன்னாள் இரவு 12 மணி வரை இறுதி எச்சரிக்கை விட்டிருந்த நம் தலைவர்கள், காத்திருந்த பின், 'இனி பரிபூர்ண சுதந்திரம்தான் எங்கள் லட்சியம். அதற்குக் குறைவான எந்த அமைப்பையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.' என தீர்க்கமாக அறிவித்துவிட்டார்கள். பிரிட்டிஷ் அரசு தன் அதிகார பலத்தைக் காட்டத் தொடங்கியது. அண்ணல் காந்தியடிகள் 'உப்பு சட்டத்'தை எதிர்ப்பது என்று தீர்மானித்து 'தண்டி' யாத்திரை செய்வதென்று முடிவு செய்து அரசுக்கு அறிவித்து விட்டார். நாட்டில் தேச பக்தர்களிடையே தேசிய உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டது. 'சுயராஜ்யம் பெறாமல், இந்த சபர்மதி சுயராஜ்ய ஆசிரமத்திற்குத் திரும்ப மாட்டேன் ' என்ற சங்கல்பத்துடன், காந்திஜி நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன், 'தண்டி' யாத்திரை புறப்பட்டு விட்டார். தேச முழுவதும் ஆங்காங்கே தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக உப்பு காய்ச்சி சிறை செல்ல முற்பட்டு விட்டனர்.
தமிழகத்தில் வேதாரணியம் கடற்கரையில் உப்பு காய்ச்சுவதென்று ராஜாஜி தீர்மானித்து, நூறு தொண்டர்களைத் தேர்ந் தெடுத்து, திருச்சியிலிருந்து வேதாரணியத்திற்குப் பாத யாத்திரையாகப் பிரசாரம் செய்து கொண்டே போவதென்றும், 1930 ஏப்ரல் 14 ந்தேதி தமிழ்ப் புது வருட தினத்தன்று புறப்பட்டு கிராமம் கிராமமாக காலையிலும் மாலையிலும் பிரசாரம் செய்து கொண்டே சென்று, 30ந் தேதி அதிகாலையில் வேதாரணியம் கடற்கரையில் உப்பு எடுப்பதென்றும் முடிவு செய்து, பத்திரிகைகளில் செய்தி கள் வெளிவந்தன. விளாத்திகுளத்தில் ஜில்லா போர்டில் வேலை பார்த்து வந்த நான், அந்த நூறு பேர்களில் ஒருவனாகச் சேரத் தீவிர எண்ணங் கொண்டேன். என் அண்ணனுடன் கலந்தாலோசித்து அவர் சம்மதம் பெற்று, ஜில்லா போர்டு வேலையை விட்டு விடத் தீர்மானித்தேன்.
பம்பாயில் எவருடன் சேர்ந்து கதர் தெரு விற்பனை செய்தேனோ அந்த பாலகிருஷ்ணனும், கே.ஏ.சுப்ரமண்யன், மற்றும் எனக்குத் தெரிந்த பம்பாய் நண்பர்களும, வேதாரணியம் கோஷ்டியில் இடம் பெற்றிருந்ததைப் பத்திரிகை களில் படித்துப் பார்த்த என் மனம் நிலை கொள்ளாமல் துடித்தது. நான் என் வேலையை ராஜினாமா செய்யத் தீர்மானித்து என்னையும் வேதாரணியம் கோஷ்டியில் ஒரு தொண்டனாகச் சேர்த்து விடும்படி ரா.கிக்கு எழுதினேன். அவரும் என் வயது, சர்க்கார் வேலையை (Quasi Governmental Job) விடுவது, காந்தி ஆசிரமத்திலுள்ள மாறுதலான வாழ்க்கை முறைகள், போன்ற பலவற்றை எழுதி என்னை அதைரியப்படுத்தப் பார்த்தார்.
ஆயினும் நான் மன உறுதியுடன் இருப்பதையறிந்து, 100 தொண்டர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த கோஷ்டியில் என்னைச் சேர்த்துக் கொள்ளலாமென்றும், ஆசிரமத்தில் பொதுச் சமையற் கூடமில்லை யென்றும், அவரவர்கள் தானே சமையல் செய்து கொள்ள வேண்டுமென்றும், அதற்கான பாத்திரம் பண்டங்கள் உடன் கொண்டு வர வேண்டுமென்றும், எந்த நேரமும் அரசு ஆசிரமத்தை மூடி, சீல் வைக்க நேரிடலாமென்றும், அப்போது அவரவர் உடைமைகளையெல்லாம் இழந்து விட வேண்டியிருக்குமென்றும், உயிரையும் திரணமாகக் கருதும் மனம் பெற்றவர்கள் மட்டுமே இந்தத் தியாகத்திற்கு முன் வர வேண்டுமென்றும், என் போன்ற வயதுக்காரர்கள் எதிர் காலத்தை எண்ணிப் பார்த்து, முடிவு செய்து, வீட்டில் பெரியவர்களின் முழுச் சம்மதத்துடன் தெரிவித்தால், பின்னர் தன் கடிதம் பார்த்து ஆசிரமம் வரலா மென்றும், பலவாறாக எழுதினார். நான் மிகுந்த மன உறுதியுடன் இருந்தேன்.
(10 09 1984) நான் என் எட்டாவது வயதிலிருந்தே தேசிய உணர்வு பெற்றிருப்பதுவும், அவ்வப்போது நடக்கும் தேசியப் பொதுக் கூட்டங்களுக்குச் சென்று வீட்டுக்கு வெகு நேரங் கழித்து வந்தும், என் தகப்பனார் என்னைக் கண்டிக்காமல் விட்டதுவும், 1921 ஒத்துழையாமை இயக்க காலத்தில் காந்தி யடிகள் கைதான 18ந் தேதியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 18ந் தேதியன்று நடக்கும் தேசிய பஜனை தெருவலம் வருவதில் கலந்து கொள்வதும், ஸ்வராஜ்ய கட்சி தேர்தலில் நின்ற பொது பிரச்சாரம் செய்ததிலும் என் தேசிய உணர்வு அதிகரித்தே வந்தது. என் தகப்பனார் என்னைக் கண்டிக்காததற்கு ஒரு காரணமும் உண்டு. என் மூத்த சகோதரர் ஹரிஹரசுப்ரமணியன் முதல் உலக மகா யுத்தப்படையில் சேர ஒப்பமிட்டு, எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ஒப்பந்தத்தை மாற்ற முடியாததால் அவர் பட்டாளத்தில் சேர 1919 ஆகஸ்டு மாதம் திருநெல்வேலியிலிருந்து சென்னை பயிற்சி முகாமுக்குச் சென்ற ஒரே வாரத்தில் Double Pneumoniaவினால் பீடிக்கப்பட்டு சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் காலமாகி விட்டார். அந்த அதிர்ச்சி என் தகப்பனாரை வெகுவாக பாதித்து விட்டது. ஆனால் என் தாயாரோ மிகுந்த துக்கப்பட்டவராதலின், நானும் தேசிய இயக்கத்தில் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறி விடுவேனோ என்ற ஐயத்தில் என்னை மிகவும் கண்டிப்பார்.
ஆயினும் என் தேசிய உணர்வு வளர்ந்து கொண்டுதானிருந்தது. பம்பாய் வாழ்க்கையிலம், விளாத்திகுளத்திலும் அது மேலும் வலுப்பெற்றது. ஆதலால் திரு ராகி அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் இருந்த எச்சரிக்கை களும், பயமுறுத்தல்களோ என்று எண்ணத்தகு வாசகங்களும், என்னைச் சிறிதும் மனந்தளர வைக்க முடியவில்லை.
என் சகோதரர் ரங்கசாமி மட்டும் நான் தேசத்தொண்டனாக உருவாவதை எதிர்க்கவில்லை. என் தாயாருக்குத் தெரியாமல் என்னை ஊக்குவித்தார் என்றே சொல்லலாம். ஆகவே நான் ஜில்லா போர்டு வேலையை ராஜினாமா செய்து விட்ட செய்தியை ராகிக்குத் தெரிவித்து விட்டு ஆசிரமத்திற்குச் செல்வதற் குண்டான ஏற்பாடுகளைச் செய்து வந்தேன்.
(13 09 1984) என் சகோதரர் ரங்கசாமி என் தேசிய உணர்வுக்கு மதிப்பு கொடுத்தார். குடும்ப பாரம் இல்லாத என்னை தேசத்துக்காக அர்ப்பணிக்கலாம் என எண்ணினார். சிறு வயதிலிருந்தே என் ஆர்வத்தை கவனித்த அவர், எனக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வந்தார். என் தாயாரோ என்னையும் இழந்து விடக்கூடுமோ என்ற எண்ணம் மேலிட்டுக் கவலையிலாழ்ந்தார். என்னை வெகுவாகத் தடுத்துப் பார்த்தார். நானோ பிடிவாதமாக இருந்து என் வேலையை ராஜினாமா செய்து விட்ட செய்தியறிந்து மிகவும் புலம்பி அழுதார்.
எனக்காக மூன்று ஜாதிக்காய் பெட்டிகள் - கீல், பாட்லாக், பூட்டு, சாவி யுடன் - தயாராயின. ருக்மணி குக்கர் செட், மண்ணெண்ணை பிரஷர் ஸ்டோவ், சில பாத்திரங்கள், கரண்டிகள் போன்ற சமையலுக்கு வேண்டிய பாத்திரங்கள் ஒரு பெட்டியை ஆக்கிரமித்தன. மற்றொன்றில் என் உடைகள், போர்வை முதலியன. மூன்றாம் பெட்டியில் சாம்பார் ரசப்பொடிகள், வத்தல் வடகம் போன்ற உணவுப் பொருள்கள். என் அத்தை ஒரு நோட்டுப் புத்தகத்தில் சில சமையற் குறிப்புகள் எழுதித் தந்தார். ஒரு ஜமக்காளம் தலையணை, போர்வை யாவும் தயாராயின. என் நோக்கமெல்லாம் காந்தி ஆசிரமம் சென்று எப்படியாவது வேதாரணியம் கோஷ்டியில் சேர்ந்துவிட வேண்டு மென்பதுதான்.
ஏப்ரல் இருபதாந்தேதி, ராகியிடமிருந்து கடிதம் வந்தது. என் மன உறுதியைப் போற்றுவதாகவும், புறப்பட்டு வரலாமென்றும், ஆசிரமத்தில் சேர ராஜாஜி அனுமதி தந்திருப்பதாகவும், திருச்சி, ஈரோடு சந்திப்புகளில் ரயில் மாறி சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் இறங்கி, பஸ்ஸில் திருச்செங்கோடு வந்து விட்டல் ராவ் சிற்றுண்டி விடுதியில் சிற்றுண்டி அருந்தி அவரையே ஒத்தை மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி ஏற்பாடு செயது தரச் சொல்லி ஆசிரமம் வந்து சேரலாமென்று முழு விவரமெழுதி கடிதம் அனுப்பியிருந்தார்.
காந்தி ஆசிரமத்தில் ஆரம்பகால மேனேஜராக இருந்த ஸ்ரீ என். நாராயண அய்யர், BABL, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இருந்த தமிழ் நாடு சர்க்கா சங்கத்தின் கதர் மந்திரத்தின் மேனேஜராக இருந்தார். அவரை அணுகி காந்தி ஆசிரமத்தைப் பற்றி விசாரித்து நான் அங்கு சேரவிருப்பதைத் தெரிவித்தேன். அவர் ஒரேயடியாக என்னை அதைரியப்படுத்தும் வகையில் 'அடப்பாவி! இந்தச் சின்ன வயதில் அங்கு செல்ல உனக்கு எப்படியடா புத்தி வந்தது? அங்கு பனை மரங்களெல்லாம் மழையில்லாமல் பட்டுப் போய் விழுகின்றன. அங்கு குடிப்ப தற்குக் கூடத் தண்ணீர் கிடைக்காது. தாமிரவருணி நதிக்கரையில் பிறந்து அதன் தண்ணீரைக் குடித்து 21 ஆண்டுகள் வாழ்ந்த நீ அங்கு போனால் சீக்கிரமே செத்துப்போவாய்' என்றெல்லாம் ஏதேதோ அதைரிய வார்த்தைகள் சொன்னார்.
இருபத்தியிரண்டாம் தேதி காலை புறப்படலாமென ஏற்பாடாயிற்று. 21ம் தேதி இரவு உள்ளூர் பஜனை மடத்தில் எனக்குப் பிரிவுபசாரமாக விசேஷ பஜனையும், விசேஷ பிரஸாதங்களும், (ஒரு விருந்து போல) வழங்கப்பட்டன. 22ம் தேதி காலை 6 மணிக்குப் புறப்படும் பஸ்ஸில் உள்ளூர்ப்பிரமுகர்கள் சிலரும், பால வேலையில் பணி செய்யும் கூலியாட்களும் வந்து விடை கொடுத்தனுப்பினார்கள். என் விதவைத் தாயாரை நமஸ்கரித்த போது அவர் 'ஓ'வென்று வாய் விட்டுக் கதறியழுதார். ஒருவாறு விடை கொடுத்தார்.
கோவில்பட்டியில் ரயிலேறி முறையே திருச்சி ஈரோடு சந்திப்புகளில் ரயில் மாறி சங்கரி துர்க்கத்தில் இறங்கி திருச்செங்கோட்டில் ஒற்றை மாட்டு வண்டி பிடித்து சாமான்களுடன் 23ந் தேதி பகல் 11 மணியளவில் காந்தி ஆசிரமம் வந்து சேர்ந்தேன். எனக்கு அப்போது வயது 21 1/2. முந்தின தினம் இரவெல்லாம் ரயிலில் கண் விழிக்க நேர்ந்ததால், மாட்டு வண்டியில் நன்றாகத் தூங்கிக் கொண்டே வந்தேன். கரடு முரடான ரோடு. ஆடி அசைந்து கொண்டே வந்தது. 7 மைல் தூரத்தை சுமார் மூன்று மணி நேரத்தில் கடந்தது. அவ்வப் போது கண்விழித்துப் பார்த்தால் எங்கோ வனாந்திரத்தில் செல்வது போல் இருந்தது. காந்தி ஆசிரம ஆரம்ப கால மேனேஜராக இருந்த ஸ்ரீ என். நாராயண அய்யர் சொன்ன வார்த்தைகள் உண்மைதான் என்று தோன்றியது. ஆயினும் ஒரு ஸ்தாபனமே அங்கு இயங்கி வரும்போது, அங்கு ராஜாஜியவர்களே பல தொண் டர்களுடன் தங்கியிருக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.
பகல் 11 மணியளவில் வண்டி காந்தி ஆசிரம்ம் காம்பவுண்டிற்குள் சென்று முன்வாசல் பகுதியில் நின்றது. வண்டியிலிருந்து கீழே இறங்கி சுற்று முற்றும் பார்த்தேன். நான்கு புறமும் சுற்றுச் சுவர் இல்லாமல் மேலே மட்டும் கூரை வேய்ந்த ஒரு அமைப்பில் ஒருவர் தன் முன் உட்கார்ந்திருந்த 7, 8 ஆண் பெண் குழந்தைகளுக்கு ஏதோ பாடம் சொல்லும் முறையில் கல்லூரி விரிவுரையாளர் போல பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அவரை அணுகி என்னை அறி முகப்படுத்திக் கொண்டு ராகி அவர்கள் எழுதி வரச் சொன்னதின் பேரில் வந்த தாகத் தெரிவித்தேன். ராகி இரண்டு தினங்களுக்கு முன் மாயவரம் திருத்துறைப் பூண்டி முதலிய இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் மறு நாளோ அதற்கு அடுத்த நாளோ வந்து விடுவாரென்றும், அது வரை தன் ரூமில் தங்கலாமென்றும், தன் ரூமைக் காட்டினார். சாமான்களையெல்லாம் அவர் ரூமில் வைத்தேன். அவர் தன் பெயர் ஏ.கே. ஸ்ரீனிவாஸன் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
(14 09 1984) தன் வேலையை முடித்துக்கொண்டு ஸ்ரீனிவாஸன் ரூமுக்கு வந்தார். 'சாப்பிடலாமா?' என்றார். 'நான் குளிக்க வேண்டுமே!' என்றேன். தலை யைச் சொறிந்தார் நண்பர். பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டு, 'முனுசாமி' என்று குரல் கொடுத்தார். ஒருவர் வந்தார். 'ஏன் முனுசாமி, எல்லைக் கிணற்றிலே ஏத்தக் குழியிலே தண்ணீர் இருக்குமா? இவர் புதிதாக வந்திருக்கி றார். ஒரு குவளையை எடுத்துக் கொண்டு இவருடன் சென்று வருகிறாயா?' என்றார். நான் முனுசாமி என்பவருடன் புறப்பட்டேன். ஒரு ஃபர்லாங் தூரம் நடந்து சென்று அங்கு ஒரு கிணற்றைக் காட்டினார். சுமார் இருபதடிக்கு இருபதடி சதுரமான நாற்பதடி ஆழமான ஒரு கிணற்றைக் காட்டினார். ஒழுங்காகப் படிகளில்லை. எட்டிப் பார்த்தேன். அடியில் சிறிது நீர் இருப்பது தெரிந்தது. இம்மாதிரிக் கிணறுகளை நான் எனது இருபத்திரண்டு வயது வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. 'நீங்க இறங்கி தண்ணி வாத்துக்கிட்டு வாங்க. நான் இங்கே குந்திக்கிட்டு இருக்கேன்.' என்றார். நான் உயிரைப் பிடித்துக் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் கிணற்றுக்குள் இறங்கினேன். 4’ X 4’ சதுரம் 2’ ஆழம் குழியில் சிறிது தண்ணீர் இருந்தது. குளிக்கும் தொட்டியில் உட்கார்ந்து குளிப்பது போல் கையில் கொண்டு போயிருந்த குவளையால் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக் குளித்தேன். ஒருவாறு குளிப்பு நடந்தது. அங்கு குழியில் 12 மணி வெய்யிலிலும் வெளிச்சம் இல்லை. மீண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் சிரமப்பட்டு மேலே ஏறி வந்து பார்த்தால், உடம்பெல்லாம் - இரவில் நக்ஷத்தி ரங்கள் மின்னுவது போல் - சிறு சிறு துளிகள் மினுமினுத்தன. அவை மைக்கா - அபரேக் - துகள்கள் என முனுசாமி சொன்னார். பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அப் பகுதிகளில் மைக்கா படிவங்கள் உண்டு என.
