காந்தி ஆசிரமம் அ. கிருஷ்ணன் தன் மனைவி மங்களம்அம்மாளுடன்

Wednesday 7 September 2011

என் இரண்டாவது சிறைவாசம்

என் இரண்டாவது சிறைவாசம்

1933 ஜனவரி முதல் வாரத்தில் கோவை சிறையிலிருந்து விடுதலை அடைந்தேன்.  பெங்களூரிலிருந்த என் சகோதரியின் புதல்வி வீட்டிற்குச்
சென்று, சில தினங்கள் தங்கி, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களிலுள்ள உறவினர்களுக் கெல்லாம் சிறையிலிருந்து திரும்பிய என்னைப் பார்க்கும் ஆவல் இருந்ததால், அங்கெல்லாம் சென்று விட்டு 1933 பிப்ரவரி மத்தியில் காந்தி ஆசிரமம் வந்தேன்.  முன் போல் கிராமங்களுக்குச் சென்று, கதர் நூல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டேன்.  ராஜாஜி அவர்களும், ஆசிரம ஊழியர்கள் பலரும் விடுதலையாகி, ஆசிரமம் வந்து, தங்கள் பணிகளை ஏற்றுக்கொண்டனர்.

(17 01 1985)   ஹரிஜனப் பகுதிகளிலுள்ள கிணறுகளை ஆழப்படுத்தி, சுகாதாரமான முறையில், அதற்கு சுவர்கள் கட்டி, தண்ணீர் இறைக்க உருளைகள போட்டு, கிணற்றைச சுற்றி சிமெண்டு தரைகள் போட்டு, சிந்தும் தண்ணீரை சற்று தூரத்துக்குக் கால்வாய் வெட்டிப் பாயவும், அங்கே வாழை,தென்னை, பப்பாளி போன்ற மரங்களைப் பயிராக்குவது போன்ற வேலைகளில் சில ஊழியர்கள் ஈடுபட்டார்கள்.  ஹரிஜனங்களுக்கென சில வீடுகள் கட்டி, அதில் அவர்களைக் குடியேற்றச் செய்வது, அவர்கள் பகுதிகளிலுள்ள கோவில்களைப் பழுது பார்த்து அஙகு பஜனை முதலியன செய்து, மக்களைக் கூட்டி, சுத்தம் சுகாதாரம் மது விலக்கு போன்ற பிரச்சாரங்களும் சிலர் செய்து வந்தனர். ராஜாஜி உட்பட சில தொண்டர்கள, சேரிக் குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களுக்கு எண்ணெய் சோப்பு முதலியவற்றால் நன்கு குளிப்பாட்டி,  அவர்கள் உடைகளைத் துவைத்துக் காயப் போட்டு, அவர்களுக்கு அரிசிக் கஞ்சியும் துவையலும் தந்து, சில பிரார்த்தனைப் பாடல்களைப் பாடச் செய்து, பின் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பதில் சில தொண்டர்கள் ஈடுபட்டனர். இந்த வேலைகளையெல்லாம் ராஜாஜி ஒருங்கிணைத்து சென்னையிலிருந்து ஹரிஜனத் தலைவர் உயர்திரு எம். சி. ராஜா அவர்களைத் தருவித்து ஒரு பெரிய விழாவை நடத்தினார்.  அந்த சமயத்தில்தான் ஹரிஜனங்களுக்குத் தனித் தொகுதி வழங்க வேண்டுமென்ற அம்பேத்கரின் எண்ணமும் ஹிந்துக்களைப் பிரித்தாளச் செய்யும் பிரிட்டிஷ் சூழ்ச்சியையும் ஆட்சேபித்து காந்தியடிகள் புனாவில் உண்ணா விரதம் ஆரம்பித்தார். 
எம். சி. ராஜாவும், ராஜாஜியும், புனா சென்று காந்தியடிகளிடம்  உண்ணாவிரதம் இருக்க வேண்டாமென்று மன்றாடியும், காந்திஜி, தான் தீர்மானித்தபடியே உண்ணாவிரதம் இருந்தார்.  அம்பேத்கரிடம் பேசி ஒருவித சமரச உடன்பாட்டிற்கு வந்து, அதன் பின் காந்திஜி உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.

அதன் பின், காந்தியடிகள் புனாவிலிருந்தபோதே ராஜாஜியின் இளைய புதல்வி, (கடைசிக் குழந்தை) செல்வி லக்ஷ்மிக்கும் காந்தியடிகளின் கடைசிப் புதல்வன் செல்வன் தேவாதாஸ் காந்திக்கும் புனாவில் திருமணம் நடந்தது.  அவர்கள் காதல் நிலையானதுதானா என காந்திஜி நான்கைந்து வருடங்கள் பல நிபந்தனைகள் விதித்துப் பரிசோதனை செய்த பின்னரே காந்திஜி திருமணத்தை அனுமதித்தார்.

அதன்பின் ராஜாஜி, ஆசிரமம் திரும்பி நிர்மாணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். தேசிய இயக்கம் சற்று தளர்வுறுவதைக் கண்ட ராஜாஜி,
காந்தியடிகளின் அனுமதியுடன், சில தொண்டர்களுடன் மீண்டும் ஒரு சத்தியாக்கிரகப் பாத யாத்திரை செய்யத் திட்டமிட்டு வெளியூர்களில் இருந்த பலருடன் கடிதத் தொடர்பு கொண்டார்.  1933 ஆகஸ்டு முதல் தேதியிலிருந்தே ஆசிரமத்தில் சற்று பரபரப்பு ஏற்பட ஆரம்பித்தது. 
ராஜாஜி திட்டமிட்ட பாத யாத்திரையில் கலந்து கொள்ள, ஸ்ரீ.ஜி. ராம சந்திரன் (பின்னாளில் காந்தி கிராம டைரக்டர்); ஸ்ரீ. எம். எஸ். கிருஷ்ணசாமி (பிரபல ஆடிட்டர்); கோவை ஸ்ரீ. சுப்ரி (கே. சுப்பிரமணியன்); மதுரை வி.கிருஷ்ணசாமி எம்.ஏ.(ஹானர்ஸ்); சேலம் வக்கீல் ஸ்ரீ. கே.வி. சுப்பராவ்; கோவை (ஸ்ரீ.சி. ஏ. அய்யாமுத்து அவர்களின்) மனைவி திருமதி கோவிந்தம்மாள்; திருப்பூர் ஸ்ரீ.பி.எஸ். சுந்தரத்தின் தாயார் திருமதி லக்ஷ்மியம்மாள்; சுந்தரத்தின் இளம் மனைவி (பெயர் நினைவில்லை); நாமக்கல் ஸ்ரீ.அப்துல்கஃபார் மற்றும் காந்தி ஆசிரம ஊழியர்களான திருவாளர்கள்ஆர் வேங்கடராமன் எம்.எஸ். நாராயண ராவ், ஆர் அங்கமுத்து, ஏ.கிருஷ்ணன் (அடியேன்), என்.சின்னசாமி, வி.எஸ்.தியாகராஜன், மற்றும் ஏ.கே.ஸ்ரீனிவாஸன் போன்றோர்கள் ஒவ்வொரு வராக வந்து சேர்ந்தார்கள். சத்தியாக்கிரகத்தில் பங்கு கொள்ளும் அனைவரும் ஆறாந்தேதி காலையிலிருந்தே சுறுசுறுப்பாகத் தங்களுடன், என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டுமென்று தீர்மானித்து மாற்றுடைகள், இரண்டொரு புத்தகங்கள், முகச்சவர சாதனங்கள், ஒரு போர்வை போன்றவற்றைச் சேகரித்துக் கொண்டார்கள்.
 