சில நாட் களுக்குப் பின்னர்தான் முனுசாமி அரிசன வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் குடியானவர்கள் - கொங்கு வேளாள கவுண்டர்கள் - புழங்கும் கிணறுகளில் அரிசனங்கள் இறங்கக் கூடாதென்றும், அது காரணமாகத்தான் அவர் என்னுடன் அக்கிணற்றில் இறங்கவில்லை யென்றும், தெரிந்து கொண்டேன்.
இங்கொன்றை குறிப்பிட விரும்புகிறேன். என் 7, 8 வயதிலிருந்தே சாதி உயர்வு தாழ்வு கூடாதென்ற எண்ணம் எப்படியோ என மனதில் பதிந்திருந்தது. எப்போதாவது என் கையில் காலணா அரையணா கிடைத்தால் என் வீட்டா ருக்குத் தெரியாமல் பிள்ளைவாள் நடத்தி வந்த ஒரு கடையில் இரண்டு வடைகள் வாங்கித் தின்று அங்கேயே ஒரு டம்ளர் தண்ணீரும் வாங்கிக் குடித்து விட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவேன். என்னைப் பொருத்த வரையில் ஜாதிப் பாகுபாட்டை ஒழித்து விட்டதாக ஒரு மனத் திருப்தி ஏற்படும்.
மற்றொன்றையும் எழுத விரும்புகிறேன். நான் பிறந்ததும் 20 வயது வரை வாழ்ந்ததும் சன்னியாசிக் கிராமம் என்ற அக்கிரகாரத்தில். மிகுந்த வைதிக எண்ணங் கொண்ட பிராமணர்கள் (அய்யர், அய்யங்கார்கள்)தான் அந்த இரட் டை வரிசையான சுமார் அறுபது வீடுகளில் வாழ்ந்தார்கள். நாடார்கள், பள்ளர் கள், சக்கிலியர் போன்றவர்கள் அந்தத் தெரு வழியாக நடந்து போகக் கூடாது. இந்த இனத்தவர் யாவரும் பாடுபட்டு உழைத்து ஜீவனம் செய்பவர்கள். கண்ணியமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். இந்தத் தெருவும் நெல்லை நகராட்சிக்கு உட்பட்டது. குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றின் கரை யோரமாக வசிப்பவர்கள். அக்கிரகார வீடுகளில் சாப்பிட்ட பின் வெளியே தூக்கியெறியும் எச்சில் இலைகளில் ஏதாவது மிச்சம் கிடைக்குமா என நாய்களுடன் போட்டி போட்டுக் கொண்டு எவ்வித அவமான உணர்ச்சியும் இல்லாது வாழ்ந்தவர்கள். இவர்கள் அக்கிரகாரத்துக்குள் வந்து போவதில் அந்தத் தெருக்காரர்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு முறை அந்தத் தெருவுக்கு ரோடு போட நகராட்சி ஏற்பாடு செய்தது. குறவர்கள் மற்றும் அந்தத் தெருவுக்குள் வரத் தகுதி பெற்றிருந்த இதர வகுப்பினரைக் கொண்டுதான் ரோடு போட வேண்டும் என்றும் வரத் தகாதவர்களைக் கொண்டு ரோடு கூடாதென்றும் தங்கள் ரோட்டுக்கு சரளைக்கல் போட வேண்டாமென்றும மூர்த்தண்யமாக மறுத்து விட்டார்கள். இது 1921 ஆம் ஆண்டில் நடந்தது. Modern Review என்ற ஆங்கிலப் பத்திரிகையில் (கல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்டது) The Holy Lunatics of Sannyasigramam - Tirunelveli do not want any civic amenities because of their caste bigotry என்று எழுதிற்று.
இன்று அப்படியா? பிராமணப் பெண்கள் பலர் அன்றைய தீண்டத் தகாத இனத்தவர் மனைவிகளாக உள்ளனர். அந்தத் தெரு வீட்டு மாடிகளில் இதர இனத்துப் பையன்கள் வாடகைக்குத் தங்கி கல்லூரிகளில் படிக்கின்றார்கள். எத்தனையோ சீர்திருத்த வாதிகள் அவ்வப்போது தோன்றி 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்று வலியுறுத்தி வந்திருக்கி றார்கள். காந்தி யடிகளின் அறிவுரைகளால் அகில இந்திய ரீதியிலும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினால் தமிழகத்திலும், மற்றும் மத்திய மாநில சட்டங்களாலும் சாதி ஏற்றத் தாழ்வு வெளித் தோற்றத்தில் வெகுவாகக் குறைந்துதான் காணப்படுகிறது. ஆயினும் அன்று அத்தனை சாதி ஏற்றத் தாழ்வுகளுக் கிடையேயும் அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்து வந்தது. ஆனால் இன்றோ துவேஷ உணர்ச்சியும் மரியாதைக் குறைவும் வெளிப்படை யாகக் காணப்படுகின்றது. இவையெல்லாம் இயற்கையின் வளர்ச்சிப் பரிமாணங்கள் (Evolution) என்றே கொள்ள வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ரயில் பஸ் பயணங்கள், சினிமா, காப்பி ஓட்டல், பொருளாதார ஏற்றங்கள் போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன வென்றும் காந்திஜிக்கோ, தந்தை பெரியாருக்கோ, அறிஞர் அண்ணாவுக்கோ விசேஷ ஏற்றங்கள் காட்டித் துதிக்க வேண்டியதில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. It is a natural social evolution due to various causes but these leaders have quickened the pace.
(15 09 1984) ஆசிரம எல்லைக் கிணற்றிலே குளித்து வந்த பின் சாப்பிட உட்கார்ந்தோம். ரசம் - சாதம் - மோர் இவ்வளவே. நான் என் 19 வது வயதில் பம்பாய் செல்லும் வரை நான் வாழ்ந்த வீட்டில் ஒரே குடும்பமாக வாழந்து வந்தோம். சுமார் 30, 35 பேர்கள் ஏக குடும்பமாக இருந்தோம். என் தாய் வழிப்பாட்டி காலை 4 மணிக்கு எழுந்து குளித்து பூஜை செய்து அடுப்பு பற்ற வைத்தால் அன்று இரவு 11 மணியளவில்தான் அடுப்பு அணைக்கப்படும். 15 பேர்களாவது பெண்கள் பல்வேறு வயதுகளில் இருப்பார்கள். தினமும் யாராவது ஓரிரு உறவினர், ஆபீஸ், பள்ளிக்கூடம், கோர்ட்டு என்ற எதோவொரு காரணத் திற்காக விருந்தினராக வந்து கொண்டிருப்பார்கள். 1927 ஆம் வருடம் நான் பம்பாய் செல்லும் வரை ஓட்டலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்ட தில்லை. 1920 -21 ஓராண்டு மட்டும் நாமக்கல்லில் மூன்றாம் பாரத்தில் படித் தேன். என் தாயார் மட்டுமே இருந்ததாலும் என் சகோதரர் கேம்ப்பில் போய் விடுவா ராதலாலும் என் தாயாரின் மாதாந்திர மூன்று நாட்கள் லீவின் போது மட்டும் பாலப்பட்டி சீனிவாசய்யர் ஓட்டலில் சாப்பிடுவேன். ஆனால் அதை ஓட்டல் என்று சொல்வதை விட மற்றொரு வீடு என்றே சொல்ல வேண்டும். காலையில் பழைய சாதம். பிற்பகலில் மட்டும் சுடுசாதம், குழம்பு, ரசம், ஒரு கறி, மோருடன் சாப்பாடு. இரவு ஆறின சாதம், மோர், எரிகுழம்பு. ஆக எனக்குச் சமையல் என்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பே கிடையாது. வாய்க்கு ருசியாக சாப்பாடு பக்ஷணங்கள் வேண்டிய போது கிடைத்து வந்தது.
நண்பர் ஸ்ரீனிவாஸன், வெந்தய ரசம் வைத்திருப்பதாகச் சொன்னார். அதில் சாதத்தைப் பிசைந்து ஒரு வாய் சோற்றை வாயில் போட்டேன். ஒரே கசப்பு. நண்பர் துவரம் பருப்புக்குப் பதிலாக வெந்தயத்தை ஒரு டம்ளர் போட்டு புளியைக் கரைத்து விட்டு உப்புக்காரம் போட்டு வெந்தயம் நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வைத்திருந்தார். அந்த ரசம் சாப்பிட்டதும் ஆசிரம வாழ்க்கை இது போலக் கசப்பாகத் தானிருக்குமோ என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் தயிரை - கட்டித் தயிரை - அப்படியே தண்ணீர் விடாமல் சிலுப்பி வைத்திருந்த அருமையான வெண்ணையுடன் கூடிய மோர், ஆசிரம வாழ்க்கை நான் பயப்படக் கூடியதாக இருக்காது என்று எண்ண இடமளித்தது. ஒருவாறு சாப்பிட்டு முடித்து சிறிது நேரத்தில் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். என் நண்பர் 2 மணியிலிருந்து 4 மணி வரை மீண்டும் பள்ளி நடத்தி விட்டு வந்தார். ஆசிரமத்தில் எல்லோரும் ஆறு மணிக்குள் சாப்பிட்டு விடுவார்களென்றும், ஆறரை மணிக்கு மாலைப் பிரார்த்தனைக்குத் தயாராக வேண்டுமென்றும், நண்பர் சொன்னதின் பேரில், என் பெட்டிகளைத் திறந்து சமையல் பாத்திரம் பண்டங்களை சீர்படுத்தி வைத்து நான் கொண்டு வந்திருந்த புத்தகக் குறிப்புப்படி குக்கரில் சாதம் பருப்பு செய்து, வற்றல் குழம்பு வைத்து சிறிதளவு வடகம் வறுத்தேன். என் நண்பரும் உதவி செய்தார் - சமையலில் மட்டுமல்ல, சாப்பாட்டிலும் கூட.
மணி ஓசை கேட்டது. “பிரார்த்தனைக்கு முதல் மணி அடித்தாயிற்று; போவோம்.” என்றார் நண்பர். நன்றாக இருட்டி விட்டது. ஒவ்வொருவரும் ஒரு அரிக்கேன் லைட்டை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தனர். லைட்டை மிகச் சிறிய வெளிச்சத்திற்குக் குறைத்து கைப்பிடிச்சுவருக்கு வெளியே வைத்து விட்டு அமைதியாக அவரவர் இடத்தில் அமர்ந்தார்கள். சில பெண்மணிகளும் வந்தார்கள். இரண்டாவது மணி அடிக்கப்பட்டது. எல்லோரும் நிசப்தமாக இருந் தார்கள். கீதை சுலோகங்கள் எல்லோரும் சேர்ந்து சொன்னார்கள். அதன் பிறகு ஓரிரு தமிழ்ப் பாடல்கள். கடைசியாக நாமாவளிகள் ஒன்றிரண்டு, சுமார் பதினைந்து இருபது நிமிடங்கள் நடந்த பின் அவரவர்கள் கலைந்து செல்ல ஆயத்த மானார்கள். நண்பர் ஸ்ரீனிவாஸன், 'ஒரு நிமிடம் இருங்கள். புதிதாக ஒரு நண்பர் வந்திருக்கிறார்; அவரை நாம் தெரிந்து கொள்வோம்.' என்றார். எல்லோரும் தங்கள் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தைப் பெரிதாக்கி, உட்கார்ந்தார்கள். பல விளக்குகளின் வெளிச்சம் அதிகமாக எனக்குப் பட்டது.
நண்பர் முதலில் ஒருவரைக் காட்டி, “ஸ்ரீ என். கே ஸ்ரீனிவாசராகவன் - இப்போது இவர்தான் ஆசிரம மேனேஜர்.” என்று சொல்லி என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஆசிரமத்தின் ஆரம்ப கால ஊழியர்கள் பலருடன் ராஜாஜியவர்கள் வேதாரணியம் பாத யாத்திரையில் இருந்தார். மேனேஜர் கே. சந்தானமும் யாத்திரையில் சென்றிருந்தார். ஆசிரம அலுவல்கள் தொடர்ந்து நடைபெறுவதற்காக குறைந்த அளவான ஊழியர்கள் மட்டுமே ஆசிரம வேலை களைக் கவனித்து வந்தார்கள். அவர்கள் என்னைப் பல கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்று மகிழ்ந்தனர். நான் சென்ற ஆறு மாதமாக ராகி ஒருவருடன் மட்டுமே தொடர்பு கொண்ணடிருந்து அவர் அழைப்பின் பேரில் ஆசிரமம் வந்து சேர்ந்திருந்தேன்.
(19 09 1984) ஆதலின், முறையாக ஆசிரம மேனேஜருக்கு விண்ணப்பம் அனுப்பி அவர் அனுமதியுடன் வந்து சேரவில்லை. திரு என். கே ஸ்ரீனிவாச ராகவனும் நான் வருவதற்கு இரண்டு மாதங்கள் முன்னர்தான் ஆசிரம நிர்வாகி யாகப் பொறுப்பேற்றிருந்தார். எனக்கு 22 வயது. அவர் என்னை விட 4, 5 வயதுதான் மூத்தவர். ஆசிரம நிர்வாகத்திற்குப் புதியவர். ராஜாஜியுடன் ஆசிரம மூத்த ஊழியர்கள் பலரும் வேதாரணியம் யாத்திரையில் சென்று விட்டதால் ஸ்ரீனிவாசராகவனுக்கு ஆசிரம கொள்கைகள் முழுவதுமாகப் பிடிபடவில்லை. ஆகவே அவர் துவக்கத்தில் ஒருவித அலட்சியப் போக்குடன் நடத்தியதாக உணர்ந்தேன். ஆனால் சில வாரங்களுக்குள்ளாகவே நாங்கள் ஒருவரை யொருவர் நன்கு புரிந்து கொண்டு மிகுந்த நட்புறவு கொண்டோம்.
நான் ரா.கி.யின் வருகைக்காகக் காத்திருந்தேன். அவர் நான் ஆசிரமம் வந்தடைந்த தினத்திற்கு மறுநாள் மாலை தான் வந்தார். ஆசிரமத்திற்கு நான் வந்து சேர்ந்ததைக் கேட்டு மகிழ்ந்தார். அவர் தஞ்சை மாவட்டக்காரர் ஆதலின், ராஜாஜியின் வேதாரணியம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை அவ்வப்போது சென்று கவனித்து வந்தார். இரண்டு தினங்கள் எனக்கு அவர் வீட்டில் சாப்பாடு. அவர், விமோசனம் என்ற தமிழ் மாதப் பத்திரிகை, Prohibition என்ற ஆங்கில மூன்று மாதமொரு முறை பத்திரிகை, ஆகியவற்றில் ராஜாஜிக்கு உதவியாக இருந்து வந்தார். ஆகவே அவர் என்னைத் தன் உதவியாளனாகச் சேர்த்துக் கொண்டார். நான் திருமணமாகாதவன் ஆதலால் ஆசிரமத்தின் வழக்கப்படி மாதம் எனக்கு ஊதியம் இருபது ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.
(20 09 1984) 'தண்டி' யாத்திரை வெற்றிகரமாக நிகழ்ந்தேறியது. பல பேர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். பலரை தடியடிப் பிரயோகம் செய்து கலைத்தார்கள். ஆயினும் அவர்கள் மீண்டும் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்து சிறை புகுந்தனர். தேசம் முழுவதும் இயக்கம் வலுவடைந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறை புகுந்தனர். பொறுக்கு மணிகளான நூறு தொண்டர்களுடன் திருச்சியில் 1930 சித்திரை தமிழ் வருடப் பிறப்பன்று (14 01 1930) பாதயாத்திரை புறப்பட்ட ராஜாஜி சுமார் 150 மைல் கள் நடந்து 28ந்தேதி வேதாரணியம் சென்றடைந்தார். 29ந்தேதி எந்த வித இன்னல்களுக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது என்ற பிரதிக்ஞை எடுத்துக் கொண்டதோடு மறுநாள் உப்பு எடுப்பது என்று தீர்மானித்தார்கள். முப்பதாந்தேதி காலை 5 மணிக்கு ராஜாஜி, அகஸ்தியம்பள்ளி என்ற இடத்திற்கு சென்று 'மகாத்மா காந்திஜிக்கு ஜே! வந்தே மாதரம்!' என்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்ப, ஒரு கைப்பிடி உப்பு அள்ளினார். காவல் துறையினர் ராஜாஜி வரக்கூடும் என்று அவர்கள் அனுமானித்திருந்த இடத்தில் தயாராகக் காத்திருந்தனர். ஆனால் ராஜாஜி அகஸ்தியம்பள்ளியில் உப்பு எடுத்து விட்டதையறிந்து ஏமாந்து போனதால், கோபமடைந்தனர். ராஜாஜியை அன்றே விசாரித்து தண்டனையளித்து சிறைக்கு அனுப்பினர். அதன் பின்னர் நூறு தொண்டர்களும் தனித் தனியாகவும் சிறு சிறு கூட்டங்களாகவும் உப்பு அள்ளினர்.
(23 09 1984) தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு சிறைக ளுக்கு அனுப்பப்பட்டனர். பலரை காவல் துறையினர் புளியன்விளாறு கொண்டு கண்மூடித்தனமாக அடித்தனர். அக்கம்பக்கத்திலுள்ள கிராமத்து ஜனங்கள் பலரும் இந்தக் கொடுமைகளைப் பார்த்துத் தாங்களும் உப்பெடுத்து சத்தியாக் கிரகம் செய்து சிறை சென்றனர்.
ரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் சென்று ஆங்காங்கே இயக்கம் வலுப்பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆதலால் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று திரும்புவார். அவருக்கு உதவியாளனாக நான், விமோசனம், Prohibition பத்திரிகைகள் விஷயமாக வரும் கடிதங்களைப்பார்த்து, அவற்றில் செய்ய வேண்டியவைகளைக் கவனித்து வந்தேன். விமோசனம் மே (1980) பத்திரிகைகளையும், எப்ரல் மாத Prohibition பத்திரிகைகளையும், அனுப்பவேண்டிய முகவரிகளுக்கு அனுப்பி வைப்பதில் எனக்கு முழு நேர வேலை இருந்தது. ராஜாஜி (விமோசனம் ஆசிரியர்) சிறை சென்று விட்டதால், பத்து மாதங்கள் மட்டுமே வெளிவந்த விமோசனம் நிறுத்தப்பட்டது. ஜூன், செப்டம்பர் மாதங்களில் வெளிவரவேண்டிய Prohibition பத்திரிகைக்கான matter ஏற்கனவே அச்சுக்கு அனுப்பப்பட்டதால் அந்த இரண்டு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன.
ரா.கி, “சுயராஜ்யம் ஏன்?” “அன்னிய ஆட்சி வேண்டாம்!” “நாணய மாற்று விகிதம்” என்ற பல தலைப்புகளில் கட்டுரை எழுதி அவற்றைக் காலணா பிரசுரங்களாக வெளிவர ஏற்பாடு செய்தார். திருச்செங்கோடு சேலம் பகுதிகளில் அச்சகங்கள் அச்சிட பயந்ததாலும், இதற்கான செலவுகளுக்காகப் பணம் திரட்டு வதில் சிரமம் இருந்ததாலும் இப்பிரசுரங்களை பங்களூரில் அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கவனித்து ஆவன செய்ய என்னை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
(24 09 1984) மே பத்தாந்தேதி வாக்கில் நான் பெங்களூர் மல்லேஸ்வரம் சேவாஸ்ரமம் போய்ச் சேர்ந்தேன். அதன் தலைவர் பிரம்மச்சாரி ராமச்சந்திரா என்பவர். அவருக்கு ரா.கி. கடிதம் கொடுத்திருந்ததுடன் நான் அங்கு வருவதைக் குறித்து அவருக்கு முன்பே கடிதமும் எழுதியிருந்தார்.
நான் அங்கு போய்ச் சேர்ந்த சமயம், பிரம்மச்சாரி ராமச்சந்திரா ஏதோ வேலையாக வெளியே சென்றி ருந்தார். அவருடன் சேவையில் இருந்த ஸ்ரீ ஆர் வி குர்ஜாலி என்னை வரவேற்று உபசரித்தார். மாலையில் ஸ்ரீ ராமச்சந்திரா வந்தார். முழங்காலுக்கு மேல் நாலு முழத் துண்டு கட்டியிருந்தார். மேலே ஒரு பனியன். அதற்கு மேல் ஒரு துண்டு. நல்ல சிவப்பு நிறம். சாதாரண தேக அமைப்பு. தொழிலாளர்களின் நல் வாழ்வுக்குப் பாடுபட்டு வந்தார். 'பிரம்மச்சாரி' என்ற ஆங்கில - தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வந்தார். மிகவும் சுறுசுறுப்பானவர். அவரை 'மைசூர் காந்தி' என்று அழைப்பார்கள். அன்றைய மைசூர் ராஜ குடும்பத்தில் அவருக்கு மிகுந்த செல்வாக்கும் மரியாதையும் இருந்தது. ராகி இவர் மூலமாகத்தான் காலணா பிரசுரங்களை அச்சடிக்க வைத்து, திருச்செங்கோட்டில் ஆசிரமத்துக்கு மளிகை சாமான்கள் விற்பனை செய்து வந்த திரு லக்ஷமணன் செட்டியார் கடைக்கு, 'பள்ளி நோட்டுப் புத்தகங்கள்' என்ற பெயரில் அனுப்பி வந்தார். அப்போ தெல்லாம் எட்டு பக்கங்கள் மட்டுமே அச்சடிக்கக் கூடிய இயந்திரங்கள் தான் இருந்தன. மக்கள் புஸ்தகா பிரஸ், காக்ஸ்டன் பிரஸ் என்ற இரண்டு அச்சகங்களில், எட்டெட்டு பக்கங்கள் வீதம் பதினாறு பக்கங்கள் அச்சடித்து, மூன்றாவது ஒரு பைண்டரிடம் தைத்து, அங்கேயே நூறு புத்தகங்களாகக் கட்டி, திருச்செங்கோட்டிற்கு 1000 புத்தகங்கள் அனுப்புவது வழக்கம். இதற்கான செலவுக்கான பணம் முழுவதும் ஸ்ரீ ராமச்சந்திரா பெங்களூரிலேயே வசூல் செய்து வந்தார். அவருக்கு உதவியாக இருக்க ரா.கி. என்னை அனுப்பி வைத்தார். ராமச்சந்திரா தமிழர்; பிராமணர். சுமார் ஒரு மாதம் வரை அவருக்கு உதவியாக நான் அங்கு இருந்து, இந்த பிரசுரங்கள் வெளியிடும் வேலையைக் கவனித்து வந்தேன்.
(25 09 1984) ராமச்சந்திராவை ராம்ஜி என்றே அங்கு எல்லோரும் அழைத்தார்கள். நானும் ராம்ஜி என்றே இனி குறிப்பிடுவேன். காலையில் ஐந்து மணிக்குத் துயிலெழுந்து, காலைக்கடன்கள் முடித்துக் குளித்து, ஐந்தரைக்குப் பிரார்த்தனை செய்து, ஒரு டம்ளர் கோதுமை கஞ்சி சாப்பிட்டு விட்டு, ஆறு அல்லது ஆறரை மணிக்கு சில அன்பர்களின் வீடுகளுக்குச் செல்வோம். ராம்ஜி யை மிக்க மரியாதையுடன் வரவேற்பார்கள். 'தேச சேவைக்கு கொஞ்சம் நிதி பெற வந்துள்ளேன்' என்பார் ராம்ஜி. வீட்டுச் சொந்தக்காரர் உள்ளே சென்று ரூபாய் பத்து பதினைந்து, இருபது இப்படி ஏதாவது ஒரு தொகையைக் கொடுத்து 'இது போதுமா, இன்னமும் என்னிடம் எதிர்பார்க்கிறீர்களா?' என்பார். 'இப்போதைக்கு இது போதும்; தேவைப்படும் போதெல்லாம் தங்களிடம்தானே நான் வந்து கொண்டிருக்கிறேன்' என்று சொல்லி அத்தொகையையும் அவர்கள் தரும் மோர் அல்லது பால் சாப்பிட்டு விட்டு ஓரிரு ஃபர்லாங்குகள் நடந்து மற்றொரு அன்பர் வீட்டுக்குப் போவோம். அங்கும் இதே போல பணம் பெறுவோம். இதற்குள் எட்டு எட்டரை மணி ஆகி விடும். ' நீ வளரும் வாலிபன். உன்னைப் பட்டினி போடக் கூடாது. நீ ஏதாவது சாப்பிடு' என்று சொல்லி என்னைச் சிற்றுண்டி விடுதிக்கு அழைத்துச் சென்று, தோசை, இட்டிலி ஏதாவது சாப்பிடச் செய்வார். 9 மணி யளவில், கோட்டைப் பகுதியிலுள்ள சர்க்கா சங்க கதர் வஸ்திராலயத்திற்குப் போவோம். அப்போது வஸ்திராலய நிர்வாகியாக இருந்தவர் ஸ்ரீ டி. சதாசிவம். பின்னாட்களில் கல்கி பத்திரிகை உரிமையாளர். ராம்ஜியும் சதாசிவமும் சேர்ந்துதான் ரா.கி. எழுதிய பிரசுரங்களை அச்சிட்டு அனுப்பவும், அதற்கான செலவுகளைச்சமாளிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தனர். ஆகவே அன்று காலை ராம்ஜி செய்த வசூலையும் மேலும் எவ்வளவு தேவைப்படும் என்பதையும் தீர்மானிப்பார்கள். பொருளாதார நிலையில் சற்று சௌகரியமான நிலையிலிருப்பவர்கள் பலரை இவர்கள் இருவரும் அறிந்திருந்ததாலும் இவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் 'இல்லை'யென்னாது ஏதாவது கொடுத்துத்தான் அனுப்புவார்கள். ஆகவே இப்பிரசுரங்களை அச்சிடும் செலவுகளுக்கு சிரமம் இருக்கவில்லை. அச்சாபீசுகள் இரண்டில் ஒன்று கன்டோன்மென்ட் பகுதியிலும், மற்றொன்று பெங்களூர் நகர்ப் பகுதியில் இருந்த தாலும், 9 மணிக்கு வெய்யில் கடுமை ஏற்படுமாதலாலும், குதிரை வண்டியை ஏற்பாடு செய்வார். முதல் மணிக்கு ஒரு ரூபாய் என்றும், அடுத்த ஒவ்வொரு மணிக்கும் பத்தணா என்றும் பேசி வண்டியில் செல்வோம். எங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு 12, 12 30 மணியளவில் சேவாஸ்ரமம் வந்து சேருவோம்.
சிகப்பு நிறமுள்ள கொட்டை அரிசிச் சாதம், குழம்பு என்ற பேருக்கு ஒன்று, நல்லெண்ணை, மிக அதிக அளவில் நீர் கலந்த மோர் இவற்றை ஒருவாறு சாப்பிட்டு இருவரும் மூன்று மணி வரை ஓய்வெடுப்போம். பின்னர், மீண்டும் வெளியில் செல்வோம். எங்கள் வேலையை முடித்துக்கொண்டு, ஆறு, ஆறரை மணிக்குத் திரும்புவோம். மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு கோதுமை மாவு பரோட்டாவும், மதியம் செய்த குழம்பும், நீர் மோரும் சாப்பிட்டு 9 மணி யளவில் படுக்கச் செல்வோம். சில நாட்களில், அபூர்வமாக ஏதாவது காய்கறி களும் இருக்கும். சேவாஸ்ரமத்தில் சுமார் ஆறு பேர்கள் இருந்தார்கள். தமிழகத்தில் சத்தியாக்கிரக இயக்கம் மிக வேகமாகப் பரவி விட்டது. இயக்கத்தை தொடர்ந்து நடத்த நியமிக்கப்பட்ட சர்வாதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். அவர்களுடன் பல தொண்டர்களும் சிறை சென்றனர். பெங்களூரில் ரகசியமாகப் பிரசுரங்கள் அச்சிடுவது அம்பலமாகிவிட்டது. ஆகவே அச்சகங்கள் அச்சிட அஞ்சின. மேலும் ரா.கி. அவர்கள் இயக்கத்தில் நேரிடைப் பங்கு வகிக்கத் துடித்துக கொண்டிருந்தார். பங்களூரிலிருந்து டி. சதாசிவமும் வஸ்திராலயப் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு ராகியுடன் சேர்ந்து கொண்டார். ஆகவே பெங்களூர் பிரசுர வேலை நின்று விட்டதால், நான் காந்தி ஆசிரமம் திரும்பி னேன். ராகியும் சதாசிவமும் ஒரு கூட்டத்தில் பேசியதற்காகக் கோபிச் செட்டிப்பாளையத்தில் கைதாகி சிறை சென்று விட்டனர். எனக்கு 'விமோசனம்' தொடர்பான வேலை எதுவும் இருக்கவில்லை. ஆகவே ஆசிரம நிர்வாகி என்னை நூல் வாங்கும் கேந்திரங்களுக்கு அனுப்ப முடிவு செய்தார்.
(26 09 1984) நான் 1922 ஆம் ஆண்டிலிருந்து கதர் அணிபவனாயினும், பம்பாயில் கதர் விற்பனையில் சிறப்பாக ஈடுபட்டிருந்த போதிலும், கதர் நூற்பு நெசவு போன்ற விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆயினும் கிராமத்து நூல் நூற்பவர்களிடமிருந்து நூலை வாங்கி, நூற்ற கூலி கொடுத்து, அவர்களுக்கு மேலும் நூற்பதற்கான பஞ்சு கொடுக்கவேண்டும். எனக்கு முன்னர் இரண்டு ஆண்டு காலமாக ஆசிரமப் பணியிலிருந்த திரு எம்.எஸ். அனந்தராமன், திரு ராமன் பிஷாரோடி போன்றவர்கள் ஏற்கனவே நூல் வாங்கும் வேலையைக் கவனித்து வந்தார்கள். அவர்களில் ஒருவருடன் நான் நூல் வாங்க கிராமங் களுக்குச் செல்வேன். அப்போது 1930ம் வருடம் கடும் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, ஏராளமான வயது முதிர்ந்த கிழவிகளும் நடுத்தர வயதுப் பெண்களும், இளம்பெண்களும், ஆயிரக்கணக்கானவர்கள், நூற்புத் தொழிலை மேற்கொண் டிருந்தார்கள். நூல் மையம் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஆயிரம் பேர்கள் நூல் கொண்டு வருவார்கள். அப்போதெல்லாம் கழிநூல்தான். 8 போன்ற மூங்கில் வீசணத்தில் நூற்ற நூலை மாறி மாறி வீசி கழிகளாக்கி சுமார் ஒன்றரை பவுண்டு கழிகளாக ஒவ்வொருவரும் மூன்று அல்லது நான்கு கழிகள் கொண்டு வருவார்கள். அதன் எடையைக் குறித்துக் கொண்டு ஒரு விரலால் தூக்கிப் பார்த்து முறுக்கு போதுமானதாக இருக்கிறதா எனப் பார்த்து அவர்களுக்கு கூலி கொடுத்து, பஞ்சு எடை போட்டு வழங்க வேண்டும்.
(28 09 1984) நான் ராட்டையையோ நெசவு செய்யும் தறியையோ பார்த்தது இல்லை. ஆசிரமம் வந்து சேர்ந்த பின், சாதாரண கிராமத்துப் பாட்டி ராட்டையில் நூற்கப் பழகிக் கொண்டேன். 5, 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் கிசான் ராட்டை, பெட்டி ராட்டைகள் பழக்கத்திற்கு வந்தன. நான் 1921 , 22 ஆம் ஆண்டில் தான் கதர் அணிய ஆரம்பித்தேன். நாலாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். ஒத்துழையாமை சத்யாக்கிரக இயக்கத்தில் காந்திஜி கைதான 18ம் தேதி ஒவ்வொரு மாதமும் காந்திய பஜனை நடந்து வந்ததில் நானும் கலந்து கொண்டேன். பலரும் முரட்டு பழுப்பு நிறத் துணி அணிந்திருந்தனர். அது கதர் என்றும் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி கதர் பண்டார்களில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன். 36” அகலம், 3 1/2 முழம் நீளம் உள்ள ஒரு கதர் துண்டின் விலை ரூ 1 3/4 ஆக இருந்தது. என் வீட்டுக்குப் பக்கத்திலேயே கதர் பண்டார் இருந்தது. பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் நெய்யும் துண்டு ஒன்றின் விலை 8 அணாவாக இருந்தது. ஆகவே என் பெற்றோர்கள் விலை அதிகமான கதர்த் துண்டு வாங்கித் தர மறுத்தார்கள். ஆயினும் நான் அடம் பிடித்து கதர் துண்டு வாங்கியணிந்தேன். ஆகவே என் நண்பர்கள் என்னை 'காந்தி கிச்சன்' என்று அழைத்தனர்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான், மில் முரட்டு நூல் கலந்த துணிதான் கதர் என்ற பேரில் விற்கப் படுவதையும் அறிந்தேன். காங்கிரஸ் கமிட்டி நிர்வாகத்திலிருந்து “தமிழ் நாடு கதர் போர்டு” என்ற அமைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் “அகில பாரத சர்க்கா சங்கம் - அதன் அத்தாட்சி பெற்ற கதர் ஸ்தாபனங்கள்” தோன்றி கதரின் தூய தன்மையை அமல் படுத்தலாயின. ஆயினும் காந்திஜி கதர் இயக்கத்துக்குப்புத்துயிர் கொடுத்த நாளி லிருந்தே போலி கதரும், சூரியனும் - இருட்டும் போல, உண்மையும் - பொய்யும் போல பிறந்து விட்டது. அது நிற்க. நான் காந்தி ஆசிரமத்தில் பல நூல் வாங்கும் கிராமங்களுக்குச் சென்று நூல் வாங்கும் பணியில் இருந்து வந்தேன். நான் காந்தி ஆசிரமத்திற்கு வந்ததின் நோக்கமே வேதாரணியம் கோஷ்டியில் சேர்ந்து கைதாகி சிறை செல்ல வேண்டுமென்பதுதான். ஆனால் என்னை ஆசிர மத்திற்கு வரச்சொன்ன ராகி அவர்களும் சிறை சென்று விட்டார். ஆகவே நான் ஆசிரம சேவையை விட்டு சிறை செல்ல விரும்பினேன்.