(20 01 1985) ராஜாஜி திட்டமிட்டபடி ஆசிரமத்திலிருந்து 07 08 1933 அதிகாலை
04 30க்கு அனைவரும் குளித்து, மாற்றுடையணிந்து, அவரவர்கள் தயாராக இருந்தோம். ஏற்பாடு செய்தபடி பஸ்ஸில் எல்லோரும், தெற்கு வீதியிலுள்ள ஓட்டலில் காலை உணவு எடுத்துக்கொண்டு நாலு கால் மண்டபத்தில் சேர்ந்து இரண்டிரண்டு பேர்களாக அணிவகுத்து, ராஜாஜி முன்செல்ல, அடுத்த இருவரகளில் ஒருவர் மாற்றி ஒருவர் கொடியை ஏந்திச் செல்ல வேண்டுமென்றும், கைதானால் மட்டுமே கொடியை போலீசில் ஒப்படைக்கலாம் என்றும் அதற்கு முன் எந்தவித பலாத்காரம் செய்யப்பட்டாலும் கொடியை விடக்கூடாதென்றும், தீர்மானித்து, முதலிருவர்: ஸ்ரீ.ஜி.ராமச்சந்திரன் ; ஸ்ரீ. எம். எஸ். கிருஷ்ணசாமி. ஜோடியென்றும் நியமிக்கப் பட்டனர்.  திருச்செங்கோடு நகரத்தை காலையில் பஜனை பாடிக் கொண்டு ஊர்வலமாகச் சென்று சித்தளந்தூர், கந்தம் பாளையம், பரமத்தி, வேலூர், பாலப்பட்டி, மோகனூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக கடைசி நபர் கைதாகும் வரை சேலம் சென்று அடைவதென்றும் இதற்கு பதினைந்து தினங்கள் வரை பிடிக்குமென்றும், கணக்கிடப்பட்டது.  இந்த வழித் தடம் பற்றியும், பாத யாத்திரையில் பங்கேற்கும் சத்தியாக்கிரகிகளின் பெயர் முதலியனவும் மாநில கவர்னருக்கும், சேலம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பரிண்டெண்ட் ஆகிய மூவருக்கும், ராஜாஜி, ஆகஸ்டு முதல்  தேதியே கடிதம் மூலம் எழுதித் தெரிவித்திருந்தார்.  சேலத்தில், ராஜாஜிக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் வக்கீல் கே.வி. சுப்பராவ்; - இவர் தன் குடும்பத்தார், சமூகத்தார், பழித்தலைப் பொருட்படுத்தாமல், ஹரிஜனத் தொண்டில் மிக ஈடுபட்டிருந்தார். இவரை 'பற சுப்பராவ்' என்றே சேலம் மாவட்ட மக்கள் அழைக்க ஆரம்பித்து விட்டனர்.   அப்படிப்பட்ட ஒருவருக்கு, - 'ஞானஸ்நானம்' செய்விக்க - சிறை சென்ற தேச பக்தராக்கத் தீர்மனித்தார், ராஜாஜி. உடனே சுப்பராவுக்கு, 'உடன் புறப்பட்டு வரவும்!' என்று 04 08 1933 அன்று ஒரு தந்தி அனுப்பினார். அவரும், 'ஏதோ, என்னவோ?' என்று அன்று மாலையே ஆசிரமம் வந்து சேர்ந்தார். அவரிடம் ராஜாஜி, விவரம் சொன்னார்.  அவர் சேலம் சென்று, மனைவி மக்களிடம் சொல்லி, மாற்றுடை எடுத்து வருவதாகக் கூறினார். - போனால் அவர்கள் விட மாட்டார்கள். ஆத லால், இங்கிருந்தே வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விடுங்கள் - என்று சொல்லி அவருக்கு ஆசிரமம் கதர் நிலையத்திலிருந்து இரண்டு செட்டு புதிய உடைகள் வாங்கித் தந்து விட்டார். கவர்னருக்கும், கலெக்டருக்கும் "Delete N.Chinnaswamy and insert K.V.Subbarao in the Sathyagrahis Names" என்று தந்தி கொடுத்தார். என்.சின்னசாமி, மிக மிக மன்றாடியதின் பேரில், 'Include Chinnasamy's name also - total seventeen" என்று இன்னொரு தந்தியும் கொடுக்கப்பட்டது.

(21 01 1985) திட்டமிட்டபடியே   சத்தியாக்கிரகிகளும், ஆசிரம ஊழியர்களும், சத்தியாக்கிரகிகளின் உறவினர்களுமமாக, சுமார் 40 பேர்கள், திருச்செங் கோடு தாலூகா ஆபீஸ் காம்பவுண்டுக்குள் பெரிய வேன் (மூடி போட்டது) ஒன்றிலும், திறந்த லாரி ஒன்றிலும், குண்டாந்தடி, துப்பாக்கி யேந்திய படைகளும், 2, 3 கார்களும், சாதா போலீஸ் 20, 30 பேர்களும், நிற்பதைப் பார்த்துக் கொண்டே சென்றோம். முன் ஏற்பாட்டின் படி, ஓட்டலில் காலை உணவு எடுத்துக் கொண்டு எல்லோரும் நாலு கால் மண்டபத்தை அடைந்தோம்.  இரண்டிரண்டு பேர்களாக அணிவகுத்து  நின்ற பின், 'வந்தேமாதரம்' 'அல்லா ஹ¨ அக்பர்' 'மகாதமா காந்திஜிக்கு ஜே!' என்ற கோஷங்களுடன், 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற வழிநடைப் பாட்டைப் பாடிக் கொண்டு புறப்பட்டோம்.  1930 ஏப்ரல் மாதம், பொறுக்கி எடுக்கப்பட்ட தியாக மணிகளான நூறு தொண்டர்களுடன், ராஜாஜி தலைமையில் திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து வேதாரண்யத்திற்கு பாத யாத்திரையாகச் சென்று 28ந்தேதி வேதாரண்யம் அடைந்து, 30ந்தேதி அதிகாலையில் ராஜாஜி முதல் பிடி உப்பு அள்ளி ”உப்பு சட்டத்தை” மீறுவதென்றும், அதன் பின்னர், தொண்டர்கள் தனித் தனியாகவோ, அல்லது சிறுசிறு குழுக்களாகவோ உப்பு சட்டத்தை மீறுவதென்றும், முடிவு செய்த இயக்கத்திற்கு  வழிநடைப் பாட்டொன்று தேவையென்று நாமக்கல் கவிஞருக்கு ராஜாஜி விடுத்த வேண்டு கோளுக்கிணங்க, எழுதப்பட்ட Marching Song இது.  இதையும் பாரதியார் பாடல்கள் பலவற்றையும் பாடிக் கொண்டு பல வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றோம். திருச்செங்கோடு மக்களுக்கு ஏற்கனவே எங்கள் சத்தியாக்கிரக விஷயம் தெரிந்திருந்தும், அந்த அதிகாலை வேளையில் எவரும் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்து, எங்களை வேடிக்கை பார்க்கக் கூடத் துணியவில்லை. அவ்வளவு பயமோ?  ராஜாஜி  “Not even a dog barked when Gandhiji was arrested.” என்று லண்டன் பார்லிமெண்டில் இந்தியா மந்திரி  அமெரி சொன்னபோது ரோஷப்பட்டோமே; இப்போது என்ன பார்க்கிறோம?' என்று மனம் நொந்து சொன்னார். காலை 6 30 மணியளவில்,  ஊர்வலம்  மீண்டும் நாலு கால் மண்டபத்தை அடைந்தபோது,  ஊர் மக்கள் சுமார் நூறு பேர்கள் குழுமியிருந்தது, சற்று ஆறுதல் அளித்தது.  ராஜாஜி உட்பட சத்தியாக்கிரகிகள் நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் கைப்பட எழுதி வைத்திருந்த நோட்டீசுகளை விநியோகம் செய்தோம். 
 'சுயராஜ்யம் எமது பிறப்புரிமை - அதை அடைந்தே தீருவோம்; அந்நிய ஆட்சியை அகற்றும் வரை நாங்கள் தொடர்ந்து அகிம்சை வழியில், காந்திய வழியில் சத்தியாக்கிரகம் செய்வோம். நாங்கள் எவ்வித தியாகத்திற்கும் தயாராக வந்துள்ளோம். எவ்வித கஷ்ட நஷ்டங்களுக்கும் அஞ்ச மாட்டோம்; பொது மக்களே! அரசு ஊழியர்களே! நீங்கள் யாரும் அரசுக்கு எவ்வித ஒத்துழைப்பும் தராதீர்கள்; அரசைத் தம்பிக்கச் செய்து இனி இவர்களை நம்மால் அடக்கியாள முடியாதென்று அவர்களாகவே மூட்டை கட்டிக் கொண்டு கப்பலேறச் செய்யுங்கள்!'  என்றவாறு எழுதி, தௌவான முழுப் பெயருடன் கையெழுத்திட்டிருந்தோம்.

நோட்டீசுகள் விநியோகம் செய்த பின், எங்கள் யாத்திரையைத் தொடங்க வேண்டும். இந்த நேரத்தில் சுப்ரி அவர்கள், ராஜாஜி பாவடியில் சொன்ன வார்த்தைகளால் உந்தப்பட்டு மிக மிக உரத்த குரலில், 'வந்தேமாதரம்' 'அல்லாஹூ¨ அக்பர்' 'மகாத்மா காந்திஜிக்கு ஜே!' என்று முழங்கினார். அந்த மண்டபமே அதிர்ந்தது போலிருந்தது.  51 ஆண்டுகள் சென்றும், இன்று கூட என் காதுகளில் அந்த ஆவேச கோஷம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. (அந்நாட்களில் 'அல்லாஹூ அக்பர்' கோஷமும் சேர்த்து சொல்லி வந்தனர். பின்னர் அது தானே மறைந்துவிட் டது. இப்போது கூட 'வந்தேமாதரம்' என்று கோஷம் எழுப்பினால், எதிரொலிப் பவர்களே இல்லை. இது என்ன அநாகரிக சத்தம் என்று கூட நினைப்பார்களோ)   நாலுகால் மண்டபத்¢திலிருந்து  எங்கள் குழு வேலூர் ரோடு நோக்கிப்
புறப்பட்டது. மக்கள் சுமார் 25 பேர்களும் எங்களுடன் வந்தார்கள்.
  இவர்களில் சாதா உடையில், 4, 5 உளவு போலீஸ்காரர்களும் வந்தார்கள்.