ராகி சிறை செல்லு முன், மதுரை சௌராஷ்ட்ரப் பிரமுகர், ஸ்ரீ எம்.கே. சுந்தர்ராமய்யரிடம் என்னைப் பற்றிச் சொல்லி, என் ஆசிரம விலாஸத்தையும் அவரிடம் கொடுத் திருந்தார். ஆகவே உடனே புறப்பட்டு வருமாறு கடிதம் வந்தது. இதற்கு முன்னரே நான் திருச்சி சென்று டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் வீட்டில் நடந்த முகாமுக்குச் சென்றேன். ஆசிரமத்தில் இருந்த ராமன் பிஷாரோடி கல்லூரி யொன்றின் மாணவர்களைக் கல்லூரி செல்ல வேண்டா மென்று கேட்டுக் கொண்டதற்காகக் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை பெற்றிருந்தார். மறுநாள் சில தொண்டர்களுடன் நான் செல்வதாக இருந்தது. ஆசிரமத்தில் இருந்து அன்று மாலை திருச்சி வந்த நண்பர், சுந்தர்ராமய்யர் கடிதத்தைக் கொடுத்தார். அங்கிருந்த தொண்டர்கள் என்னை மதுரை செல்லு மாறு கூறினார்கள். மறுநாள் மதுரை சென்றேன். தமிழகத்தில் சத்தியாக்கிரக இயக்கம், நான்கு மாத்ததிற்கு மேலாக தீவிரமாக நடந்தது. அதுவரை மாவட்ட வாரியாக எத்தனை பேர் சிறை சென்றுள்ளார்கள் என்ற Roll of Honour தயாரிக்க வேண்டுமென அகில இந்திய காங்கிரஸின் வழிகாட்டுதலின்படி தயாரிக்க எம்.கே.எஸ். விரும்பினார்.
ஆகவே ஒரு டாக்சியைப் பிடித்துக் கொண்டு நெல்லை மாவட்டத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு மாவட்டமாக உள்ள கதர் வஸ்திராலயங்களுக்குச் சென்று அவர்களுக்குத் தெரிந்தபடியான லிஸ்டு தயாரித்துக் கொண்டு 3, 4 தினங்கள் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தோம். செங்கற்பட்டு மாவட்டம் வாலாஜாவில் திரு சுந்தரவரதன் என்ற தேசபக்தர் எங்களுடன் சேர்ந்து கொண்டார். சென்னையில் தம்பு செட்டி அல்லது லிங்கி செட்டித் தெருவிலோ Free Press of India சென்னை காரியாலயம். அதன் மேனேஜரிடம் என்னையும் சுந்தரவரதனையும் ஒப்படைத்தார் ஸ்ரீ எம்.கே.எஸ். அங்கிருந்த ஆங்கில, தமிழ் தினசரிகளிலிருந்து மார்ச் 1ந்தேதி முதல் செப்டம்பர் 30ந்தேதி வரை வெளி வந்த செய்திகளிலிருந்து எந்தெந்த மாவட்டங்களில் என்றென்று, யார் - யார், எத்தனை பேர்கள், என்ற லிஸ்டு தயாரிக்க ஏற்பாடு செய்து விட்டு, மீண்டும் பத்து தினங்களில் வருவதாகச் சொல்லி போதுமான பணமும் கொடுத்து விட்டுச் சென்றார். நாங்கள் மேல்மாடியிலிருந்து கீழே இறங்கி சாப்பாட்டிற்குச் சென்று திரும்பும் போதெல்லாம் யூனிபார்ம் போடாத போலீசார் நாளும் கண்காணித்து வருவதை உணர்ந்தோம். நாங்கள் எங்கள் வேலையைக் கவனமாகச் செய்து வந்தோம்.
(29 09 1984) மதுரையிலிருந்து ஸ்ரீ எம்.கே.எஸ்., செப்டம்பர் இருபதாந்தேதி வந்தார். நாங்கள் செயதுள்ள வேலைகளைப் பார்வையிட்ட பின், மாலையில் எங்களை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அன்று காலையில்தான் ராஜாஜி ஆறு மாத சிறைவாசம் அனுபவித்து விட்டு, வெளியே வந்திருந்தார் போலும். அவரிடம் நடந்துள்ள வேலைகளையும், இனி நடக்க வேண்டிய வேலைகள் பற்றியும் விளக்கினார். நாங்கள், சுமார் 3000 பேர்கள் வரை தமிழகத்தில் சிறை சென்றுள்ளதாகவும், மாவட்ட வாரியாக லிஸ்டு தயாரித்து வருவதாகவும், சொன்னோம். என்னை காந்தி ஆசிரமத்திலிருந்து வந்திருப்பதாக ஸ்ரீ எம்.கே.எஸ்., ராஜாஜியிடம் சொன்னார்.
நான் அப்போது தான் ராஜாஜியுடன் முதல் முதல் அறிமுகம் ஆனேன். இரண்டு தடவைகள் பம்பாயிலும், ஒரு தடவை நெல்லையிலும், பொதுக்கூட்டங்களில் எட்ட நின்று பார்த்திருக்கின்றேன். எம்.கே.எஸ். அறிமுகம் செய்தபோது அவர் கறுப்புக் கண்ணாடி வழியாக என்னை ஏற இறங்கப் பார்த்தார். பெயர் என்னவென்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.’கிருஷ்ணமூர்த்தி சொன்ன பையனா' என்று கேட்டுத் தெரிந்து கொண்டு “செப்டம்பர் மாத Prohibition அச்சாபீசிலிருந்து வந்து Despatch ஆகிவிட்டதா?” என்று கேட்டார். நான் சுமார் ஒரு மாதமாக ஆசிரமத்திலிருந்து வெளியே இருப்பதாகவும், ஆதலால் விவரம் தெரியவில்லை என்றும் தெரிவித்தேன். உடனே ராஜாஜி, எம்.கே.எஸ்.ஸைப் பார்த்து 'இவரை, இன்று இரவு ரயிலிலேயே டிக்கட் வாங்கிக் கொடுத்து ஆசிரமத்துக்கு அனுப் புங்கள்.'என்று சொல்லி என்னிடம் Prohibition பத்திரிகை வந்திருந்தால் அதை உடனே சந்தாதாரர்களுக்கு - முதலில் வெளிநாட்டு சந்தாதாரர்களுக்கு அனுப்பும் படியும், தான் இன்னும் ஓரிரு வாரத்தில் அங்கு வரும் வரை ஆசிரமத்திலேயே இருக்கும் படியும் என்னைப் பணித்தார். அவர் உத்திரவையேற்று இரவு ரயிலேறி மறுநாட் காலை காந்தி ஆசிரமம் வந்து சேர்ந்தேன். Prohibition அச்சாகி வந் திருந்தது. சுமார் 600, 700 சந்தாதாரர்களுக்கு விலாஸங்கள் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி 2, 3 தினங்களிலே அந்த வேலையை முடித்தேன்.
ஆசிரமத்திலேயே தங்கி யிருந்து மேனேஜர் இட்ட வேலைகளைச் செய்து வந்தேன். ராஜாஜியவர்கள், 28ந் தேதி ஆசிரமம் வருவதாகவும் திருச்செங்கோட்டுக்கு வண்டியனுப்பும்படியும் கடிதம் வந்திருந்தது. அதன்படி ராஜாஜி பகல் பத்தரை மணி சுமாருக்கு வந்து சேர்ந்தார். ராஜாஜியின் தமையனார் ஸ்ரீ ஸ்ரீனிவாசய்யங்கார் (Retired Revenue Official) Dr.P.சுப்பராயன் எஸ்டேட் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். அவர் இல்லத்தில் சாப்பிட்டு விட்டு வந்திருந்தார். அவர் புதல்வன் சி ஆர் நரசிம்ம னும், புதல்வி லக்ஷ்மியும், அவர் வந்தபோது ஆசிரமத்திலிருந்து தங்கள் அத்தைப் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்ததாக நினைவு. அவர்கள் அது சமயம் ஆசிரமத்தில் இல்லையென்பதாக நினைவு. ராஜாஜி அக்டோபர் 2ம் தேதியும் ஆசிரமத்தில் இருந்தார். அப்போதெல்லாம் காந்தி ஜெயந்தி நாடு தழுவிய அளவில் கொண்டாடப்படவில்லை. ஆசிரமத்தில் காந்தி ஜெயந்தி அமைதி யாகக் கொண்டாடப்பட்டது. இரண்டொரு தினங்களுக்குப் பின் ராஜாஜி சென்னை திரும்பி விட்டார். ராஜாஜி ஆசிரமத்தில் தங்கியிருந்த 4, 5 தினங்க ளிலே அந்த வறட்சிப் பிரதேசத்தில் பெருமழை பெய்து ஏரி, குளம், குட்டைகள், கிணறுகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. வாய்க்கால்களில் நீர் ஓட ஆரம்பித்தது. அந்தப் பக்கத்துக் குடியானவர்கள் எல்லாம், 'பெரிய அய்யா வந்தார்கள்; பெரு மழை பெய்தது. - அவர் ரிஷ்ய சிருங்கரல்லவா?' என்று பெருமை கொண்டு ராஜாஜியைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.
இந்த வேளையில் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பெங்களூர் பிரம்மச்சாரி ராமச்சந்திரா அவர்கள் தேசவிடுதலை சத்தியாக்கிரகம் நடை பெறப் பொருள் சேர்த்து வந்தார். சுமார் ரூ. 400 உடன் ஒரு சத்தியாக்கிரக முகாமுக்கு ரயிலேறிச் சென்றபோது அவர் பை கிழிக்கப்பட்டுப் பணம் பறி போய் விட்டது. இது விஷயம் கேட்ட ராஜாஜி, பணத்தில் இப்படி அஜாக்கிர தையாக இருக்கக்கூடாது என்று ஆசிரம ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது சேலம் நகரத்தில்தான் Imperial Bank of India என்ற அரசாங்க வங்கியும் மற்றும் சில Scheduled வங்கிகளும் மட்டுமே இருந்தன. ஆசிரமத்தின் வாராந்திரத் தேவை சுமார் ரூ. 10000 வரை ஆகும். இந்தப் பணத்தை வாரந்தோறும் காலணா, அரையணா, ஒரு அணா, கால் ரூபாய், அரை ரூபாய் நாணயங்க ளாகவும், ஒரு ரூபாய், ஐந்து, பத்து ரூபாய் நோட்டுக்களாகவும், ரூபாய் பத்தா யிரத்திற்கும், பெற்று வர வேண்டும். காலையிலேயே வண்டியைக் கட்டிக் கொண்டு, திருச்செங்கோடு வந்து, வண்டியை ஸ்ரீனிவாசய்யங்கார் வீட்டு முன் விட்டு, அவர் வீட்டு வேலைக்காரரிடம் ஒப்படைத்து, ஆசிரம ஊழியர் ஒருவர் வண்டிக்காரருடன் சேலம் சென்று பணம் பெற்று, பஸ் ஏறி, திருச்செங்கோடு வந்து, ஆசிரமம் வரவேண்டும். அநேகமாக இருட்டுக்கு முன், ஆசிரமம் வந்து சேர வேண்டும். சில நாட்களில் இரவு பத்து மணி வரை கூட ஆக விடும். ஆகவே அது பெரிய Risky விஷயம். ராஜாஜியவர்கள்,இதை மனத்தில் வைத்துக் கொண்டும் ஆசிரம ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் மற்றொரு சந்தர்ப்பத்தில் சென்ட்ரல் ஸ்டேஷனில் அவருடைய ஜிப்பாவின் பை கத்தரிக்கப்பட்டு ரூ 400 வரை பிக் பாக்கெட் அடிக்கப்பட்டு விட்டது. உடனே ரட்டன் பஜார் கதர் வஸ்திராலயத்திற்கு தகவல் அனுப்பி பயணம் தடை படாமல் நடந்தது. ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா?
அக்டோபர் நவம்பர் தீபாவளி மாதம். ஆதலால் என்னை ஆசிரமம் மேனேஜர் சிறை செல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டார். தீபாவளிக்கு சரக்குகள் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அக்டோபர் கடைசியில் 'அம்மாவுக்கு உடல்நிலை ஆபத்தாக உள்ளது. உடனே புறப்பட்டு வரவும்.' என்று தந்தி வந்தது. உடனே வண்டியில் திருச்செங்கோடு சென்று “புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறேன்' என்று தந்தி கொடுத்துவிட்டு சங்கரிக்கு பஸ்ஸில் சென்று ரயிலில் ஈரோட்டை அடைந்தேன். ஈரோடு - திருச்சி ரயில் பிரிவில் பாலம் உடைப்பு என்றும், கோவை - பொள்ளாச்சி - திண்டுக்கல் வழியாகத்தான் ரயிலில் செல்ல முடியுமெனத் தெரிந்தது. கோவைக்கு ரயில் ஏறினேன். இரவெல்லாம் ரயில் சந்திப்புகளில் ரயில் மாறி, காலை எட்டு மணிக்கு கோயில் பட்டி சேர்ந்து, பஸ் 11 மணிக்குப் பிடித்து 1 மணி சுமாருக்கு விளாத்திகுளம் எதிர்க்கரை சென்றடைந்தேன். ஆற்றில் மிகப் பெரிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. என்னை எதிர் கரையிலேயே சுமார் 1 1/2 மைல் கூட்டிச் சென்று, பரிசலில் ஊர் ஸ்மசானக்கரைக்குக் கூட்டிச் சென்றார்கள். என் தாயார் முன் தினம் இரவு பதினொரு மணிக்கே இறந்து விட்டாள். என் தந்தி அதிகாலையில்தான் அங்கு கிடைத்ததால் என் தாயின் உடலை ஸ்மசானத்துக்கு எடுத்துச் சென்று காலை எட்டு மணியிலிருந்து பிற்பகல் இரண்டு மணி வரை என் வருகைக்காகக் காத்திருந்தனர். தாயாரின் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்ததே என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். விசேஷங்கள் முடிந்து மீண் டும் நான் காந்தி ஆசிரமம் செல்ல நவம்பர் 15 தேதிக்கு மேல் ஆகி விட்டது.
ஒரு நிகழ்ச்சி முன்கூட்டி எழுத மறந்து விட்டேன். என் தாயார் மறைவின் பின்னணியில் இந்த நிகழ்ச்சிகள் நினைவில் மோதுகின்றன. எம்.கே. சுந்தர் ராமய்யர், என்னைச் சந்தித்ததும், (1930 ஜூலை கடைசி வாரத்தில் என்று நினைக்கிறேன்) பெரியகுளத்தில் வீரபாகு அல்லது வீரபத்திரன்-பெயர் சரியாக நினைவிலில்லை.-என்பவருடன் இணைந்து அங்குள்ள கிராமங்களில் உள்ள தேசபக்தர்களைச் சந்தித்து, கிராமப் பிரச்சாரம் செய்யும்படி அனுப்பினார். பெரியகுளம், வீரபாண்டி, (விக்கிரவாண்டியோ?), தேனி, சின்னமனூர், உத்தம பாளையம், சுருளிப்பட்டி, காமையகவுண்டம்பட்டி, கோம்பை, தேவாரம், மார்க்கையன்கோட்டை, போன்ற ஊர்களுக்கெல்லாம் சென்று, அரிக்கன்லைட், அல்லது தீவட்டிகள் வைத்துக்கொண்டு, ஊர் மக்களை 100, 200 பேர்கள் கூட்டி வைத்து, பாரதி பாடல்களைப்பாடி, எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல் வேன். அந்த அன்பரும் பேச்சாளரில்லை. ஏதோ பேசினோம். ஆனால் எல்லா கிராமங்களிலும் எங்களை அன்புடன் வரவேற்று உணவளித்து தங்க இடம் தந்து வேண்டிய சௌகரியங்களை செய்து கொடுத்தார்கள்.
என்னுடன் வந்த அன்பர், என்னை எல்லா இடத்திலும பிராமணன் என்று அறிமுகம் செய்து வைத்ததால், எனக்காக ஊர்வாசிகள் பிராமணர்கள் வீடுகளிலேயே உணவளிக்க ஏற்பாடு செய்து வந்தார்கள். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அன்பர் கேட்க வில்லை.
[(02 10 1984) (காந்தி ஜெயந்தி ) அண்ணல் காந்தியடிகள் 02 10 1869ம் தேதியில் பிறந்தார். இன்று அவருடைய 116 வது பிறந்த நாள். லால் பகதூர் சாஸ்திரியும் அக்டோபர் இரண்டாம் தேதிதான் பிறந்தார். அக்டோபர் இரண்டாம் தேதிதான் பெருந்தலைவர் காமராஜரும் அமரரானார்.]
பெரியகுளம் வட்டாரங்களில் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தும், போலீசார் எங்களுடன் தொடர்ந்து வந்தும் கூட எங்களிருவரையும் கைது செய்ய வில்லை. சுமார் பத்து பதினைந்து தினங்கள் வரை கிராமங்களில் பிரச்சாரம் செய்தோம். ஆகஸ்டு முதல் வாரம் திரு எம்.கே.எஸ். அவர்களிடம் சொல்லி விட்டு, விளாத்திகுளம் சென்றேன். என் தாயார், சகோதரர், அண்ணி மற்றும் நண்பர்களைச் சந்தித்தேன். சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பின் அவர்கள் என்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி கொண்டனர். ஆனால் என் தாயார் மட்டும் நான் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்று, தடை உத்திரவு போட்டு விட்டார். ஒரு வாரம் தங்கிய பின், மதுரை சென்று, எம்.கே.எஸ். அவர்களுடன், சிறை சென்றவர்கள் யார் யார் பட்டியல் தயாரிக்கச் சென்றேன். நான் விளாத்திகுளத்தில் இருந்து காலை சுமார் நாலரைக்குப் புறப்படும் முதல் பஸ்ஸில் சென்றேன். வண்டி போலீஸ் ஸ்டேஷன் முன் நின்றது. விளாத்திகுளம் சப் இனஸ்பெக்டர் முன் சீட்டில் ஏறிக்கொண்டார். எட்டையபுரத்தில் அவ்வூர் போலீஸ் சப் இனஸ்பெக்டர் முன் சீட்டில் ஏறிக்கொண்டார். அவர்கள் இருவரும் ரகசியமாகப் பேசிக் கொண்டதிலிருந்து அவர்கள் ஒன்பது மணிக்கு கோவில் பட்டி கதர் வஸ்திராலயத்தை ரெய்டு செய்யப் போவதாகப் புரிந்து கொண்டேன். கோவில்பட்டியில் இறங்கியதும் கதர் வஸ்திராலய நிர்வாகி வீட்டைத் தேடியலைந்து கண்டு பிடித்து ரெய்டு விஷயத்தைச் சொன்னேன். அப்போது காலை ஏழரை மணி இருக்கும். அவர் உடனே ஓடிச் சென்று ஆட்சேபகரமான தென போலீசார் கருதும் பல பிரசுரங்கங்கள், கடிதங்கள் முதலியவற்றை அப்புறப்படுத்தி விட்டார். ஆகவே போலீசார் ஒன்பது மணிக்கு மேல் ரெய்டு செய்தபோது, ஆட்சேபகரமான எந்த விஷயமும் அவர்கள் கையில் கிடைக்க வில்லை. இவ்விவரம் மதுரையில் பின் ஒரு நாள் கதரன்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்.
செப்டம்பர் மாதம் என்னுடன் கொண்டு வந்திருந்த சில காலணா பிரசுரங் களை என் சகோதரர் விலாசத்திற்கு புக் போஸ்டு மூலம் அனுப்பி அவைகளை தொழிலாளர்கள் மூலம் கிராமங்களில் பரவச் செய்யும்படி கேட்டுக் கொண் டிருந்தேன். இது சி.ஐ.டி க்காரர்களுக்குத் தகவல் தெரிந்து, அவர்கள் அந்த புக் போஸ்டையும் கடிதத்தையும் தபால்காரர் டெலிவரி செய்யும்போது பறிமுதல் செய்தனர். இதற்கென திருச்சியிலிருந்து இரண்டு போலீசார் தனியாக வந்தனர். இது நடந்த சில தினங்களுக்குப் பிறகு, ஒருநாள் இரவு, விளாத்திகுளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என் சகோதரரைச் சந்தித்து மறுநாள் காலை என் சகோதரர் வீட்டை ரெய்டு செய்யப் போவதாகவும், அதற்காக வெளியிலிருந்து ஸ்பெஷல் ஸ்குவாடு வந்து நாகலாபுரம் கேம்ப் சென்றிருக்கும் மாஜிஸ்ட்ரேட்டிடம் சர்ச் வாரன்டில் கையெழுத்து வாங்கப் போயிருப்பதாகவும், ரகசியமாகத் தெரிவித்திருந்தார். அது மகாலய பக்ஷமாதலால், அன்று என் வீட்டில் ஹிரண்ய ஸ்ரார்த்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரெய்டுக்கு வந்த போலீசார், வீட்டை சோதனை போட்டு, தேசியத் தலைவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள் உள்ள பல சிறு புத்தகங்கள், பாரதியார் கவிதைகள் போன்றவற்றை யெல்லாம் பறிமுதல் செய்து, Double Lock treasuryல் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். நல்ல வேளையாக ராகி எனக்கு எழுதிய கடிதங்கள், நான் என் சகோதரருக்கு அவ்வப்போது எழுதிய கடிதங்கள் எதுவும் அவர்கள் கையில் கிடைக்கவில்லை.
மகாலய தினத்தில் பல்வேறு ஜாதிக்காரர்கள், வீட்டில் சமையலறையிலும் புகுந்து சோதனை போட்டது என் தாயாரின் மனத்தை வெகுவாகப் பாதித்து விட்டது. அதன் காரணமாக அவருக்குப் பக்கவாத நோய் தாக்கி படுத்த படுக்கையாகி இரண்டு மூன்று வாரங்களில், 30 10 1930ல் நான் வீட்டை விட்டுச் சென்ற ஏழு மாதங்களில், தேக வியோகமாகி விட்டார். என் சகோத ரரையும் போலீசாரின் தூண்டுதலின் பேரில், டிபார்ட்மெண்டல் என்கொயரி எல்லாம் நடத்தி மிகுந்த தொந்திரவு அளித்து வந்தனர். இப்படியாக, நான் தேச சேவை சென்றது, என் குடும்பத்தாரையும் பாதித்தது. இந்த விவரங்களையெல்லாம் என் தாயார் இறந்த பின், என் சகோதரரும் மற்ற உறவினர்களும் சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
நான் திருச்செங்கொட்டில் காலை 11 மணிக்கு கொடுத்த தந்தி விளாத்தி குளத்தில் மறுநாள் காலைதான் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இரவு 9 மணி க்குக் கோவில்பட்டியில் புறப்படும் கடைசி பஸ் பத்தரை மணிக்கு விளாத்தி குளம் போய்ச் சேரும். அதில் நான் வரக்கூடும் என்று எதிர்பார்த் திருந்திருக்கின்றனர். நான் வரவில்லை என்று தெரிந்ததும் என் மூத்த சகோதரியின் கணவர், 'அவன் எந்த ஜெயிலில் அடைபட்டுக் கிடக்கிறானோ?' என்று கூறினாராம். அதைச் செவி மடுத்த என் தாய், 'ஹா' என்று பெருமூச்சு விட்டு, அவர் ஆவி பிரிந்து விட்டதாம். என் தந்தியை இரவே தபாலாபீஸ் காரர்கள் என் வீட்டில் சேர்த்திருந்தால், ஒருக்கால் என் தாயார் அன்று இரவு இறந்திருக்க மாட்டாரோ என்று, எண்ண இடமிருக்கிறது. நிற்க.
நான் என் தாயார் கிரியைகளை முடித்துக்கொண்டு ஆசிரமத்துக்கு 1930 நவம்பர் மூன்றாவது வாரத்தில் பதினைந்து தேதிக்கு மேல் வந்து சேர்ந்தேன். தீபாவளி மாதத்தில் நடந்த அதிக வேலைப்பளு கணக்கு வழக்குகளைச் சரி பார்க்கும் வேலையில் ஈடுபட்டேன். தேசிய இயக்கம் சற்று வேகம் குறைந்தது போல் தோன்றியது. வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கும் காந்திஜிக்கும் இடையே கடிதத் தொடர்பு பேச்சு வார்த்தைகள், ஆரம்பித்து விட்டன. முடிவில் காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டு விடுதலைப் போர் வீர்ர்கள் - அகிம்சாவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆசிரம ஊழியர்கள் பலரும், பல கால கட்டங்களில், முன்னரே விடுதலையானவர்கள் போக, எஞ்சியுள்ளவர்களும் விடுதலையாகி வந்தனர். அக்டோபர் மாதம் பெய்த பெரு மழையினால் வறட்சிப் பகுதியான காந்தி ஆசிரமத்திலும் பசுமைத் தோற்றம் விளைந்தது. இது மிகுந்த மன எழுச்சியைத் தந்தது.
காந்தி - இர்வின் ஒப்பந்தத்தைப் பிரசாரம் செய்வது என்று கோவை
மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாட்டைப் புஞ்சைப் புளியம் பட்டி சென்டரில் நிர்வாகியாக இருந்த திரு சி ஏ அய்யாமுத்து ஏற்பாடு செய் திருந்தார். ஒரு வேன் ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டோம். ராஜாஜி, என். எஸ். வரதாச்சாரி, கே.சந்தானம், ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி), சி ஏ அய்யா முத்து, நான், மேலும் 2, 3 பேர்கள் இருந்தோம். காலணா பிரசுரங்களை விநி யோகிப்பது என் வேலை. ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர், புளி யம்பட்டி, சத்தியமங்கலம் போன்ற ஊர்களுக்கும் இடையிலுள்ள பல கிராமங்க ளுக்கும் சென்றதாக நினைவு. கோபியில் திரு நல்லமுத்து கவுண்டர் (முத்து வேலப்ப கவுண்டர்) என்பவர் வீடு மிகப் பெரியது. பிற்பகல் மூன்று மணியள வில் அங்கு போய்ச் சேர்ந்தோம். இளநீர், நுங்கு, எலுமிச்சம்பழ சர்பத் போன்ற வைகள் அங்கு சென்றதும் தரப்பட்டன. பின்னர் 2, 3 வகை இனிப்பு, கார பதார்த்தங்களுடன் விமரிசையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. ராஜாஜி வேடிக் கையாக, 'எதற்காக இவ்வளவு பெரிய ஏற்பாடு?' என்று சொல்லவும், கவுண்ட ரவர்கள், 'சிறையில் வாடி வதங்கி வந்திருப்பவர்களுக்கு ஒரு மாறுதலுக்காகத் தான்' என்று கூறினார்.
சத்தியமங்கலத்திற்கு காலை 9 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அந்த ஊர் சினிமா கொட்டடகையில் பிரசாரக் கூட்டம் நடந்தது. ஏராளமாக மக்கள் கூடி ஆரவாரமாக வரவேற்பு அளித்தனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் திருமதி ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள். அம்மையாரும் சத்தியமங்கலம் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டார். சத்தியமங்கலத்தில் சிறந்த தேசபக்தர்களான நாராயண சாஸ்திரி சகோதரர்கள் வீட்டில் எங்களுக்கு பகல் விருந்து. எல்லோரும் குளித்து உடை மாற்றி வந்து உட்கார்ந்தோம். ராஜாஜிக்கு ஒரு இலை. ராஜாஜி ஸ்நானம் செய்துவிட்டு வந்து, பலகையில் அமர்ந்தார். பக்கத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி, திருமண் பெட்டி, வெள்ளி டம்ளரில் தண்ணீர் எல்லாம் இருந்ததைக் கவனித்த ராஜாஜி, சிரித்துக கொண்டே 'நீங்கள் வைஷ்ணவர் இல்லையே!' என்றார். உடனே நாராயண சாஸ்திரியின் வயதான தாயார் 'நீங்கள் திருமண் இட்டுக் கொள்வதைப் பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது.' என்றார். ராஜாஜி சிரித்துக் கொண்டே திருமண் குழைத்து, மெல்லியதாக வெள்ளைக் கோடுகளும், நடுவில் ஸ்ரீ சூர்ணக் கோடும் இட்டுக் கொண்டு, அந்த அம்மாளைத் திருப்திப்படுத்தினார். ராஜாஜி காந்திய அரசியலில் பங்கேற்ற பின் அவர் முகத்தில் நாமம் இட்டுக் கொண்டது மிகவும் அபூர்வமாக இருந்ததால், அன்று நாங்களும் அந்த முகத்தைப் பார்த்து, மிகவும் ரசித்தோம். வேனில் சென்று கொண்டிருந்த போது, ப்ளேட்டும், ஸ்பூனும் சுகாதாரமான போதும், இலையும் அவரவர் கையும்தான் அதிக சுகாதாரமானவை என்பது போன்ற சுவையான discussion நடந்தது.
நான் 1930 ஜூன் மாதத்தில் பெங்களூரிலிருந்து ஆசிரமம் திரும்பியபோது, அங்கு, க.பெ. சங்கரலிங்கம் (நாடார்) எனபவர், வந்து சேர்ந்திருந்தார். கல்கியவர்கள் ஒரு கடிதத்துடன் எங்கள் இருவரையும் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையவர்களைச் சந்தித்து அவர் அடுத்த சர்வாதிகாரியாக இயக்கத்தை நடத்த சம்மதிக்கிறாரா எனத் தெரிந்து வர அனுப்பினார். அவர், திரு என். நாகராஜ அய்யங்கார், கூடுதுறை கே.வி. வெங்கடாசல ரெட்டியார் போன்றோரிடம் எங்களை அழைத்துச் சென்று, ஆலோசித்த பின், தற்சமயம் சௌகரியப்படவில்லையே என்று சொல்லி விட்டார். அதன் பின்னர்தான் மதுரை டாக்டர் பிச்சமுத்து அம்மாள் சர்வாதி காரியாக நியமிக்கப்பட்டார் என நினைக்கிறேன்.
காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்கு முன் ஆசிரமத்தில் நாங்கள் சிலர் ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்து பார்க்கத் தீர்மானித்தோம். 1930 ஜனவரி 17ந் தேதி காலை ஆறு மணியிலிருந்து, 24ம் தேதி மாலை ஆறு மணி வரை, 168 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தோம். எங்களில் 2, 3 பேர்கள் மட்டுமே 6 நாட்கள் பூர்த்தி செய்தோம். ஏழாவது நாள் 23ம் தேதி காலை ஒன்பது மணியளவில், கே.சந்தானத்தின் மனைவி குளிக்கப் போனவர் வீடு திரும்பவில்லையென்று, அவருடைய மூத்த மகன் கஸ்தூரி (11 வயது பையன்) வந்து சொன்னான். உடனே தேடப் புறப்பட்toம். அப்போது ஆசிரமத்தில் இருந்த வால் கிணறு என்ற பெரிய கிணற்றில் (ஏழு ஏற்றக் கிணற்றில்) துணிகள் எல்லாம் துவைத்துப் பிழிந்து வைத்திருப்பதும், சோப்புப் பெட்டி திறந்து உபயோகப்பட்டிருப்பதுவும் , மஞ்சள் உரைத்து இருப்பதும் தெரிந்தது. ஆகவே ஒருக்கால் கால் வழுக்கி மூழ்கிப் போயிருக்கக் கூடும் என்று சந்தேகித்து தேடத் துவங்கினோம். முப்பது அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. ஆதலால் மூழ்குவது சிரமம். ஆயினும் பெரிய மூங்கில் கழிகளை வைத்துத் துழாவிப் பார்த்தபோது உடல் தட்டுப்பட்டது. அந்த இடத்தில் மூழ்கி உடலை மேலே கொண்டு வரப்பட்டது. காது மூக்கு போன்ற மெல்லிய திசுக்களை நண்டு அரிக்க ஆரம்பித்து விட்டது. போலீசுக்கு உடனே வந்து பார்க்கும்படி சொல்லியனுப்பினோம். அவர்களும் வந்து பார்த்து பஞ்சாயத்தார்கள், தவறுதலாகக் கால் வழுக்கி மூழ்கி விட்டதாக முடிவுக்கு வந்து ரிக்கார்டு செய்தார்கள். கே. சந்தானம் அப்போது வேலூர் சிறையிலிருந்தார். 'தகனம் செய்து விடவும்; வருவ தற்கில்லை.' என்று தந்தி வந்து விட்டது. மாலை ஏழு மணிக்கு திருப்பூரிலிருந்து ஸ்ரீ என். எஸ். வரதாச்சாரி வந்த பின் ஆசிரமத்தின் நிலப் பகுதியிலேயே தகனம் செய்யப்பட்டது. மறைந்த அந்த அம்மாளுக்கு நான்கு புதல்வர்களும் ஒரு பெண்ணும் - 11, 9, 7, 5, 2 என்ற வயதுகளில் குழந்தைகள். அவர்களையெல்லாம் மறு நாள் காலையில் வந்த திரு ராஜகோபாலய்யங்கார் - Retired Engineer - சந்தானத்தின் மாமனார் - வந்து மதனப்பள்ளிக்கு அழைத்துச்சென்றார்.