(22 01 1985) திருச்செங்கோடு டவுன் எல்லைக்குள்ளேயே, வேலூர் ரோடில் தாலூகா ஆபீஸ், போலீஸ் நிலையம், மாஜிஸ்ட்ரேட் கோர்ட், சப் டிரஷரி, சப் ஜெயில், எல்லாம் இருக்கின்றன. நாலுகால் மண்டபத்¢திலிருந்து  சுமார் இரண்டு ஃபர்லாங் தூரத்தில் தாலூகா ஆபீஸ் உள்ளது: பெரிய காம்பவுண்டு; அதன் தலைவாசல் வேலூர் ரோடில் உள்ளது.  எங்கள் குழு அதன் பக்கம் வரவும், அங்கு போலீஸ் ஜவான்களும், ரிசர்வ் போலீசாரும், வழி மறைத்த படி ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். எங்களை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் 'நில்லுங்கள்; மேலே செல்லவேண்டாம்.' என்று சொல்லி கையில் வைத்திருந்த ஒரு காகிதத்திலிருந்து 'மிஸ்டர் சி. ராஜகோபலாச்சாரி' என்று வாசித்தார். ராஜாஜி  தன் வலக்கையை பாதி மடித்தவாறு உயர்த்தினார்.  "You are under Arrest" என்றார்  இன்ஸ்பெக்டர்.

((26 01 1985) இன்று இந்தியக்குடியரசு தினம்; 1947 ஆகஸ்டு 15ல் சுதந்திரம் பெற்ற பாரதம், 26 01 1950ல் குடியரசு நாடாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டது. தனக்கென ஒரு அரசியல் சாஸனத்தையும் வகுத்துக் கொண்டது.  26 01 1930 ம் வருடம், 'இனி எங்கள் லட்சியம் குடியேறிய நாடுகள் அந்தஸ்தல்ல;  பரிபூர்ண சுதந்திரமே எங்கள் லட்சியம்' என்று இந்திய தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் அரசுக்கும் உலகுக்கும் அறிவித்தது.   அந்த புனித உறுதி படைத்த திருநாளை 36வது குடியரசு தினமாக நாம் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம்.  மேலும் இந்த 1985 ம் வருடம் 'இந்திய தேசிய காங்கிரஸின்  நூற்றாண்டு விழா ஆண்டு'.   31 10 1984 ல் பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி தன் சொந்த காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதும், அன்று மாலையே அவர் புதல்வர்  ஸ்ரீ ராஜீவ் காந்தி பதவியிலமர்த்தப்பட்டதும், இரண்டு மாதங்களுக்குள்ளாகவே நாட்டில் பொதுத் தேர்தல்களை மிக வெற்றிகரமாக நடத்தி 512 இடங்களில் காங்கிரஸ் கட்சி 402 இடங்களைப் பெற்று பதவி யேற்றதும், ஜனநாயக நாடுகள் எதிலும் இதுவரை கண்டிராத மாபெரும் வெற்றி.  நம் நாடு மட்டுமல்லாது உலகமே வியந்து போற்றுகிறது.  ஸ்ரீ ராஜீவ் காந்தி பல மாறுதல்கள் நாட்டின் நலனுக்காக விரைவாகச் செய்து வருகிறார். அவருக்கு எல்லா விதத்திலும் இறைவன் அருள் கிட்ட வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.            'எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்.' என்ற மகாகவி பாரதியாரின் நல்வாக்குப் பலிக்கட்டும்.)
மீண்டும் நம் கதைக்கு வருவோம்.

திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர், ராஜாஜியிடம்,   "You are under Arrest" என்றார்.  அதற்கு ராஜாஜி, 'நான் மட்டுமா?' என்று கேட்டார்.  பதில் சொல்லாமல், இன்ஸ்பெக்டர், 'மிஸ்டர் ஜி. ராமச்சந்திரன்' என்று உரத்துக் கூறினார்.  ஸ்ரீ ராமச்சந்திரன் கையை உயர்த்தினார். "You are under Arrest" என்றார் இன்ஸ்பெக்டர்.  இப்படியாக  ஒவ்வொருவர் பெயராகக் கூப்பிட்டு எல்லோரையும் பல போலீஸ்காரர்களின் காவலுடன் 50 அடியில் உள்ள தாலூகா ஆபீஸ் வெளிப்புறத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் அமரச்செய்து, சில  போலீஸார் மட்டும் காவலிருந்து, மற்றவர்கள் சென்று விட்டனர். “இதில் கண்டுள்ள பேர்கள் ஒவ்வொருவரும் தனிநபர் சத்தியாக்கிரகிகள்.  அவரவர் தன் சொந்த கஷ்ட நஷ்டங்களை எதிர்பார்த்தே இதில் பங்கேற்றிருக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் அவரவரே தலைவரும் தொண்டருமாவார்“ என்று ராஜாஜி கவர்னருக்கு எழுதியிருந்ததாலோ, என்னவோ ஒவ்வொரு பேராக அழைத்து அரெஸ்டு செய்தார்கள் போலும். 
7 30 மணியளவில் ஓட்டலிலிருந்து அரசு செலவில் காலை சிற்றுண்டி இட்லி, தோசை காபி கொண்டு வந்தார்கள். சாப்பிட்டபின் எல்லோரும் அமர்ந்து ஏதேதோ பேசி மகிழ்ந்தோம்.  10 மணிக்கு எங்களை அங்கேயே உள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்று பெஞ்சுகளில் அமரச் செய்தனர். மாவட்ட ஆட்சியாளர்,  (எஸ். வெங்கட சுப்பிரமணியன் என்று நினைக்கிறேன்.)  தன் காரில்  மாவட்ட  போலீஸ் அதிகாரியுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததை, நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது.  சரியாக 10 30 மணிக்கு கோர்ட்டு ஹாலின் பின் பக்கவாட்டிலுள்ள கதவு வழியாக சங்கரி சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் (S.D.M. - திரு பங்கு மேனன்) தன் டவாலி சேவகருடன், உள்ளே நுழைந்து, இரண்டு படிகள் ஏறி, கோர்ட்டாரின் ஆசனத்தில் தலை குனிந்தபடியே அமர்ந்தார். ராஜாஜி பல பெரிய ஜட்ஜுகள் முன்னிலையில் கோர்ட்டுகளில் வாதாடியவர் அல்லவா? ஆகவே கோர்ட்டார் உள்ளே நுழைந்ததும் எழுந்திருந்து நின்றார். அவரே நின்றதால் நாங்களும் யாவரும் எழுந்து நின்றோம்.  கோர்ட்டு நடவடிக்கைகள் - எங்களைப் பற்றிய வழக்கு ஆரம்பித்தது.  சுமார் 15 நிமிடங்கள் வரை நாங்கள் நின்று கொண்டே இருந் தோம்.  வழக்கு நடந்து கொண்டே இருந்தது.  எங்களைக் கைது செய்த  போலீஸ் இன்ஸ்பெக்டர், சற்று தைரியத்தை வரவழைத்துக் கொணடு, "If the Court permits, shall I ask these gentlemen to take thier seats?" என்றார்.  உடனே S.D.M. அவர்கள் சற்றே பரபரப்படைந்து தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று, "Gentlemen, Please take your seats." என்று கூற, ராஜாஜி, "Thanks to the Court"  என்று சிரித்துக் கொண்டே சொல்லி அமரவும், நாங்களும் அமர்ந்தோம். 
அதன் பின்னர் அரசு தரப்பு வாதங்கள் ஒரே உளறலாக நடந்து முடிந்தது.  'குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? மறுக்கிறீர்களா?' என்று கோர்ட்டார் கேட்க, ராஜாஜி, 'எல்லார் சார்பிலும் நான் சொல்ல விரும்புவது என்ன வென்றால், நாங்கள் அனைவரும் சத்தியாக்கிரகிகள். ஆகவே நாங்கள் கோர்ட்டு நடவடிக்கைகளில் எதிர்த்து வழக்காட மாட்டோம்.  ஆகவே கோர்ட் என்ன முடிவு தீர்மானிக்கிறதோ அதை நாங்கள் ஏற்போம்.  நான், 17, 18 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பல கோர்ட்டுகளில் பல கேஸ்கள் நடத்தியிருக்கிறேன்.  அந்தப் பழக்க தோஷம், இங்கே அரசு தரப்ப வாதங்கள் பற்றி சில கேள்விகள் - Public Prosecutor ஐக் கேட்க மனம் விழைகிறது.  (The legal Brain in me rebels against what is said in the Court by the Prosecution; Just I want to put certain questions to the Prosecution and elicit replies which need not go into the Court records.) நான் கேட்கும் கேள்விகளும் அதற்கு அரசு தரப்பு பதில்களும்,  கோர்ட்டு நடவடக்கைகளில் பதிவு செய்யப்பட வேண்டாம்' என்று சொன்னார்.  கோர்ட்டார் அனுமதித்ததன் பேரில், பப்ளிக் பிராஸிக்யூட்டரை ஏதேதோ கேள்விகள் கேட்டுத் திணற டித்தார்.  இந்த வேடிக்கையை சுமார் 15 நிமிடங்கள் நடத்திய பின், கோர்ட்டு எல்லோரும் 144 தடை உத்திரவை மீறியதாகக் குற்றம் சாட்டி 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்து  ராஜாஜிக்கு மட்டும் வெறுங்காவல் தண்டனையும் 'ஏ' வகுப்பும் அளித்து தீர்ப்பு வழங்கினார்.