(06 10 1984) ஸ்ரீ கே. சந்தானம் ஆசிரமப் பணிக்கு மீண்டும் மேனேஜராக வரவில்லை. குழந்தைகள் ஐவரையும் காப்பாற்றும் பொறுப்பும் அவர் மீது விழுந்ததால், அவர் Indian Express ஆசிரியராக சென்னையில் குடியேறினார். குடும்ப பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டே அரசியலிலும் மத்திய ரயில்வே அமைச்சர், லெஃப்டினெண்ட் கவர்னர், மற்றும் பல்வேறு கமிஷன்கள் தலைவர், காரியதரிசி பதவிகளும் வகித்தார். 'சுயராஜ்யா' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகவும் சில காலம் இருந்தார். காந்திஜி, ராஜாஜி, நேருஜி போன்ற வர்களை வெகுவாக மதித்தவராயினும், அவர்களின் போக்கு தனக்குப் பிடிக்க வில்லையாயின் அதை வெளிப்படுத்தத் தயங்கியதே யில்லை. அவருக்குப் பதவி என்றுமே ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை. அவர் தன் பெண் அம்மணிக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்மணிக்கு ஏழெட்டு பெண்கள் என்றும் எல்லாப் பெண்களுக்கும் திருமணங்கள் நடந்து விட்டதாகவும் , அம்மணி இப்போது கணவர் மறைவுக்குப்பின் வாழ்ந்து வருவதாகவும் அறிகிறேன். சந்தானத்தின் புதல்வர்கள் நால்வரில் ஒருவர் (ஸ்ரீனிவாசன் என்று நினைக்கிறேன்) - சின்ன வயதிலிருந்தே சற்று உடல் நலம் இல்லாதவர் - சந்தானம் இருக்கும்போதே கால மாகி விட்டார். மற்ற மூன்று புதல்வர்களில் - எஸ்.கஸ்தூரி கப்பல் துறை யிலும், டாக்டர். எஸ்.ராஜகோபால் விஞ்ஞான பௌதிகத்துறையிலும், எஸ். ராமானுஜம் பத்திரிகை விளம்பரத்துறையிலும், சிறப்புடன் இருந்து வருகிறார்கள்.
காந்தி - இர்வின் ஒப்பந்தத்தால், சத்தியாக்கிரக இயக்கம் வாபஸ் பெறப் பட்டது. கள்ளுக்கடைகளில் சாத்வீக மறியல், தலைச் சுமையளவு உப்பு எடுத்துச்சென்று விற்பனை செய்தல், போன்ற சலுகைகளை மக்கள் வெகுவாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். சிறை சென்ற ஆசிரம ஊழியர்கள் அனைவரும் விடுதலையாகி வந்து விட்டதால், ஆசிரம வேலைகள் முன்னை விட அதிக அளவில் விஸ்தரிக்கப்பட்டு நடந்தன. ஆசிரமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மூன்று நான்கு மாதங்களுக்கு முன் பெரு மழை பெய்ததால் எல்லாக் கிணறுகள், குட்டை குளங்கள் பெருக்கெடுத்து ஓடின. அன்பர் சிவகுரு நாதன் நெல், வாழை, பப்பாளி போன்றவை சாகுபடியில் தீவிரமாக இறங்கி, நல்ல மகசூல் எடுத்தார். திராட்சைக் கொடியும் பறக்கவிட்டு நல்ல புளிப்பான திராட்சைப் பழங்களும் விளைவித்தார். வானம் பார்த்த பூமியில் கம்பு, சோளம், துவரை, பயறு, போன்றவையும் பயிரிடப்பட்டு வெற்றி கண்டோம். குடியானவப் பெண்மணிகளுக்கு, காடு, தோட்டம் வயல்களில் வேலை போது மானதாக இருந்ததால் நூல் நூற்பு வேலை பாதியாக குறைந்து விட்டது. பயிர் சுபிட்சம் அப்பகுதிகளில் ஐந்தாறு ஆண்டு களுக்கு ஒரு முறைதான் வரும் அது இந்த 1931 ம் ஆண்டில் கிடைத்தது.
8, 10 மணி நேரம் தினமும் நூல் நூற்றாலும் ஆறு, ஏழு நாட்களுக்கும், சேர்த்து அவர்கள் பெறக்கூடியது, பதினைந்து அணா அல்லது ஒரு ரூபாய்தான். ஆனால், அன்று வாரம் ஒரு ரூபாயில் ஒருவர் வயிற்றுக்குப் போதுமான உணவு தானியங்கள் வாங்கவும், இதர உப்பு, புளி வகைகள், வெற்றிலை, பாக்கு, புகை யிலை வாங்கவும் முடிந்தது. அந்த நாட்களில், எல்லா சாமான்களும் கொள்ளை மலிவு; ஆயினும், பட்டினியால் வாடியவர்களும் ஏராளமாக இருந்தனர்.
(09 10 1984) ஆகவே நூற்புத்தொழில், கிராமத்து மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகவே இருந்தது. காந்தி ஆசிரமத்தை, அதைச் சுற்றியுள்ள இருபது மைல் சுற்றளவிலுள்ள கிராமத்து மக்கள் விசேஷமாகப் போற்றினர். நாள் ஆசிரமத்தில் சேர்ந்த 1930ம் ஆண்டில் சுமார் 10000 நூற்போர்களும் சுமார் நானூறு நெசவாளரும், சலவை செய்தல், சாயம் தோய்த்தல், அச்சிடுதல் போன்ற தொழில்களிலுமாக சுமார் 500 குடும்பங்கள் பயன் பெற்றனர். இந்த வேலைகளில், எனக்கு இடப்பட்ட பல்வேறு வேலைகளைச் செய்து வந்தேன்.
தேசிய இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், ஆங்காங்கே அரசுக்கும் தொண் டர்களுக்கும் சிறு சிறு மோதல்கள் இருந்துகொண்டு வந்தன. 1931ல் வருடக் கடைசியில் லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூட்டப் பட்டது. பல்வேறு துறைகள், அரசியல் கட்சிகள், தங்கள் பிரதிநிதிகள் பலரைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ், தன் ஏக பிரதிநிதியாக அண்ணல் காந்தியடிகளைத் தேர்ந்தெடுத்தது. காந்திஜி சென்று எதிர்பார்த்தபடியே வெறுங் கையுடன் திரும்ப வேண்டியதாயிற்று. 1932 ஜனவரி ஆரம்பத்திலிருந்தே நாட்டில் மீண்டும் அகிம்சை, சத்தியாக்கிரகம், அரசின் விரோதப் போக்கினால் தோன்றி காந்திஜி பம்பாய் துறைமுகத்தில் வந்திறங்கும் முன்னரே பல தேசியத் தலைவர்கள், கைது செய்யப்பட்டு சிறைகளுக்கும் அனுப்பப்பட்டனர். அண்ணல் வந்து இறங்கியதும் அரசைக் கண்டித்து அறிக்கைகள் விட்டார். அவரும் கைது செய்யப்படடார். நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தேசபக்தர்கள், தாங்களாகவே அன்னிய துணிக்கடைகள் முன் மறியல், கள்ளுக்கடை மறியல், பள்ளி கல்லூரிகள் முன் மறியல், போன்ற பல வழிகளில் ஆயிரக்கணக்கில் சிறை சென்றார்கள். நான் என் ஜில்லா போர்டு வேலையை ராஜினாமா செய்து ஆசிரமத்துக்கு வந்ததே வேதாரணியம் சத்தியாக்கிரகத்தில் ஒருவனாகப் பங்கேற்று சிறை செல்ல வேண்டுமென்ற நோக்கம்தான். 1930 - 31 இல் எனக்கு சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1932ம் வருடம் இயக்கத்திலாவது சிறை சென்றுவிட வேண்டுமென்ற உள்ளத்துடிப்பு வெகு பலமாக ஏற்பட்டு விட்டது. ஆகவே ஆசிரமப் பணியிலிருந்து விடுபட்டு நாமக்கல்லில் சத்தியாக் கிரகம் செய்து சிறை செல்வதென்று தீர்மானித்து விட்டேன். அது பலன் அளித்தது. 1932 பிப்ரவரி மாதம் 15ந் தேதி வாக்கில், சத்தியாக்கிரகம் செய்து சிறை புகுந்தேன். அதன் விவரம் மேலும் எழுதுவேன்.
(13 10 1984) பெங்களூர் பிரம்மச்சாரி ராமச்சந்திரா அவர்களைப் பற்றிய ஒரு குறிப்பு நினைவுக்கு வருகிறது. அதை இப்போதே எழுதி விடுகிறேன். பிரம் மச்சாரி கிரஹஸ்தர் ஆனார். அதைப்பற்றி நான்றிந்த வரலாறு இதுதான். திரு ராமச்சந்திரா தினம் துவைத்த ஆடைதான் அணிவார். சலவை செய்தவை அணிவதில்லை. முழங்காலளவு நாலு முழத்துண்டு இடுப்பில். கை வைத்த பனியன் உடலில். மேலே மற்றொரு நாலு முழத் துண்டு. எளிய தோற்றம். எவரையும் கவர்ந்திழுக்கும் புன்சிரிப்பு முகத்தில் எப்போதும் தவழும். பல பெரிய மனிதர்கள் செல்வந்தர்கள் குடும்பங்களில் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துவதை நான் நேரில் கண்டவன். அவருடைய தியாகத் தன்மையும் எளிய வாழ்க்கையும் அவருடன் நட்பு கொள்ள பலர் விரும்பியதில் ஆச்சரியமில்லை. மங்களூரைச் சேர்ந்த நடுத்தர வயது தம்பதியர் அவரிடம் பெரு மதிப்பு வைத்து அவரிடம் அடிக்கடி வந்து சம்பாஷித்துச் செல்வதுண்டு. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ராமச்சந்திராவுடன் அவர்கள் நட்பு அதிகரித்து வந்தது. அந்தப் பெண்மணிக்கு ஒரு கவர்ச்சி நிலை யேற்பட்டது. அந்தப் பெண்மணி சற்று Hysterical கூட. மங்களூர்காரர்களில் பல பெண்மணிகள் சுயேச்சை உணர்வுகள் கொண்டவர்கள். இந்தப் பெண்மணி ராமச்சந்திராவுடன் தங்கி விட தீவிரமாக விருப்பம் கொண்டு விட்டார். அவருடைய கணவரும் இவரை மாற்ற முடியாது என்ற புரிந்து கொண்டு ராமச்சந்திராவுடன் அவர் இருந்து வர அனுமதித்து விலகிக் கொண்டார். அந்தப் பெண்மணியைக் காப்பாற்றும் பொறுப்பு ராம சந்திராவுக்கு ஏற்பட்டது. நாடு விடுதலை பெற்ற பின் ராமச்சந்திரா அவர்கள் பாரத் சேவக் சமாஜத்தில் இணைப்பு அதிகாரியாகப் (Liason Officer) பதவியேற்று பல நாடுகளுக்கும் சென்று வந்தார். சில மாதங்களுக்கு முன் (Hindu Obituary Column)ல் மேஜர் டி. ராமச்சந்திரா காலமான செய்தியைப் படித்தேன். நானறிந்த வரை இந்தத் தம்பதியருக்கிடையேயான உறவு, சாதாரண மனிதர்களைப் போல, வெறும் காம இச்சையினால் விளைந்ததில்லை என்றே, நம்புகிறேன். இதுவே அதிதீவிர பிரம்மச்சாரி கிரஹஸ்தரான கதை. இறைவன் படைப்பில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழவே செய்கின்றன.

என் முதல் சிறைவாசம்
நான் காந்தி ஆசிரமத்தில் சேர முடிவு செய்ததே அதன் மூலம் சத்தியாக் கிரகம் செய்து சிறை செல்வது என்ற எண்ணத்தில்தான். உப்பு சத்தியாக்கிரக காலத்தில் 1930 - 31 இல் எனக்கு சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1932ம் வருட இயக்கத்தில் ஆங்காங்கே பலர் சிறை சென்று கொண்டிருந்தனர். ஆசிரம ஊழியர்கள் சிலரும் சிறை சென்று விட்டனர். ஆகவே என்னுள் சிறை செல்லும் எண்ணம் பெருங்கனலாக மூண்டது. நாமக்கல்லில் வெ. இராமலிங்கம் பிள்ளை என். நாகராஜ அய்யங்கார், கூடுதுறை கே.வி.வெங்கடாசல ரெட்டியார், முகம்மது ஊஸ்மான் போன்றவர்கள், தங்களுடன் 3, 4 தொண்டர்களைச் சேர்த்துக் கொண்டு சிறை சென்று விட்டனர். இதையெல்லாம் நாமக்கல்லில் நான் இருந்து பார்த்து வந்தேன். அவர்கள் அந்த ஊர்த் தலைவர்கள் . அவர்களை விசேஷ தொந்திரவு கொடுக்காமல் கைது செய்து தண்டனை அளித்து சிறைக்கு அனுப்பி விட்டார்கள். நாமக்கல்லில் இயக்கம் சற்று சுணக்கம் கண்டது.
திரு கே மாரப்ப கவுண்டர் நாமக்கல்லில் காந்தி ஆசிரம கதர் விற்பனை ஏஜன்டாக இருந்தார். அவருடன்தான் நான் தங்கியிருந்தேன். இயக்கத்தை மேற்கொண்டு எப்படித் தொடர்ந்து நடத்துவது என்று அங்குள்ள தேச பக்தர்கள் ஆலோசித்து வந்தார்கள். நாமக்கல் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே காங்கிரஸ் ஆபீஸ். அங்கு தினமும் கூடி ஆலோசித்தோம். ஒரு குறிப்பிட்ட நாளில் சில பேர் சேர்ந்து தேசிய பாடல்களைப் பாடிக் கொண்டு ஊர்வலமாகச் சென்று கடை வீதியில் அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வதெனத் தீர்மானித்து, மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரி, நாமக்கல் இன்ஸ் பெக்டர் முதலியோருக்கு தேதி, இடம், நேரம் எல்லாம் குறிப்பிட்டுக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தோம். 1932 பிப்ரவரி மாதம் முதல் அல்லது இரண்டாவது சனிக்கிழமை (சரியான தேதி நினைவில்லை) பிற்பகல் 3 30 மணிக்கு மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்படுவதாக அறிவிப்பு செய்திருந்தோம்.
எங்கள் குழுவுக்குத் தலைவர் 1) திரு. வரதராஜ முதலியார். இவர் நாமக்கல்¢லில் யூனியன் பிரஸ் என்ற அச்சகத்தின் உரிமையாளர். 2) திரு. சந்தான முதலியார் - இவர் சில தறிகள் வைத்து நடத்தி வந்தார். 3) திரு. கணபதி முதலியார்- இவர் தவில் வித்வான். இன்று உலகப்புகழ் பெற்று விளங்கும் நாகஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் தாய் மாமன் முறையானவர். 4) அடியேன் அ.கிருஷ்ணன் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்.) 5) திரு.அப்துல் கஃபார் - இவர் முகம்மது ஊஸ்மானின் (ஏற்கனவே சிறை சென்றவர்) இளையவர். 6) திரு. அனுமந்த ராவ். (ஹனுமி என்று அழைக்கப்பட்டவர்), பின்னாட்களில் லாரி புரோக்கராகவும், லாரி டிரைவராகவும் வேலை பார்த்தவர். 7) திரு.என் ஏ. கிருஷ்ணமூர்த்தி - இவர் பின்னாட்களில் எல். ஐ.சி ஏஜன்டாக இருந்தார். 8) திரு.காசி விஸ்வநாதப் பண்டாரம் - (இவர் பின்னாட்களில் திராவிட கழகத்தில் சேர்ந்தார்). (இன்று 13 10 84 இல் என்னைத்தவிர முதல் ஆறு பேர்களில் ஐவர் பல்வேறு காலகட்டங்களில் மறைந்து விட்டார்கள். 7, 8 நம்பர்களைப் பற்றிய தகவல் இன்று எனக்குத்தெரியவில்லை.) முதல் மூன்று பேர்களும் அந்நாளி லேயே நாற்பது வயதைத் தாண்டியவர்கள். குடும்பஸ்தர்கள். மற்றவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள்.
நாங்கள் அறிவிப்பு அனுப்பியதின் பேரில், அந்த மூன்று பெரியவர்களையும் தனித் தனியாக அவர்களின் வீடுகளில் சென்று, காவல் துறையினர் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இனி யாரா யிருந்தாலும் கைது செய்ய வேண்டாமென்றும் அவர்களை அடித்துத் துரத்த வேண்டுமென்றும் மேலிடத்து உத்திரவு வந்திருப்பதாகவும், ஆகவே தங்களுக்குத் தர்மசங்கடமான நிலையிருப்பதாகவும், சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென் றும், இன்ஸ்பெக்டர் சொல்லி யனுப்பியதாகவும் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக் டர் ரங்கசாமி அய்யங்கார், என்னை மாரப்ப கவுண்டர் வீட்டில் சந்தித்து 'ஏம்ப்பா! எங்க கழுத்தை அறுக்கிறே!, திருச்செங்கோட்டிலே சத்தியாக்கிரகம் பண்ணுவதுதானே, இங்கு ஏன் வந்து தொந்தரவு கொடுக்கிறே? உன் பிடிவாதத்தால்தானே அந்த மூன்று முதலியார்களும் பிடிவாதமாக இருக்கிறார் கள்! உங்களையெல்லாம் அடித்துத் துரத்தும்படி சர்க்கார் உத்திரவு. இன்ஸ்பெக் டரும் தெய்வ பக்தி உடையவர்; சங்கடப்படுகிறார். எனக்கோ ஒரே பிள்ளை. உங்களையெல்லாம் எப்படி நானடிப்பேன்? ஆகையினால் அந்த முதலியார்களிட மும் சொல்லி திட்டமிட்ட சத்தியாக்கிரகத்தைக் கைவிடுங்கள்' என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டார். நாங்கள் முன் வைத்த காலைப் பின் வாங்குவ தில்லையென்று தீர்மானித்து விட்டோம்.