 “ஏன் எனக்கு மட்டும் தண்டனையில் இந்தப் பாகுபாடு?  என்னுடன் இன்று தண்டிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை சௌகரியங்கள், கோர்ட்டாரின்  வாழ்க்கை வசதிகளுக்குச் சற்றும் குறைந்த தில்லை. இவர்களில் பலர் படித்த படிப்பும், அவர்கள் வகித்த பதவிகளும் அனுபவங்களும் ஒரே தன்மையுடையன.  ஆகவே என்னையும் 'சி' வகுப்பிலேயே வைக்கவும்” என்றார்.  "My hands are tied; They can apply to the Government" என்று சொல்ல கோர்ட்டு கலைந்தது. 

(28 01 1985) எங்கள் மதிய உணவு ஓட்டலிலிருந்து கொண்டு வந்து பரி மாறப்பட்டது.  மாவட்ட ஆட்சியாளரும், போலீஸ் அதிகாரியும், எவ்வித அசம்பாவிதமும் நடந்து விடவில்லை என்று உறுதி செய்து கொண்ட பின், புறப்பட்டுச் சென்றார்கள். ரிசர்வ் போலீசார், இரும்புத் தொப்பிக்காரர்கள்
எல்லோரும் வாபஸாயினர்.

மாலை 4 மணியளவில், எங்கள் கோஷ்டியினர், சேலம் சந்திப்பு ரயில் நிலயத்திற்கு  பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு பெண்கள் மூவரும் வேலூர் (N.A.Dt.) பெண்கள் சிறைக்கும், மற்றவர்கள் ராஜாஜி உட்பட, கோவைக்கும் ரயிலில் அழைத்துச் செல்லப் பட்டோம்.  அய்யாமுத்துவும், பி.எஸ் சுந்தரமும் முன்னதாகவே பஸ்களில் சென்று, ஈரோடு, திருப்பூர் ரயில் நிலயங்களில் எங்களுக்கு காபி, பலகாரங்கள் வழங்க ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். எங்களுக்குக் காவலாக வந்த போலீசார் எவ்வித ஆட்சேபணையும் செய்யவில்லை.  அவர்களும் எங்களுடன் சேர்ந்து எல்லா ஆனந்தத்தையும் அனுபவித்தார்கள்.  கோவை ரயில்  சந்திப்புக்கு இரவு 11 மணியளவில்  சென்றடைந்தோம். ரயில் நிலயத்திற்கு சமீபமாக உள்ள டிரஷரி ஆபீஸ் மத்திய ஹாலில் போய்ப் படுத்தோம். 

மறுநாள் காலையில  5 30  மணியளவில் எழுந்து காலைக்  கடன்களை  முடித்து  7 மணிக்கு  மத்திய சிறைக்குப் புறப்பட ஜவான்கள் எங்களைத் தயார் செய்தனர். அப்போது பெரிய பாத்திரங்களில், இட்டிலி, தோசை, காப்பி எல்லாம் வந்தன. ராஜாஜி அதைப் பார்த்துச் சிரித்தார். சுப்ரி, கிருஷ்ணசாமி இருவரையும் பார்த்து, “only this much and no further" என்று கடுமையாகச் சொன்னார்.   இரவு டிரஷரி ஹாலில் படுத்த பின், சுப்ரியும் எம்.எஸ்.கே.யும்,  இரண்டு ஜவான்களுடன் C.S.Hotelக்குப் போய், இதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தனர் எனபது பின்னர்தான் எங்களில் பலருக்குத் தெரிந்தது.  ராஜாஜியும் எங்களுடன் டிபன் சாப்பிட்டார்.

((30 01 1985) இன்று சர்வோதய தினம். காந்தியடிகள் அமரத்துவம் அடைந்த தினம். 30 1 1948 வெள்ளிக் கிழமை மாலை 5 15 மணிக்கு டெல்லி பிர்லா மாளிகை திறந்த வெளித் தோட்டத்தில் மாலைப் பிரார்த்தனைக்கு வந்த சமயம், கோட்சே எனபவன், அவரைச் சுட்டுக் கொன்று விட்டான். அந்த நினை வு தினம்.    இன்று தை கிருத்திகை தினம்.  திருக்கோவிலூர்  ஸ்ரீ ஞானானந்த தபோவனம், ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் ஜெயந்தித் திருநாள். )

என் கதையைத் தொடருகிறேன்.
8 8 1933 காலை 7 30 மணிக்கு எங்கள் 14 பேர்களையும், கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றார்கள்.  எங்கள் உடை மற்றும் உடைகளைப் பதிவு செய்து கொண்டு  சிறை உடைகளை எங்களுக்குத் தந்தார்கள்.  ராஜாஜிக்கு வெறும் காவல் தண்டனையாதலாலும், 'ஏ' வகுப்பு தந்திருந்ததாலும், அவர் தன் சொந்த உடையிலேயே இருந்தார். மறுநாள் காலையில் 8 மணியளவில்,  மத்திய சிறையின் உயர் மருத்துவ அதிகாரி Lt. Col. Fraser என்ற ஆங்கிலேயர், எங்கள் அங்க மச்ச அடையாளங்கபை¢ பார்த்துக் கையொப்பமிட வந்தார். நாங்கள் யாவரும் ஒரு மரத்தடியில், வரிசையாக உட்கார்ந்திருந்தோம். அதே  மரத்தடியில், ஒரு மேஜையும், நாற்காலியும் போடப்பட்டிருந்தன.  மருத்துவ அதிகாரி வந்து நாற்காலியில் அமர்ந்தார்.  அவர் பக்கத்தில் சிறை அலுவலக குமாஸ்தா ஒருவர் நின்று கொண்டிருந்தார்.  இவர் எட்டு முழ வேஷ்டியை இரண்டாக மடித்து, தட்டுச் சுற்றாகக் கட்டியிருந்தார். உடம்பில் ஷர்ட். அதன் மேல் ஓப்பன் கோட்.  கழுத்தில் டை கட்டி, தலையில் வட்டமாக Felt Cap அணிந்திருந்¢தார்.

அதிகாரி முன் இந்த குமாஸ்தா, 'சி. ராஜகோபலாச்சாரி' என்று கூப்பிட் டார்.  ராஜாஜி எழுந்து நின்றார். 'ஒன் பேரென்ன?' என்று கேட்டார், குமாஸ்தா.    ராஜாஜி அமைதியாக, 'சி. ராஜகோபலாச்சாரி' என்றார். 'ஒன் அப்பன் பேரென்ன?' என்று கேட்டார், குமாஸ்தா. உடனே சுப்ரி, ருத்திர தாண்டவனாக மாறி விட்டார். கையை ஓங்கிக் கொண்டு அந்த குமாஸ்தாவைத் தாக்க எழுந்து ஓடினார். 'என்னடா கேட்டாய்?' என்று கோபாவேசமாகப் பாய்ந்தார்.  இதற்குள், ஸ்ரீ.ஜி.ராமச்சந்திரனும், ஸ்ரீ. எம். எஸ். கிருஷ்ணசாமியும்,அவரைப் பிடித்து நிறுத்தினார்கள்.  டாக்டர் Fraser  தன் இருக்கையிலிருந்து கலவரப்பட்டு எழுந்து நின்று, "What happened? What happened?" என்று கேட்டுக் கொண்டே, ராஜாஜி யிடம் வந்து நின்றான். “Nothing. Don’t worry.  carry on with the checking. “ என்று சொன்னார். அந்த குமாஸ்தா நடுநடுங்கிக் கொண்டே 'மரியாதை தெரிந்தவராக', 'உங்கள் பெயரென்ன? உங்கள் தகப்பனார் பெயரென்ன?' போன்ற கேள்விகளைக் கேட்டு, ராஜாஜியையும், மற்ற எங்கள் எல்லோரையும் விசாரித்து, அந்த சாங்கியத்தை அரை மணி நேரத்தில் முடித்துக் கொண்டு சென்றனர்.

சுப்ரியின் கோபம், அடங்கவேயில்லை. ராஜாஜி எல்லோரையும் உட்கார வைத்துக் கொண்டு அமைதியாகப் பின் வருமாறு கூறினார். “அய்யோ பாவம்! அவர் என்ன செய்வார்? பார்த்தால் இருபது வருட காலமாக சிறை குமாஸ்தாவாகவே வேலை பார்த்து வருவார் போலிருக்கிறது. அவர் உத்தியோக அனுபவத்தில் பலவித கிரிமனல் குற்றங்கள் புரிந்தவர்களை மட்டுமே பார்த்திருந்திருப்பார்.  அவர்களை அதிகார தோரணையில் இம்மாதிரி கேள்விகளைக் கேட்டு அவர்களும் பயந்து கொண்டே பதில் சொல்லக் கேட்டுப் பழகிப் போயிருப்பார்.  நம் போன்ற அரசியல் கைதிகளை அபூர்வமாகத்தான் பார்த்திருப்பார். ஆகவே அவரிடம் நாம் அனுதாபம் கொள்ள வேண்டுமே தவிர, கோபம் கொள்ளக் கூடாது” என்று சுப்ரியை சமாதானப் படுத்தினார்.

ராஜாஜி 'ஏ' வகுப்பில் இருந்ததால், அவரை மத்திய சிறைக்குள் கொண்டு போய் விட்டார்கள். மற்றவர்களை இணைச் சிறைக்கு அழைத்து வந்தார்கள். ஜி.ராமச்சந்திரன், எம்.எஸ்.கிருஷ்ணசாமி, சுப்ரி, வி.கிருஷ்ணசாமி கே.வி. சுப்பராவ், எம்.எஸ். நாராயண ராவ், வி.எஸ்.தியாகராஜன், ஆகியோருக்கு அவர்கள் வகித்த பதவிகள், கல்வித் தகுதியைக் கண்டு, 'பி' வகுப்பில் மாற்றி, வேறு சிறைகளுக்கு அனுப்பி விட்டாரகள்.

ஆனால், ராஜாஜியின் விருப்பத்தை ஏற்று சிறை அதிகாரிகள் வக்கீல் கே. வி.சுப்பராவ் அவர்களை ராஜாஜியுடன் தங்க அனுமதித்தார்கள். ஆர் வேங்கடராமன், ஆர் அங்கமுத்து, என்.சின்னசாமி, அப்துல் கஃபார் ஆகிய நால்வரும் கடலூர் சிறைக்கு மாற்றலாகிச் சென்று விட்டனர்.  ஏ.கே.ஸ்ரீனிவாஸனும், அடியேனும், கோவை மத்திய சிறையின் ஜெயில் அன்னெக்ஸிலேயே எங்கள் ஆறு மாத சிறைவாசத்தை அனுபவித்தோம்.  இதே காலத்தில் தந்தை பெரியார், ஏதோ ஒரு காரணத்திற்காக கோவை சிறையில், வேறொரு பகுதியில் இருந்து வந்தார். இதையறிந்த ராஜாஜி, இவரையும் தன்னுடன் இருக்க அனுமதிக்கும்படி சிறை அதிகாரிகளிடம் கேட்டு அவரையும் தன்னுடன் இருக்கச் செய்து கொண்டார். ஆக ராஜாஜி, கே.வி. சுப்பராவ், தந்தை பெரியார் மூவரும் மத்திய சிறையின் உட்பகுதியில், தனியாக முளவேலி போடப்பட்ட ஒரு சிறிய வட்டத்தில் இருந்தனர். நாங்கள் - 'சி' வகுப் பு அரசியல் கைதிகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லை. கே.வி.சுப்ப ராவ், சம்ஸ்கிருதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ராஜாஜி தன் சம்ஸ்கிருத அறிவை இவருடைய உதவியுடன் விருத்தி செய்து கொண்டார். மகாபாரதம், வால்மீகி ராமாயணம் போன்ற அழியாக் காவியங்களை, மூல சம்ஸ்கிருதத்தி லேயே படித்துத் தௌ¤வு பெற்றுக் கொண்டார். பின்னர், வெளியே வந்து, அரசியலிலிருந்து விலகியிருந்த கால இடைவெளிகளில், தமிழில் வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன் ஆகிய நூல்களையும், ஆங்கிலத்தில், Mahabharatha, Ramayana ஆகிய நூல்களையும், எழுதி வெளியிட்டார். இந்த நூல்கள் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின. இன்றும், விற்பனையாகி வருகின்றன. 

1934 ஜனவரி முதல் வாரத்தில் நாங்கள் விடுதலை பெற்று அவரவர் இடங்களை அடைந்தோம்.
(31 01 1985) நான் 1932 பிப்ரவரி இரண்டாம் வாரம் முதல், 1933 ஜனவரி முதல் வாரம் வரை கோவை மத்திய சிறையின் ஜெயில் அன்னெக்ஸில் இருந்த பின்,  மீண்டும் 1933 ஆகஸ்டு முதல் வாரம் முதல், 1934 ஜனவரி முதல் வாரம் வரை அதே இடத்தில் தானிருந்தேன். ஜெயில் அன்னெக்ஸில் 72 அறை கள் மட்டுமே இருந்ததால், அரசியல் கைதிகள் வருவதை அனுசரித்து, பலர் வருவதும், வேறு பலர் வெளியூர் சிறைக்குப் போவதுமாகவுமிருந்தனர்.  ஆகவே, சிலர் சில நாட்கள்,  சிலர் சில வாரங்கள், சிலர் சில மாதங்கள், என்னுடன் இந்த சிறையில் தங்கியிருந்தவர்களின் பெயர்களை என் நினைவிற்கு வந்த மட் டும் எழுதுகிறேன். கேரளம், தமிழகம், கன்னட பிரதேசம், ஆந்திரம் ஆகிய 4 பிரதேசங்களிலிருந்தும், குடகிலிருந்தும், இந்த சிறைக்கு வந்து சென்றார்கள்.

ராஜாஜி தலைமையில் 7 8 1933 சத்தியாக்கிரகம் செய்த காந்தி ஆசிரம ஊழியர்கள் அன்னியில், என் முதல் சிறைவாசத்தின் போது திரு எம்.எஸ். அனந்தராம், திரு ஹெச். விஸ்வநாதன், இருவரும் இருந்தனர்.  மற்றும் நாமக்கல் திருவாளர்கள் பி.பத்மனாபன், மாரியப்பன், லத்தீஃப், எம்.டி.ராமானுஜம், மோகனூர் திரு. குப்புசாமி, பொட்டணம் திரு. ராமச்சந்திர ஆச்சாரி, வீரகனூர் திரு ஸ்ரீனிவாச ரெட்டி, திரு போலம ரெட்டி, திரு ராமச்சந்திர ரெட்டி, திரு. நாராயணசாமி பிள்ளை போன்றோரும் இருந்தனர்.  மேலும் திருச்சி திரு. டி.எஸ்.அருணாசலம், மதுரை திரு. சிதம்பர பாரதி, திரு. தியாகராஜ சிவம், சேலம் திரு. சி. அனந்தாச்சாரி, பொள்ளாச்சியில் கைதாகி வந்த திரு. சி. சுப்பிரமணியம், திரு. பி.என் சுப்பரத்தினம, புக்களம சகோதரர்கள் திருவாளர்கள் பெரியசாமி, சின்னசாமி கவுண்டர்கள் பவானி திரு. பி.கே.நல்லசாமி, விளாங்குட்டையூர் ஸ்ரீ ரங்கசாமி ரெட்டியார், கூகலூர் திரு. கணபதி அய்யர், திரு. அருணாசலம், கோவை திரு. அய்யாமுத்து, திரு. வெங்கடாசல நாயக்கர், உடுமலை திரு. வேலப்ப நாயக்கர், திரு.சத்தியமங்கலம் திரு.சிவராஜ் கௌடா, நாமக்கல் திரு.சேஷாத்ரி செவ்வாய்ப்பேட்டை திரு.டி.என்.பாலவெங்கட்டராம செட்டியார்,  சேலம் திரு.பழனிசாமி செட்டியார், ஈரோடு திரு. எம்.ஏ. ஈஸ்வரன், திரு.வி.வி.சி. காவேரி முதலியார், திரு.ச.து.சு. யோகி,  திருப்பூர் பி.எஸ்.சுந்தரம், ரெங்கசமுத்திரம் திரு. ஆர்.எம்.குமாரசாமி, கொடுமுடி திரு. பெரியண்ணன், இன்னும் எத்தனையோ பேர்கள் நினைவுக்கு வரவில்லை. சென்னை திரு. ஏ.ஆர்.வி. ஆச்சாரும் என்னுடன் இருந்தார்.