(14 10 1984) நாமக்கல் ஊரில், சனிக்கிழமை வாராந்திர சந்தை தினம். நாங்கள் திட்டமிட்டபடி பிற்பகல் மூன்றரை மணிக்கு 8 பேர்களும், 'வந்தே மாதரம்!' 'அல்லாஹூ அக்பர்' 'மகாதமா காந்திஜிக்கு ஜே!' என்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டோம். அதற்கடுத்த பத்து கஜ தூரத்தில், கிராம முன்சீஃப் சாவடி, PWD Section Office, Girls High School போன்றவை இருந்தன. அன்பர்கள் சுமார் 200 பேர்களுக்கு மேல் கூடியிருந்து எங்களை உற்சாகப்படுத்தி, வழியனுப்பி வைத்தனர். ஆனால், PWD Section Office முன்னிலையில், ஒரு மேஜை போட்டு அதன்மேல் ஒரு நாற்காலியில், சப் மாஜிஸ்ட்ரேட் திரு ராமஸ்வாமி நாயுடு உடகார்ந்திருந்தார். அவருக்கு இடப்புற மும், வலப்புறமுமாக போலீஸ் இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தனர். 16 போலீஸ்காரர்கள் போலீஸ் உடையில், ரோட்டை மறித்து சுவர் வைத்தாற் போல் கையில் அரை அங்குல விட்டமும் நாலடி நீளமும் உள்ள பிரம்புகள் கையில் தாங்கி நின்று கொண்டிருந்தனர். சாதாரண உடையில் சி.ஐ.டி. போலீஸ்காரர்கள் சிலர் கூட்டத்தினிடையே கலந்து நின்றனர். போலீஸ் ரைட்டர், சப்மாஜிஸ்ட்ரேட் ஆபீஸ் குமாஸ்தாக்கள் இருவர், கையில் நோட்டுப்புஸ்தகங்களுடன் நின்று கொண்டிருந்தனர். எங்களை மேலே செல்லவொட்டாமல், 16 போலீசாரும், நின்று கொண்டனர். அவர்களை நெருங்கியதும் ஒரு போலீஸ் விசில் பெரிய சத்தத்துடன் கேட்டது. உடனே சப் இன்ஸ்பெக்டர், “இது சட்ட விரோதமான செயல். 144 சட்டத்தை மீறுகிறீர்கள். ஐந்து நிமிடத்தில் நீங்கள் கலைந்து செல்லாவிடில், உங்களை அடித்துத் துரத்துவோம்.” என்று உரத்த குரலில் கூறினார். “சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்; இனி அஞ்சிடோம்!” என்ற பாரதி பாடலை மிக ஆவேச உணர்ச்சியுடன் நான் பாடினேன். எல்லோரும் சேர்ந்து 'அச்சமில்லை! அச்ச மில்லை' என்ற பாடலை பாடிக் கொண்டும், கோஷங்கள் இட்டுக் கொண்டும், நின்றிருந்தோம்.
ஐந்து நிமிடங்கள் சென்றதும், மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்றார். உடனே 16 போலீஸ்காரர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் எட்டு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித்தார்கள். நாங்கள் நின்று கொண்டே அடிகளை வாங்கிக்கொண்டு, கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந் தோம். என்னைத் தவிர மற்ற ஏழு பேர்களும், உள்ளூர்வாசிகள். ஆகவே அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்து அவர்களை இழுத்துச் சென்றார்கள். ஆனால் முதல் மூன்று பெரியவர்கள் மட்டும் “செத்தாலும் திரும்ப மாட்டோம்.” என்று உறுதியாகக் கூறி விட்டனர்.
15 நிமிடங்கள் ஆனதும், சப் இன்ஸ்பெக்டர் 'ஸ்டாப்' என்று சத்தம் கொடுத்தார். உடனே 16 போலீஸ்காரர்களும் அடிப்பதை நிறுத்தி விட்டு, முன் போல் வழி மறித்து சுவர் வைத்தால் போல் நின்று கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் 'கலைந்து போகும்படி' சொன்னார். 15 நிமிடங்கள் இடைவெளிக்குப் பின், மீண்டும் மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்று குரல் கொடுத்தார். 16 போலீஸ்காரர்களும் மீண்டும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் எட்டு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித் தார்கள். உடனே நாங்கள் தரையை முத்தமிட்டவாறு ரோட்டில் படுத்துக் கொண்டோம். முதல் தடவை, தலை, கண், காது, உடல் முன் பின் பக்கங்கள், எல்லாப் பகுதிகளிலும் அடிகள் விழுந்தன. இத்தடவை உடலின் பின் பகுதி களில மட்டுமே அடிகள் விழுந்தன. அது திருச்சி - சேலம் நெடுஞ்சாலை; திருச் செங்கோடு - நாமக்கல் ரோடு. ஆகவே, அங்கங்கே பஸ்கள், வண்டிகள், தட்டாரத் தெரு வழியாகத் திருப்பி யனுப்பப்பட்டன. சந்தை தினமானதால், 5 மணி யளவில், 5000க்கும் மேறபட்ட கிராமத்து மக்கள், ஆண் பண்கள் கூடிவிட்டனர். ”முதலியாரே! உத்தரவு கொடு! - இவங்கள் என்ன, முப்பது நாப்பது பேர்கள் தானே, நாங்கள் நினைத்தால் இவர்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடுகிறோம். இந்தக் கணறாவியைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருப்பதா?” என்று கூச்சல் போட்டனர். வரதராஜ முதலியார் கையெடுத்துக் கும்பிட்டபடியே, ஆத்திரமடைந்துள்ள மக்களைப்பார்த்து, “அப்படி ஏதும் அசம பாவிதமாகச் செய்து விடாதீர்கள். இது சத்தியாக்கிரகம். நீங்கள் பலாத் காரத்தில் இறங்கினால் காந்தியடிகள் மிகுந்த வேதனைப் படுவார். ஆகவே இந்த சத்தியாக்கிரகம் வெற்றி பெற, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று உரத்த குரலில் கூறினார். மாஜிஸ்ட்ரேட், போலீஸ்காரர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடமான நிலை உண்டாகி விட்டது. மீண்டும் இரண்டு முறை 'சார்ஜ்' சொல்லி நாடகம் நடத்தி விட்டு, எங்கள் நால்வரையும் அப்படி அப்படியே விட்டு விட்டு அரசு உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.
கூட்டத்தினர் ஓடி வந்து டாக்டர்கள் சாம்பசிவ அய்யர், சௌந்தர ராஜன் இருவரையும் அழைத்து வந்து, அவர்களின் மருத்துவ மனைகளுக்கு எங்களை வண்டிகளில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். குண்டாந்தடிகளால் தாக்கியிருந்தால் திருப்பூர் குமரனுக்குக் கிடைத்த அமரத்துவம் எங்களுக்கும் கிடைத்திருக்கும். பிரம்புகளால் அடித் ததால், உடல் முழுவதும், பெருமளவு உடலின் பின் பகுதியில், தடித்த காயங்களும், ரத்தக் கசிவுகளும் ஏற்பட்டிருந்தன. ரோட்டு மண்ணில் நாங்கள் படுத்துக்கொண்டதால், காயங்களிலெல்லாம் ரோட்டுப் புழுதி மண் ஒட்டிக்கொண்டிருந்ததால், ஒவ்வொரு காயமும் தனித் தனியாகக் கழுவி, பஞ்சு வைத்துக் கட்ட வேண்டியதாயிற்று. நான் 24 வயது வாலிபன். வரதராஜ முதலியாரும், கணபதி முதலியாரும், சதைப்பற்றுள்ள தேக முடையவர்கள். சந்தான முதலியார் மெலிந்த உடல்வாகு உடையவர். அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அந்த மூவருக்கும், அவரவர்கள் வீட்டிலேயே சிகிச்சை நடந்தது. எனக்கு கே. மாரப்ப கவுண்டர் வீட்டில் டாக்டர் வந்து புண்களுக்கு மருந்து போட்டார். ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களில், நாங்கள் ஓரளவு குண மடைந்து வந்தோம். சி.ஐ.டி. போலீசார் வந்து, எங்கள் நிலைமைகளை விசாரித் தறிந்து சென்றார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை, நான் இருக்குமிடத்துக்கு, சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார் வந்து, மேற்கொண்டு என்ன செய்ய உத்தேசம் என்று கேட்டார். இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்வேன் என்றேன். அன்று மாலை ஒரு குதிரை வண்டியில் .......
((31 10 1984) புதன் கிழமை. இன்று பகல் 12 40 டெல்லி தமிழ்ச் செய்தி கேட்க ரேடியோவைத் திருப்பியதும், நம் பாரதப் பிரதமர் ஸ்ரீமதி இந்திரா காந்தி காலை 9 40க்கு தன் இல்லத்திலிருந்து தன் காரியாலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, வயிற்றில் சுடப் பட்டாரென்றும், உடனே அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டாரென்றும், அவர் கவலைக்கிடமாக இருக்கிறதென்றும் செய்தி, அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செயது கொண்டிருந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி விமான மூலம் மாலை 4 மணியளவில், டெல்லி திரும்பினார். ராஷ்டிரபதி கியானி ஜெயில் சிங் வெளி நாடு சென்றிருந்தவர் செய்தி கேட்டு உடனே புறப்பட்டு மாலை 5 30 மணிக்கு, தலைநகர் திரும்பினார். 6 மணி செய்தியில் இந்திரா காந்தி இறந்து விட்டார் என்ற துக்கச் செய்தி உலகுக்கு அறிவிக்கப்பட்டது. சிலோன் ரேடியோ, பி.பி.சி., முதலியன, இந்திரா மறைந்து விட்டதாக முன்னமே அறிவித்து விட்டனவாம். ஆயினும் அவர் உயிர், பிற்பகல் 2 மணிக் குத்தான் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இரவு செய்தியில்தான், காலை 9 15 க்கு அவருக்குப் பாதுகாப்பாளர்களாக இருந்த இரண்டு சீக்கிய காவலர்களே காலை 9 15 மணிக்கு அவரைச் சுட்டதாகவும், இவர்களை மற்ற காவலர்கள் தடுக்கும் முயற்சியில், சுட்டவர்களில் ஒருவர் இறந்து விட்டதாகவும், மற்றொருவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, அபாய நிலையைத்தாண்டி பழைத்துக்கொளவாரென்றும் அறிவிக்கப்பட்டது.
மாலையிலேயே பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி செயற்கழு கூடி, ஸ்ரீ ராஜீவ் காந்தியை தலைவராகத் தேர்ந்தெடுத்து ராஷ்ட்ரபதிக்கு அறிவித்ததின் பேரில், ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்யப் பட்டதாக இரவு 9 மணி செயதியில் சொல்லப்பட்டது.
இந்திரா காந்தி, அவர் தந்தை நேருஜியை விடக்கூட, More dynamic and quick decisions எடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர'¢ என்று உலகமே போற்றும், நாடு இதுவரை கண்டிராத தலைவராக விளங்கினார். அவர் ஆத்மா சாந்தியடையவும், இந்திய மக்கள் தன் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து பதவி சுயநலத்தை விடுத்த நேர்மை வழியில செல்லும் ஆற்றலை நம் தலைவர்களுக்கு இறைவன் அருளட்டும் என்று 70 கோடி மக்களில் ஒருவனாக அடியேனும் பிரார்த்திக் கிறேன். 'இந்திரா காந்தி மறைந்து விட்டார். ஆனால், இந்தியாவின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் அவர்.' என்ற புகழ் நினைவு உலகு உள்ளவரை நிலைத்த நிற்கும். இறைவா! இந்திய மக்கள் இது போன்ற எதிர்பாராத துக்க நிகழ்ச்சிகளிலும் நிதானம் இழக்காமல் நாகரிகமாக நடந்து கொள்ள அருள்வாயாக என்று பிரார்த்திப்போம்.
(01 01 1985) இன்று 1985 புது ஆண்டு பிறந்தது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 31 ந்தேதி, (31 10 1984) உலகமே கண்ணீரில் மிதக்கும்படி யான சோக நிகழ்ச்சி: நம் பாரதப் பிரதமர் ஸ்ரீமதி இந்திரா காந்தி அம்மையார் இறந்து விட்டார். அவருடைய ஒரே மகன், ராஜீவ் காந்தி, தன் துக்கத்தை யெல்லாம் அடக்கிக் கொண்டு அன்றே ஆட்சிப் பொறுப்பை யேற்றுக் கொண்டு, உடனே செயலில் இறங்கி,டெல்லியிலும் பிற இடங்களிலும், வெடித்த வன்முறைச் செயல்களை இரும்புக்கரத்துடன் அடக்கி, 15 தினங்களிலேயே நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தத் தீர்மானித்து, தேர்தல் கமிஷனுக்கு அறிவித்து, அவர்கள் தேர்தல்களை நடத்தி, ஓரு மாதம் தேசம் முழுவதும், ஹெலிகாப்டரில் பறந்து சென்று, தினமும் பல ஊர்களில் கூட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து, டிசம்பர் 24, 27, 28 தேதிகளில் தேர்தல்களை நடத்தி, அறிவிக்கப்பட்ட 504 இடங்களில் 398 இடங்களைக் கைப்பற்றி 31 12 1984 (இந்திரா காந்தி மறைந்த சரியாக இரண்டாவது மாதத்திலேயே) பிரதம மந்திரியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகிலேயே இந்திய தேசிய காங்கிரஸின் சரித்திரத்திலேயே இது வரை நடந்திராத மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தி அமைச்சரவையையும் அமைத்து விட்டார் ராஜீவ்.
இந்த 1985 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் நூற்றாவது ஆண்டு. இந்த ஆண்டு முதல் ராஜீவ் காந்தியின் தலைமையில், நாடு வீறு நடை போடும் என்ற நம்பிக்கை தேசம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியில் பார்த்தாலும், சிறந்த தலைரான மோதிலால் நேருஜியை விட அவர் ஒரே புதல்வரான ஜவஹர்லால் நேருஜி பலவிதத்திலும் பிரகாசித்தார். அவரை விடக் கூட அவருடைய ஒரே புதல்வியான இந்திரா காந்தி பன்மடங்கு அதிகமாகப் பிரகாசிக்கும் மகத்தான வாய்ப்புக்களைப் பெற்றுப் பேரும் புகழும் பெற்று, உலகமே வியக்கும்படி விளங்கினார். அவருடைய மறைவு சம்பவித்த விதம், அவர் புகழை காந்தியடிகளுக்கு 1948 ஜனவரி 30ந்தேதி மாலை நிகழ்ந்தது போல் நிகழ்ந்து, மேலும் பன்மடங்கு பிரகாசிக்கிறது. ராஜீவ் காந்தி யின் ஆரம்ப அதிர்வேட்டுக்கள், மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. ஆனால் சுயநல அரசியல் வாதிகளே நிறைந்த இந்தப் பாரத நாட்டில் ராஜீவ் காந்தியை, முன்னேற விடுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தத தேர்தலில், எதிர்க்கட்சிகள் படுதோல்வி யடைந்தன. கட்சித் தலைவர்கள் பலர் தோல்வி கண்டனர். தேசம் ஒரு கட்சி அரசியலை மட்டுமே விரும்புவதாகத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே ராஜீவின் பொறுப்பு- சுமை அதிகம். அதை அவர் எப்படி சமாளிப்பாரோ? இனி நடக்க விருக்கும் தேர்தல்களில், தேர்தல்களில் தோல்வி கண்ட நல்ல நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களைப் போட்டியின்றித் தேர்வு பெறச்செய்ய வழிமுறை கள் வகுக்க வேண்டும். இதுவரை வெறும் எதிர்ப்புக் கட்சிகளாக இருந்துவிட்ட எதிர்க் கட்சிக்காரர்கள், ஒரே கட்சியாக, ஒரே தலைவரின் கீழ் ஒன்ற சேர வேண்டும். அப்பொழுதுதான் பிற ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, பிரிட் டன் போல, இந்தியாவிலும் இரண்டு அல்லது மூன்று கட்சி அரசியல் தோன்ற முடியும்.
தமிழகத்திலும், சென்ற 3 மாதங்களாக உடல் நலமின்றி இருக்கும் பரட்சித் தலைவரின் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றிருப்பதும் மிகவும் வரவேற்கத் தக்கதல்லவா?)