(02 02 1985) நேற்று இரவு 7 30 மணியளவில், திருச்சி வானொலி நிலையத்தைச் சேர்ந்த திரு கமாலுத்தீன், என்ற அன்பர், 84, டி.பி.எஸ். நகர் சென்று என் மகன் கண்ணனுடன் பவானி நகர் வந்தார். இரவு 9 30  மணி வரை இருந்து சுமார் 25 நிமிடங்கள் என் சுதந்திரப் போராட்ட அனுபவங்கள், பற்றி நான் சொன்னதையும், பாடிய பாட்டுக்களையும் பதிவு செய்தார்.  இதைச் சுருக்கி இரண்டு வாரங்களுக்குள் 'மலரும் நினைவுகள' பகுதியில் ஒலி பரப்புவார்கள்.)
என்னுடன் சிறையில் இருந்த பிற மொழிக்காரர்களில் ஆந்திரத்து தெலுங்கர்கள்: கரிமல்ல சத்திய வீரபத்திர ராவ் நாயுடுகாரு, (பல
சமஸ்தானங்களின் ஆஸ்தான பயில்வான். மிக மிருதுவான உள்ளங்கொண்டவர். எப்போதும் 'சிவாஹம்' என்று ஜபித்துக் கொண்டே காரியங்களைச் செய்பவர்.), திரு. கல்லூர் சுப்பாராவ், (இவர் பின்னாளில் ஆந்திரப்பிரதேச சட்டமன்ற உதவி சபாநாயகராக இருந்தவர்.). மேலும் ஒரு அஞ்சையாவோ, செஞ்சையாவோ இருந்ததாக நினைவு.  குடகு தேசத்தைச் சேர்ந்த மாதப்பா என்ற வாலிபரின் நல்ல நிறமும், எப்போதும புன்முறுவல் பூத்த குழந்தை முகமும், இன்னும் நினைவில் நிற்கிறது. திரு. குடும்பையா, ஆறரை அடிக்கு மேல் உயரமான கரும்பையா, கல்லெறிந்தால் எதிர்த்தடிக்கும் உடல் வாகு கொண்ட கிருஷ்ணய்யா, (இவர் நடுத்தர உயதினராயினும், அவரை, குடகுக்காரர்கள், தங்கள் கேப்டனாகக் கருதினார்கள்.)
பங்களூரைச் சேர்ந்த சிவானந்தம், சிவப்பிரகாசம், ஜி.ஆர் சுவாமி, இன்னும் சிலரும். கேரளத்தைச் சேர்ந்த சி.அச்சுதன் நாயர், கே.தாமோத மேனன், மற்றும் சிலர் இப்படியாக தென்னாட்டு நான்கு மொழி பேசுபவர்களும் இருந்தார்கள்.  ஓரிருவாரங்களாவது என்னுடன் கழித்தவர்களில்,  பெரும்பாலானவர்களின் பெயர்களை ஓரளவு நினைவு படுத்தி எழுதி விட்டேன். மேலும் சிலருடைய பெயர்கள் நினைவுக்கு வரவில்லை.  கோவை மாவட்டத்திலிருந்து ஒரு நாவிதர் வந்திருந்தார். அவர் பெயர், எவ்வளவு முயற்சி செய்தும் நினை வுக்குக் கொண்டு வர முடியவில்லை.


 நான் 1932 பிப்ரவரி மூன்றாம் வாரம் ஜெயில் அன்னெக்ஸில் வைக்கப்பட்டபோது, அரசியல் கைதிகளை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். காலை 6 முதல் 8 வரை, காலைக் கடன்கள் முடித்துக் குளித்துக் கஞ்சி அருந்த இரண்டு மணி நேரமும், பகல் 11 முதல் 1 வரை பகல் உணவுக்காக, பிற்பகல் 4 முதல் 6 வரை மாலை (இரவு) உணவுக்காகத் திறந்து விடுவார்கள். மாலை 6 முதல் காலை 6  வரை 12 மணி நேரமும், பகலில் 6 மணி நேரமும் ஆறுக்குப் பத்துக்குப் பன்னிரண்டு அந்தத் தனி அறையில் அடைபட்டுக் கிடந்தோம். ச.து.சு.யோகி, போன்றோருக்கு இது மிகவும் உடலைப் பாதித்து விட்டது.  அடிக்கடி அவருக்கு காக்கை வலிப்பு வந்து விடும்.  வார்டர்கள் எங்கள் அறையைப பூட்டும் சாவிக் கொத்துக்களை கதவுக் கம்பிகள் வழியாக அவர் இரண்டு கைகளிலும் கொடுப்பார்கள். டாக்டர் வந்து அம்மோனியா குழல்களை உடைத்து அவர் மூக்கில் பிடிப்பார்கள்.  ஒருவாறு கண் திறந்து பார்ப்பார்.  மீண்டும் வாயில் நுரை ததும்பி வழியும்.  ஒருநாள், மிஸ்டர் கேசீ என்ற ஆங்கிலோ இந்திய ஜெயிலரும் மிஸ்டர் கிங் என்ற ஐரிஷ்கார ஜெயில் சூப்பிரண்டெண்டும், இந்த விபரீதத்தைப் பார்த்த பின, காலை 6 முதல் மாலை 6  வரை, எங்கள் அறைக் கதவுகளைப் பூட்ட வேண்டாமென்று உத்திரவு போட்டார்கள்.  சுமார் 200 அடிக்கு 200 அடி விஸ்தீரணம் உள்ள,  பத்தடி உயர முள்ள காம்பவுண்டு சுவருக்குள் திறந்த வெளியில் ஆகாயத்தையும் பூமியையும் பார்த்துக் கொண்டும், காம்பவுண்டுக்குள் ஓடிப் பிடித்தும், எங்களுக்குள் படித்தவர்கள், கீதை, ராமாயாணம். மகாபாரதம், பாகவதம், பக்த விஜயம் போன்ற தலைப்புக்களில் பேசுவதும் அதைக் கேட்டு ரசிப்பதுமாகக் காலம் கடத்தி வந்தோம். 

(03 02 1985)  1930 உப்பு சத்தியாக்கிரக காலத்திலேயே, பல  சத்தியாக் கிரகிகள்,  கோவை மத்திய சிறையில் இருந்து, பலவித போராட்டங்கள் நடத்தி, சிறை வாழ்க்கையை எங்களுக்கு அவ்வளவு கஷ்டமில்லாததாகச் செய்து வைத்திருந்தார்கள்.  எங்களுக்கு எவ்வித வேலையும் கொடுக்கவில்லை.  எங்களில் பலர் காந்தியக் கோட்பாடுகளை அவ்வளவாகப் பொருட்படுத்த வில்லை. ஆகவே ஏதாவது ஒரு வியாஜ்யத்தில், சிறை அதிகாரிகளுடன் முரண்பட்டு, உண்ணா விரதம், ஒத்துழையாமை போன்ற வழிகளைக கையாண்டு, ஓரளவு  சிறை வாழ்க்கையின் கஷ்டங்களைக் குறைத்து வைத்திருந்தார்கள். காந்திய சிந்தனைகளில் மதிப்பு வைத்திருந்த பலர், சிறை வாழ்க்கை கஷ்டமானதாகத்தான் இருக்குமென்பதை நன்கு உணர்ந்தே ஜெயிலுக்கு வந்தர்களாதலின், அவர்கள் சகிப்புத் தன்மையை மற்றவர்களுக்கும் ஊட்டி வந்தார்கள்.