(07 01 1985) அன்று மாலையில், திரு கே. மாரப்ப கவுண்டர் வீட்டுக்கு ஒரு குதிரை வண்டி வந்தது. ஒரு போலீஸ்காரர் வந்து 'உங்களை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச்சொன்னார்.' என்றார். நான் உடனே புறப்பட்டு குதிரை வண்டியில் சென்றடைந்தேன்.அங்கு ஏற்கனவே மூன்று முதலியார்களும் அவரவர் வீடுகளிலிருந்து தனித்தனி குதிரை வண்டிகளில், வந்து சேர்ந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சாமி. சிதம்பரனார் எங்களைப் பார்த்து, "மேற் கொண்டு என்ன செய்ய உத்தேசம்?" என்று கேட்டார். "புண் ஆறியபின், மீண்டும் அதே இடத்திலிருந்து 144 தடை உத்துரவை மீறி அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வோம்" என்றோம். "அப்படியானால் உங்களைக் கைது செய்வேன்" என்றார். நாங்கள் மீண்டும் சத்தியாக் கிரகம் செய்யத்தான் போகிறோம்" என்றோம். "உங்களை அரெஸ்டு செய்திருக் கிறேன். " என்றார். நாங்கள் கைதானோம். ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும் எதிர்ப்புறம் உள்ள சப் ஜெயிலில் எங்களை அடைத்தார்கள். தலையணை, போர்வை ஏதும் இல்லாமல், வெறும் கல் தரையில் படுத்தது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.
(10 01 1985) எங்கள் நால்வரைத் தவிர, வேறு குற்றங்கள் புரிந்த காவற்கைதிகளும், அந்த 15 X 10 அடி அறையில் ஆறு பேர்கள் இருந்தார்கள். அவர்களில் ஆஸ்துமா நோயாளி இரவு முழுவதும் இழுப்பு வேதனையில் இருந் தார். மற்றவர்கள் நிலையோ விரும்பத் தக்கதாய் இல்லை. ஆகவே, நாங்கள் நால் வரும் எங்கள் கதைகளைப் பேசிக்கொண்டே தூங்காமல் இரவைக் கழித்தோம் உடம்பில் அடிபட்ட காயங்கள் பல இன்னும் குணமாகவில்லை. ஆகவே, அந்த கரடுமுரடாள கல் தரையில் புரண்டு படுக்கும் போது, நாங்கள் பட்ட வேதனை சொல்லி முடியாது. மறுநாட் காலை ஆறு மணிக்கு இரும்புக் கதவுகளைத் திறந்தார்கள். இரண்டிரண்டு பேர்களாக சுமார் முப்பது கைதிகளை நிறுத்தி வைத்து, எண்ணிப் பார்த்து கழிவறைக்கு 'மார்க்' செய்யப் பட்டோம். அதைப் பற்றி (சுகாதாரத்தைப் பற்றி,) சொல்லாமல் விடுவது நல்லது. ஏதோ நரகம் எனகிறார்களே அது இதுதானோ என எண்ணிக் கொண்டோம். பல் துலக்கி முகம் கை கால் கழுவிக் கொண்ட பின் எங்கள் முப்பது பேர்களையும், (நாங்கள் நான்கு பேர்கள் மட்டுமே அரசியல் கைதிகள்). ஒரு இடத்தில் மண் தரையில் உட்கார வைத்து எத்தனையோ பேர்கள் மாறி மாறி உபயோகித்த நசுங்கி உருக் குலைந்த அலுமினியத் தட்டுகளில், அரிசிக் கஞ்சியை ஊற்றி அனைவரிடமும் ஒவ்வொரு தட்டாகக் கொடுத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிறிது சாப்பிட் டோம் மீதியை அங்குள்ள தொட்டியில் கொட்டினோம். தினமும் வந்து பழகின காக்கைகளும், நாய்களும், சந்தோஷமாக அவைகளைச் சாப்பிட்டன. பத்து மணியளவில் எங்கள் நால்வரையும் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு நான்கு போலீஸ் ஜவான்கள் இட்டுச் சென்றனர். தலைமை குமாஸ்தா எங்கள் நால்வரையும் பெயர் கேட்டுத் தெரிந்து பதிவு செய்து கொண்டார்.
(11 01 1985)
1) திரு. வரதராஜ முதலியார்: நாமக்கல்¢லில் யூனியன் பிரஸ் என்ற அச்சகத்தின் உரிமையாளர்.
2) திரு. சந்தான முதலியார் - மாஸ்டர் வீவர் மற்றும் ஊர்ப் பெரிய தனக்காரர்.
3) திரு. கணபதி முதலியார்: தவில் வித்வான். இன்று உலகப்புகழ் பெற்று விளங்கும் நாகஸ்வர வித்வான்நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் தாய் மாமன் முறையானவர்.
4) அடியேன் ‘காந்தி ஆசிரமம்’ அ. கிருஷ்ணன் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்)
எங்களை விசாரித்த சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட், என் பெயரில் - தொழில் என்ற இடத்தில், vagrant என்று போட்டிருந்ததைப் பார்த்து, "What do you mean by this?" என்று சற்றுக்கோபமாக ஹெட் கிளார்க்கைப் பார்த்துக் கேட்டார். " He is not employed, Sir!" என்றார். என்னைப் பார்த்து நீங்கள் ஏதாவது வேலை பார்த்தீர்களா என்றார். 'நான் இரண்டு ஆண்டுகளாக திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வேலை பார்த்து வருகிறேன். சத்தியாக்கிரகம் செய்வதற்காக, ராஜினாமா செய்தேன். ஆசிரமத்தில் சேருவதற்கு முன்பு திருநெல்வேலி ஜில்லா போர்டிலும், அதற்கு முன்பு, தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்தேன்.' என்றேன். "You see! you change it as at present unemployed." இவ்வளவுக்கும் ஹெட்கிளார்க் ராமஸ்வாமி அய்யங்கார் என்னை நனகு அறிந்தவர். வக்கீல்கள், சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டின் நேர்மையையும் அந்த சூழ்நிலையில் அவர் காட்டிய தைரியத்தையும் பாராட்டினர். காக்கையேறப் பனம் பழம் விழுந்த கதையாக அவரை அடுத்த மூன்று மாதங்களில் வேறொரு இடத்திற்கு மாற்றி விட்டார்கள..
மேற்கொண்டு அவர் வழக்கை விசாரித்தார். "நாங்கள் சத்தியாக்கிரகிகள்; ஆகவே எதிர் வழக்காட மாட்டோம். 144 தடை யுத்தரவை மீறித்தான் அன்னியத் துணிக் கடை மறியலுக்குப் புறப்பட்டோம்", என்றோம். இரண்டு செக்ஷன்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையளித்து இரண்டும் தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
சப் ஜெயிலுக்கு அழைத்து வந்து குழம்பும் சாதமும் தந்தார்கள். மாலை ஐந்து மணியளவில், எங்கள் நால்வரையும், பஸ் மூலம் திருச்செங்கோடு சப்ஜெயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். திருச்செங்கோடு சப் ஜெயில், நாமக்கல் ஜெயிலை விட மிகவும் சுகாதாரக் கேடான சூழ்நிலை. மறுநாள் காலையும் மதியமும் அங்கு ஜெயில் சாப்பாடு. மாலை ஐந்து மணியளவில், பஸ் மூலம் சங்கரி துர்க்கம் சென்று அங்கிருந்து ரயில் மூலம் கோவை சென்றோம். வழியில், எங்களை அழைத்துச் சென்ற போலீஸ்காரர்கள், ஈரோடு ஸ்டேஷனில் தின்பண்டங்கள் , காப்பி, வாங்கித் தந்தார்கள். அரசு செலவு. நாங்கள் அவரவர் வீடுகளி லிருந்து தனித் தனியாக போலீஸ் நிலையம் அழைத்து வரப் பட்டதால், கையில் பணமோ மாற்று உடையோ எடுத்து வரவில்லை. நண்பர்களும் உறவினர்களும் கூட, பயத்தால் எங்களை வந்து பார்க்கவுமில்லை. இரவு 11 30 மணிக்கு கோவை ஜங்ஷன் போய்ச் சேர்ந்து, Central Treasury Hall ல் படுத்தோம். சற்று தூங்கினோம்.
(13 01 1985) அதிகாலை 5 30 மணிக்கு, எழுந்து, காலைக் கடன்கள் முடித்து, அரசு செலவில் டிபன் காப்பி, ஓட்டலிலிருந்து கிடைத்தது. நாங்கள் அரசியல் கைதிகள் என்ற காரணத்தாலோ என்னவோ எங்களுக்குக் கை விலங்கு கள் அணிவிக்க வில்லை. மிக்க மரியாதையுடனேயே கைதானது முதல் நடத்தப் பட்டோம். கோவை மத்திய சிறையில் எங்கள் அங்க மச்ச அடையாளங்களைச் சரிபார்த்து, எங்கள் உடைகளை வாங்கி மடித்து நம்பர் போட்டு ஜெயில் உடைகள் இரண்டு செட் தந்து, உள்ளே அனுப்பினார்கள். நாமக்கல்லிலிருந்து திருச்செங்கோட்டுக்கு அழைத்து வந்த ஜவான்கள் நால்வரும், நாமக்கல்லுக்கு திரும்பினர். அது போலவே திருச்செங்கோடு ஜவான்கள் கோவை மத்திய சிறையில் எங்களை ஒப்படைத்த பின், திருச்செங்கோடு திரும்பினர்.
எங்களை ஜெயில் வார்டர்கள் ஜெயில் அன்னெக்ஸ் என்ற பகுதியில் கொண்டு விட்டு அங்கிருந்த தலைமை வார்டர் வசம்ஒப்படைத்துச் சென்றனர். 12 அடி உயர முள்ள பெரிய இரும்புக் கதவுகள் இரண்டில் ஒன்றை சற்றே திறந்து எங்களை உள்ளே அனுமதித்தனர். அங்கு எங்களுக்கு முன்னரே தண்டனை பெற்று வந்திருந்த நாமக்கல் நண்பர்களைச் சந்தித்ததில் நாங்கள் பெரிதும் மகிழ்வு கொண்டோம். கிளைச் சிறை, (ஜெயில் அன்னெக்ஸ்) என்பது Quarantine block ஆக மத்திய சிறைக்கு வெளியே இருப்பது. பிரதான சிறையில் சுமார் 1500 கைதிகள் இருக்க வசதி உண்டு. ஒவ்வொரு கைதியும் ஜெயிலுக்கு வந்ததும், தகுந்த மருத்துவர்களால் நன்கு பரிசீலிக்கப்பட்டு, பூரண நலமுள்ளவர்கள் மட்டுமே மத்திய சிறைக்குள் அனுப்புவார்கள். மற்றவர்களை குவாரன்டைன் சிறையில் 10, 15 தினங்கள் வரை வைத்திருந்து, நன்கு குணமாக்கிய பின்தான் மத்திய சிறைக்குள் அனுப்புவார்கள். ஆகவே அந்த சிறைக்கு குவாரன்டைன் என்று பெயர். மத்திய சிறைக்குள் தேச பக்தர்களை அனுமதித்தால் இவர்கள், மற்ற கைதிகளை தேசபக்தர்கள் ஆக்கி விடுவார்களோ, என்ற எண்ணத்தில், தேசிய கைதிகளை இந்த குவாரன்டைனில் வைத்தார்கள். 1930ம் வருடத்தி லேயே உப்பு சத்தியாக்கிரக காலத்தில், சிறை சென்ற தேசபக்தர்கள், கோவை சிறை குவாரன்டைனில் அடைக்கப் பட்டவர்கள், பெருங் கிளர்ச்சி செய்து சிறை நிர்வாகத்தினரைப் பணிய வைத்து, குவாரன்டைன் என்று பெயரை மாற்றி ஜெயில் அன்னெக்ஸ் என்று பெயரிட வைத்தார்கள்.
மேலும் அரசியல் கைதிகள் எத்தனை பேர்கள், எத்தனை முறை வந்தாலும், அவர்களுக்குப் புதிய ஜெயில் உடைகளும், சாப்பிடும் தட்டு, குவளை, (இரவு நேரங்களில் மலங் கழிக்கும்) சட்டி - மூடி, படுக்கும் சணல் பாய், போர்த்திக் கொள்ளும் முரட்டுக் கம்பளி, ஆகிய அனைத்தும் புத்தம் புதிய தாகத்தான் தர வேண்டு மென்று போராடி வெற்றி பெற்றிருந்தார்கள். ஆகவே நாங்கள் நால்வரும் சிறைக்குள் சென்றதும், புதியவைகள் தரப்பட்டன.
ஜெயில் அன்னெக்ஸில், மொத்தம் 72 அறைகள் தனித் தனியாக இருக்கும அமைப்பு. மூன்று பிளாக்குகள். ஒவ்வொரு பிளாக்கிலும், முன்புறம் ஆறு அறைகள் பின்புறம் ஆறு அறைகள். அறைகள் ஒவ்வொன்றும் ஆறு அடி அகலம், பத்தடி நீளம், பன்னிரண்டடி உயரம். பத்தடி உயரத்தில், ஒன்றரை அடிக்கு மூன்றடி உள்ள இரண்டு குறுக்குக் கம்பிகளுடன் கூடிய ஒரே ஒரு ஜன்னல். முகப்பில் ஒவ்வொரு அறைக்கும் நாலடிக்கு ஆறடி உயரமுள்ள கெட்டியான இரும்புக் கதவு. மழை, பனிக்காலத்தில், அறையின் பின சுவர் ஓரமாக முடங்கிக் கொள்ள வேண்டும். வெயில் காலங்களில் காற்றுக்காக இரும்புக் கதவு கிட்டே படுக்க வேண்டும். கீழே கரடு முரடான கல் தரை. இந்த ஜெயில் அன்னெக்ஸ் சிறை யில், ஒவ்வொரு பிளாக் முன்னிலும், வரிசையாக புளிய மரங்கள். இவைகளை எப்படியோ மரமாக வளரும் வரை ஜெயில்அதிகாரிகள் காப்பாற்றி விட் டார்கள். நான் இருந்த ஒன்றரைஆண்டு காலத்திலும், அது புளியம் பழம் தந்ததே இல்லை. ஏனெனில் புளியம் பூவையே பறித்துத் தின்னும் கைதிகள், அவை பிஞ்சு விடக் கூட அனுமதிக்க மாட்டார்கள். 50 ஆண்டுகளுக்குப் பின் இப்போது நிலைமை எப்படியோ? மீண்டும் அங்கு செல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்க வில்லை.
(14 01 1985) இன்று பொங்கல் திருநாள்.
என் முதல் சிறைவாசம் ஒரு வருட காலம். 1932 பிப்ரவரி மூன்றாம் வாரத்திலிருந்து, (17ந் தேதியிலிருந்து என்று நினைக்கிறேன்) 1933 ஜனவரி 6ந் தேதி வரை கோவை மத்திய சிறையில் ஜெயில் அன்னெக்ஸில் இருந்தேன். பாக்கி நாட்கள் ரிபேட் நாட்கள். இரண்டாவது முறை 1933 ஆகஸ்டு 7ந் தேதி யன்று காலை திருச்செங்கோட்டில், ராஜாஜியின் தலைமையில், 16 பேர்களில் ஒருவனாக, 6 மாத சிறை தண்டனை பெற்று, இதையும் ஆகஸ்டு 8ந் தேதி காலை முதல் ஜனவரி 4ந் தேதி வரை இதே ஜெயில் அன்னெக்ஸில் கழித்தேன். ஆக, சுமார் 16 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தேன். ஜெயில் அன்னெக்ஸில் 72 அறைகள் மட்டுமே இருந்ததால், அதற்கு மேல் கைதிகள் இருந்தால், புதிய அரசியல் கைதிகள் வருவதை அனுசரித்து, ஏற்கனவே இருப்பவர்களை வேறு சிறைக்கு மாற்றி விடுவார்கள். ஆனால் எங்களில், காந்தி ஆசிரம ஊழியர் களில் 6, 7 பேர்களை மட்டும் வேறு சிறைகளுக்கு மாற்றவில்லை. அவர்களில் நானும் ஒருவன். தென் பிராந்திய, கேரள, தமிழ், கர்நாடக, ஆந்திர அரசியல் கைதிகள் அவ்வப்போது புதிது புதிதாக வந்து, சில நாட்கள், வாரங்கள், மாதங் கள் தங்குவார்கள். பலர் வந்த சில நாட்களிலேயே கிளர்ச்சிகள் செய்து வாரம் ஒரு சிறையாக மாறிக்கொண்டே தென்னகத்திலுள்ள 20, 25 சிறைகளையும் பார்த்தவர்களும் உண்டு. எங்களில் 'அப்பாவிகளான' சிலர் மட்டும், போட்ட இடத்திலேயே விழுந்து கிடந்தோம். என்னைப் பொறுத்தவரை சிறை வாசம் அவ்வளவு சிரமமானதாகத் தெரியவில்லை. நான் திருமணமாகாதவன். நான் யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. என் உறவினர்கள் எவரும் என்னைப் பற்றிக் கவலைப்படக் கூடியவர்களும் இல்லை. கோவையில் மத்திய அரசு உத்தியோகத்தில் இருந்த என் உறவினர் (என் அக்காள் மருமகன்), என் அக்காள் கணவரும், ஒரே ஒரு முறை என்னை சிறையில் வந்து பேட்டி கண்டனர். இந்த ஒன்றரை ஆண்டுகளில், 4, 5 முறை மட்டுமே என் நெருங்கிய உறவினர்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்தன.
(15 01 1985) இன்று மாட்டுப் பொங்கல்.

Subscribe to:
Posts (Atom)