மூன்று வேளைகள் உணவு வழங்கப்படும்.  காலையில் 6 30 முதல் 7 மணிக்குள், அரிசிக்கஞ்சியும் (சுமார் அரை லிட்டர்), பருப்புத் துவையலும்.  மதியம் 11 30 மணியளவில் 9 அவுன்ஸ் அரிசிச் சாதமும், ஒரு குவளை குழம்பும்; குழம்பில் மாதத்தில் 20, 25 நாட்கள், எவ்வித கறிகாய் இருக்காது. பருப்பு, புளி, மிளகாயப் பொடி, உப்பைக் கொதிக்க வைத்ததுதான் குழம்பு. மாலையில் அதே மாதிரி  குழம்பும், 7 அவுன்ஸ் அரிசிச் சாதமும்.  அபூர்வமாகச் சில  நாட்களில், வெள்ளை முள்ளங்கியின் மேல் பகுதிக் கீரையோ, வெள்ளைப் பூசணி, சர்க்கரைப் பூசணி ஆகியவற்றின் மேல் தோல்களோ, குழம்பில் மிதப்பதுண்டு. முள்ளங்கியின், பூசணியின் சதைப் பற்றெல்லாம் எங்கே போயிருக்கக் கூடும் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்.  எங்களில் சிலருக்கு 'மிகஸ்ட் டயட்' போட்டிருப்பார்கள்.  அதாவது 'களிப்படி' என்பது பெயர். காலையில், இவர்களுக்கு கேழ்வரகு அல்லது சோளக்கஞ்சி; நடுப்பகல் கேழ்வரகு அல்லது சோளச் சோறு; மாலையில் மட்டும், எல்லோருக்கும் பொதுவாக அரிசிச் சோறு.  ஆகவே நாங்கள் ஒருவருக் கொருவர் கொடுத்து வாங்கிப் பறிமாறிக் கொள்வோம்.  எங்களில் பலருக்கு வழங்கும் அளவு உணவைச் சாப்பிட முடியாது.  சிலருக்கு சிறையில் வழங்கும்  உணவு பற்றாது.  ஆகவே எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம். சத்தியாக்கிரகிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் போது அவரவர்களின், சாதி, சமூக அந்தஸ்து வீட்டில் உணவுப் பழக்க வழக்கங்கள், போன்றவற்றின் அடிப்படையில்,  சத்தியாக்கிரகியைக் கலந்து கொள்ளாமலேயே, தங்களுக்குள் பேசிக்கொண்டு 'களிப்படி' போடுவதைத்
தீர்மானித்து விடுவார்கள்.  சிலர் விஷயத்தில், வேண்டுமென்றே அவர்கள் மன்னிப்பு எழுதிக் கொடுத்து விடுதலையாகிப் போகட்டும் என்ற எண்ணத்துடனேயே இப்படி 'களிப்படி'  போடுவதுமுண்டு.  ஆயினும் சிறைக்கு வந்து விட்டால், எல் லோரும் ஒருவருக்கொருவர் சமாளித்துக் கொள்வோம்.  பொதுவாக நான் அனுபவித்த ஒன்றரையாண்டு சிறைவாசமும், சிறைக்குள் இருக்கும் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு மற்ற நண்பர்களுடன் ஆனந்தமாகவே நடந்து முடிந்தது.

(04 02 1985) எனக்கு அப்போது 24, 26 வயதுதான்.  என்னை விட இரட்டிப்பு வயது முதிர்ந்தவர்களும், இரட்டைப் பட்டதாரிகளும், சொத்து சுகத்தில் திளைத்தவர்களும் கூட இருந்ததால், நாட்டு நடப்பு அறிவும், வாழ்க்கை அனுப வங்களும், நிறையக் கிடைத்தன.  ச.து.சு. யோகி, Chainsmoker.  சிறைக்குள அது கிடைக்காதே! பொருள் வசதியும் அவருக்கு இல்லை. ஆகவே, அவர் மிகவும் சிரமப் பட்டார்.  ஜெயில் லைப்ரரியில் உள்ள புத்தகங்களெல்லாம் மிகப் பழமையான கிழிந்த புத்தகங்கள்தான். அவைகளையும் வாங்கிப் படிப்பார்.  அப்போது புகைக்கும் நினைப்பு வந்து விட்டால் புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கிழித்து,  உலர்ந்த புளிய இலை, சுவரில் உள்ள சுண்ணாம்பை சுரண்டி எடுத்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, கிழித்த பேப்பரில் வைத்துச் சுருட்டி, இரும்புத் தகட்டை கல் தரையில் உரசி, பொறி வரச் செய்து,  சுருட்டியதைக் கொளுத்திப் புகைப்பார்.  வார்டர்களைக் கெஞ்சிக் கூத்தாடி, ஒரு பீடி பெற்று, வைரத்துப் பொக்கிஷத்தைக் காப்பாற்றுவது போல் வைத்துக் காப்பாற்றி, 3, 4 தினங்கள, 4,5 தடவைகள், இரண்டு மூன்று இழுப்புக்கள் இழுத்து, அணைத்து வைத்துக் காப்பாற்றுவார். ஒரு நாள் புகை பிடிக்காமல் இருந்தால், மறுநாள் காக்கை வலிப்பு வந்து மிகவும் சிரமப்படுவார். வி.வி.சி. காவேரி முதலியாரும், Chain smoker தான். ஆனால் அவரோ, ஒரு பாக்கெட் சிகரெட்டை 4, 5 ரூபாய் செலவு செய்து, சிறைக்குள் பெறுவார். அன்று அரையணா மதிப்புள்ள பீடிக்கட்டு, (10 பீடி) ஒரு ரூபாய் கொடுத்தால் சிறைக்குள் கிடைக்கும். அப்பப்பா! புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களும் புலால் உணவுக்குப் பழக்கப்பட்டவர்களும், சிறையில் அனுபவித்த கஷ்டத்தைப் பார்க்கும் போது இவர்கள் நரக வேதனை என்பதை அனுபவிக்கிறார்களோ என்று எண்ணச் செய்யும்.  இவ்வளவு கஷ்டத் தையும் பொறுத்துக் கொண்டு அவர்கள் மன்னிப்புக்கொடுத்து வெளியே செல்லாமல், தண்டனைக் காலம் முழுவதும் இருந்து விடுதலையானது,  அவர்களது தேசபக்தியையும், மன உறுதியையும் வெளிப் படுத்துவதாக அமைந்தது.

(05 02 1985) Mr. Greenwood என்பவர் கோவை சிறை சூப்பரிண்டெண்ட்.  இவர் Ireland தேசத்தவர்.மாமிச மலை என்ற உடல்வாகு.   ஆறரை அடி உயரம் இருப்பார்.  அவ்வளவுக்கவ்வளவு மிருதுவான இதயம் படைத்தவர்.  பிரதி வாரமும், திங்கள் கிழமை Inspection Rounds வருவார். “திங்கள் கிழமை பேரேட்”  என்று இதை நாங்கள் சொல்வோம்.  கைதிகள் எல்லோரும் வரிசையில் நிற்க வேண்டும்.  யாருக்காவது ஏதாவது குறையிருக்குமாயின் அவர் வரும்போது தன் பக்கத்துக்கு வரும் சமயம், கையை நீட்டினால் நிற்பார்.  கையை நீட்டியவர், தான் கூற வேண்டியதைத் தெரிவிப்பார்.  பொதுவாக, “அறையில், மூட்டைப் பூச்சி, கொசுக்கடி உபத்திரவம் இருக்கிறது; சுண்ணாம்பு அடிக்க வேண்டும்; குளிப்பதற்குப் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை; கக்கூஸ் சுத்தமாக இல்லை; சமைக்கும் அரிசி நாற்றமாக உள்ளது; குழம்பில் காய்கறியே  இருப்பதில்லை” என்பது போன்ற குறைகளைத்தான் சொல்வார்கள்.  ஜெயிலர், டெபுடி ஜெயிலர், ஹெட் வார்டர், வார்டர் போன்றவர்கள், தங்கள் மீது ஏதாவது குற்றம் சொல்லி விடுவார்களோ என அஞ்சுவர்.  ஆகவே துரை வருவதற்கு கால் மணிக்கு முன்னரே, எங்களை வரிசையில் நிறுத்தி வைத்து, 'தயவு செய்து எதையும் கேட்டு விடாதீர்கள்' என்று கேட்டுக் கொள்வார்கள்.  ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்திலேயே தாங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்வார்கள். அவர் அதற்கு, “You are a prisoner. How can you expect things to be to your satiscfaction? You shall have to put up with all the inconveniences; I was a prisoner in my country. I know what prison life is. You shall have to put up with it.”  என்று சொல்லிக் கொண்டே போய்விடுவார். ஆனால் இரண்டொரு நாட்களில், பரிகாரம் கிடைக்கச் செய்துவிடுவார். Mr. Hitchin என்று இன்னொரு ஆங்கிலேயர்.  இவருக்கு நேர்மாறானவர். யார் எதைச்சொன்னாலும், "You shall suffer" என்று சொல்லிப் போய் விடுவார்.  எந்தவித அனுகூலமும் செய்ய மாட்டார்.  நாங்கள் இருந்த ஒன்றரை ஆண்டுகளிலும், விசேஷக் கிளர்ச்சி  எதுவும் விடுதலை வீரர்கள் செய்யவில்லை.  ஒரிரு தடவை மட்டும் ஒரிரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வெற்றி கண்டோம் - சாதாரணக் காரணங்கள்தான் - நாங்கள் எல்லோரும் காந்தி யவாதிகளா? எங்களில் ஒரு சதம் பேராவது நாடு முழுவதும் ஒரு சத காந்தியமாவது அனுஷ்டிப்பவராயின், விடுதலை பெற்ற நம் பாரத நாடு இப்படியா இருக்கும்? - ஏதோ உணர்ச்சி வேகத்திலும,¢ சில சந்தர்ப்ப சேர்க்கை யாலும், சிறைக்கு வந்தவர்களே 90 சதவிகிதம் பேர்கள்.  இது உலகறிந்த உண்மை.

(08 02 1985)  “வெள்ளையர்கள் பாப்பராக்கி விட்ட நம பாரத நாட்டை நம்மிடம் விட்டு  விட்டு,  பெண்டு பிள்ளைகளுடன், மூட்டை முடிச்சுகளுடன், கப்பலேறத் தயாராயிருப்பதை என் மனக்கண்களால் பார்க்கிறேன். அதே சமயத் தில், நாட்டின் பொறுப்பை ஏற்க நம் நாட்டவர்கள், இன்னும் முழுவதுமாகத் தயாராகவில்லையே என்பதையும் கண்டு மிகவும் வேதனைப்படுகிறேன்” என்று காந்தியடிகள் பலமுறை கூறியதை நினைவு கொள்வோமாக.

சுதந்திரம் பெற்று 37 ஆண்டுகள் முடிந்து, 38வது ஆண்டில் இருந்து வருகிறோம். ஆயினும் காந்தி வழிப் பொருளாதார அமைப்பைப் புறக்கணித்துக் குவியல் முறை பொருளாதாரத்தை நாம் கடைப்பிடித்து வருவதால், நாடு முழுதும் சில நூறு பணக்காரர்கள் மேலும்  பணக்காரர்கள் ஆகி வரும்போது, பல கோடி மக்கள், ஏழைகளாகவும், வேலையில்லாமல் வறுமையில்  வாடி, மேலும் ஏழைகளாகி வருவது கண்கூடு.  நம் நாடு குடியரசு ஆனதற்குப் பின், பல வேறு வளரும் நாடுகளின் நிலைகளுடன் ஒப்பிடும்போது, விவசாயம், தொழிற் சாலைகள், விஞ்ஞானம் போன்ற துறைகளில், வேகமான முன்னேற்றங்கள் அடைந்திருப்பது, ஓரளவு உண்மைதானாயினும், நாட்டு மக்களின் பண்பு, நாகரிகம், மரியாதை போன்றவைகளும் வெகு வேகமாக அதள பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருப்பதும் கண்கூடு. 1923-24ல் நடந்த சுயராஜ்ய கட்சி போட்டியிட்ட காலத்திலிருந்தே, இன்று வரை நடந்து வந்த பொதுத் தேர்தல்கள் எல்லாமே பணம் படைத்தவனுக்குத் துணை போயினவேயன்றி, சுயநலமின்மை, நாட்டு மக்களுக்குச் சேவை புரிதல், நற்குணம், நற்பண்புகள் கொண்டவர்கள் தேர்தலில் ஜெயிக்க முடியாத அமைப்பாகி விட்டது நம் தேர்தல் முறை. கட்சிகள், 'நீ எப்படியாவது ஜெயிப்பாயா? அப்படியானால் உனக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும்' என்ற தோரணையில்தான் நேருஜி காலந்தொட்டே நாடு போய்க் கொண்டிருக்கின்றது.
 
(25 03 1985) சுமார் ஒன்றரை மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் இதை எழதத் தொடர்கிறேன்.
நான் கோவை மத்திய சிறையில் முதல் சிறைவாசம் ஓராண்டு காலம் அனுபவித்த போது என்னை விட ஒரு வயது சின்னவனும், என் மூத்த
அக்காவின் புதல்வனுமாகிய என் மருமான் டி.வி.சுந்தரத்திற்கும், சௌ. சரஸ் வதிக்கும் திருமணம் நடந்திருந்தது.  நான் கல்யாணத்திற்கு இருக்க முடியவில்லை. ஆகவே, என் ஓராண்டு கால சிறைவாசம் முடிந்து பல இடங்கள் சென்ற பின், ஒரு நாள் மாலை ரயிலில், திருநெல்வேலி போய்ச் சேர்ந்து என் அண்ணன் வீட்டுக்குப் போனேன். என் அண்ணனும்,  அண்ணியும், வெளியே கிளம்பிக் கொண் டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும்¢ அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. “சரி, சரி. நீ குளித்து உடை மாற்றிக் கொள்.  இன்று மருமான் சுந்தரத்திற்கு சாந்தி முகூர்த்தம்.  நாங்கள் போய் சாப்பிட்டு விட்டு உனக்கும் சாதம் எடுத்து வருகிறோம்.” என்று புறப்பட்டு விட்டார்கள். சிறிது நேரத்தில், என் அக்காவே நேரில் வந்து, கண்களில் நீர் மல்க, 'வா, வா' என்று என் கைகளைப் பிடித்து, தன் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, வைதிகப் பிராமணர்கள் மத்தியில், என்னை உட்கார வைத்தாள்.  எனக்கு சற்று சங்கோஜமாகவும்,  என் உறவினர்களுக்குச் சற்று ஆச்சரியமாகவும் இருந்தது.  இரவு நாங்கள் என் அண்ணன் வீட்டுக்கு வந்ததும், என் அண்ணன் சொன்னார்.  ”கிச்சன் வந்திருக்கிறான்  அங்கு ஆத்தில் இருக்கிறான்.  ஒரு டிபன் கேரியரில் அவனுக்குச் சாதம் போட்டுக் கொடுத்து விடு.   அவன் அங்கேயே சாப்பிட்டு விடுவான்.' என்று சொல்லவும், 'ஏன் அவன் இங்கு வரவில்லை?'  என்று கேட்டாளாம் என் அக்காள்.  'இங்கு வைதீகாள் எல்லாம் இருக்கிறார்கள. ஆதலால், நான்தான் அவனை அங்கேயே இருக்கச் சொல்லி வந்தேன்' என்று என் அண்ணன் சொல்லவும், என் தமக்கை மிகுந்த கோபத்துடன், 'என் தம்பி திருடினானா? கொலை செய்தானா? அவன் தேசத்துக் காகத்தானே சிறை சென்றான். கல்யாணத்துக்கே அவன் இல்லையே என்று எனக்கு எவ்வளவு வருத்தமாக இருந்தது தெரியுமா? தற்செயலாக இன்று விசேஷ நாளில் வந்திருக்கிறான், நான் போய் அவனை அழைத்து வருகிறேன்' என்று சொல்லி, வந்து என்னை அழைத்துக் கொண்டு போனாள். பொதுவாக என் தாயாரை விட என் அக்காள் அதிக வைதிக மனப்பான்மை கொண்டவர் என்பது எங்கள் குடும்பத்தினரின் கணிப்பு. அப்படியிருந்தும், இச் சமயம் அவர் நடந்து கொண்டவிதம், அவருக்குள் மறைந் திருந்த தேசிய உணர்வையே காட்டுகிறது.  இந்த நிகழ்ச்சி எதிர்பாராத இடங்க ளிலெல்லாம் தேசிய உணர்வு எப்படி வியாபித்திருந்தது, எனபதைக் காட்டவே.

(இந்த இடத்தில் என் தந்தை எழுதி வந்த குறிப்புகள் முடிகின்றன. 25 03 1985 இல் எழுதிய கடைசி குறிப்புக்குப் பின் அவர் உடல் நலம் குன்றி 29 05 1985 அன்று இறைவனடி சேர்ந்தார்.  அவர் நினைத்திருந்தபடி: “நான் பிறந்த குடும்பம், நான் வளர்ந்து ஆளானது, தெய்வ பக்தி, உத்தியோகம் வகித்தது, சந்தித்த மகான்கள், பெரிய மனிதர்கள், என் வாழ்வில் நடந்த நல்லது கெட்டது இன்னும் எதை எதையோ எழுதி வருவேன்” என்றபடி, பலப்பல நிகழ்வுகளை அவர் பதிவு செய்ய முடியாமற் போனது, துரதிர்ஷ்டமே; ஏனெனில் அவர் வாழ்வு அவ்வளவு நிறைவான பல நிகழ்வுகளின் செறிவு கொண்டது.
   கி.கண்ணன்.)

1 comment:

  1. முழுவதும் படித்தேன். அருமையான பதிவுகள்.

    நன்றிகள் பல.
    அமுதன் சேகர்

    ReplyDelete