காந்தி ஆசிரமம் அ. கிருஷ்ணன் தன் மனைவி மங்களம்அம்மாளுடன்

Wednesday 7 September 2011

மகன் தந்தைக்காற்றும்...

எனக்கு அப்போது சுமார் பத்து வயதிருக்கலாம். ஆண்டு, தேதி நினை வில்லை.  தமிழ் மாநில முதல்வர், பெருந்தலைவர் காமராஜர், சேலத்தில் ஏதோ நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார். என் தந்தை என்னையும் அழைத்துப் போயிருக்கிறார்.  சிந்தனை, செயல் மட்டுமின்றி, உடல்வாகிலும் உயர்ந்தவர் அல்லவா பெருந்தலைவர்?  கூட்டத்தில் ஒரு புறம் நிற்கும் என் தந்தையை அவர் கண்கள் கண்டு கொண்டன.  உடனே அருகில் வந்து என் தந்தையிடம், 'என்ன கிருஷ்ணன், நல்லா இருக்கீங்களா?' என முகமன் விசாரித்துப் பின் அவர்கள் ஏதேதோ பேசினார்கள்.  முதன் முறையாகச் சிறுவனாகிய எனக்கு, ஒரு மாநில முதலமைச்சரே அடையாளம் தெரிந்து கொள்ளும் அளவுக்கு, என் தந்தை, ஏதோ வகையில் சிறந்தவர் என்ற முதல் குறிப்பு, சிறிது பெருமையைத் தந்தது.

கிட்டத்தட்ட அதே ஆண்டில், நாமக்கல்லில் ஏதோ நிகழ்ச்சிக்காகச் செல்லும் போது, அப்போது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஓட்டல் ஊழியர், நாங்கள் அங்கு உணவருந்தச் சென்ற போது, என் தந்தையிடம் காட்டிய பரவ சம் மிகுந்த மரியாதையும்,  என் தந்தை கை கழுவச் சென்றபோது, என்னிடம், 'உன் அப்பா, தேச விடுதலைக்காக நாமக்கல்லில் ஒரு மறியல் செய்தபோது அவர் உடல் முழுவதும் அடி வாங்கி, இரத்த மயமான உடலோடு சந்தைப் பேட்டையில்  விழுந்து கிடந்ததை என் பத்து வயதில் பார்த்த காட்சி என் நினைவில் நிற்கிறது' என்பது போல செய்தி சொன்னார்.  என் தந்தையின் உடலெங்கும், - குறிப்பாகக் கால்தொடை முதல் கணுக்கால் வரை நிறைந்திருந்த காயத் தழும்புகளின் காரணம் சற்று விளங்கிற்று.  ஆனாலும் அவ்வளவு அடி வாங்கிட வேண்டிய தேவை என்ன என்பது சற்று குழப்பமாகத்தான் இருந்தது.

நான் உயர்நிலைப் பள்ளி மாணவனான போது, பள்ளிக்குச் சம்பளம் செலுத்த வேண்டும்.  எனக்கு மாதச் சம்பளம் ரூபாய் நான்கு; என் அக்காளுக்கு, ரூபாய் ஐந்தேகால்; என் அண்ணனுக்கு ரூபாய் ஏழரை; வீட்டு வாடகை ரூபாய் இருபது. என் வீட்டில் விருந்தினர் வராத நாளே கிடையாது.  மாதச் சம்பளம் கட்டப் பணம் கேட்கும் போதெல்லாம், அந்தப் பணத்தைத் தர என் அன்னை மிகவும் சிரமப்படுகிறார் என்பதை உணர முடிந்தது.  பள்ளியில் 92 MER Scholarship என்று பெற்றோரின் மாதச் சம்பள அடிப்படையில் கற்பிப்புக் கட்டண விலக்கிற்கான படிவம் பெற்று, என் தந்தையிடம் தந்தபோது, அவர் அதை முழுவதும் படித்துப் பார்த்து, ரூபாய் நூறுக்குக் குறைவான மாத ஊதியம்  பெரும் பெற்றோருக்கு மட்டுமே இது செல்லுமென்றும், தன் மாதச் சம்பளம் ரூபாய் நூற்று ஒன்று என்றும் சொல்லி ஒப்பமிட மறுத்தார். படிவத்தைப் பள்ளியில் நிறைவு செய்யாமலேயே திருப்பித் தந்தபோது பள்ளி ரைட்டர், என்னைத் தெரிந்து கொண்டு தலைமை ஆசிரியரிடம் அறிமுகப்படுத்தினார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு வி.சுப்பிரமணியம், சேலம் பிரமுகர் ஸ்ரீ அப்பாவு செட்டியார் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏதோ எண்டோமெண்ட் தொகை பெற்று அதன் மூலம் என் பள்ளிக் கட்டணம் கட்டாமலிருக்கும் சலுகை பெற்றுத் தந்தார்.  பொருளாதார ரீதியில் குடும்பத்தில் வறுமையே நிலவியதாக நான் நினைத்தேன். என் தந்தை ஏன் அந்த 92 MER Scholarship Applicationல் கையொப்பமிடவில்லை என்பது அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னை விடப் பொருளாதார அடுக்கில் மேம்பட்ட பல மாண வர்களும் 92 MER Concession பெற்றதாக நினைவு.
 
பின்னர், நான் உயர் நிலைப் பள்ளி மாணவனாக வளர்ச்சி பெறப்பெற, எங்கள் பள்ளியிலும், பிற பள்ளிகளிலும்  என் தந்தை, பாரதி விழா, சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, தமிழ் மன்றக் கூட்டங்கள்  போன்ற நிகழ்ச்சிகளில்  சிறப்பு விருந்தினராக வந்து, ஒலி பெருக்கி இல்லாமல், ஆயிரம் பேர் வரை கேட்கத் தக்க வகையிலும், உள்ளம் உருகுமாறும் உரத்த குரலில் பேசிய பேச்சுகளும், பாடிய பாடல்களும், அவற்றில் நிறைந்திருந்த ஆவேசமும் அவர் இந்த நாட்டை எவ்வளவு நேசித்தார் என்பதை எனக்குப் புலப்படுத்தத் தொடங்கியது.

என் தந்தை தன் முப்பதாவது வயதில், என் தாயை மணந்து கொண்ட தாகவும், சுமார் பதினைந்து ஆண்டுகள் பூண் நூல் அணியாமலும், சமயச் சடங்குகள் ஏதும் நிகழ்த்தாதவராகவும், அவருடைய தாய் தந்தையர் நினைவு நாட்களில், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் உட்பட அனைத்து சாதியினரையும் அழைத்து, வீட்டில் விருந்து படைத்ததாகவும், என் தாய் கூறுவார். ஆனால், என் பன்னிரண்டாம் வயதில், எனக்கும் என் அண்ணனுக்கும் பூண்நூல் அணிவித்து, மரபுகள் ஒரு நாட்டின் பண்பாட்டு விளக்கங்கள் என்பதை விரித்துச் சொல்லி,  'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - மன்னிப்பற்ற பெருங்குற்றம்! முன்னையோர், நமது நாட்டின் முனிவரர் தேடி வைத்த முழு முதல் ஞான மெல்லாம், மூட நம்பிக்கைகளல்ல' என்றெல்லாம் புரிய வைத்தார்.

சிருங்கேரி சாரதாபீட சங்கராச்சாரியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், பாரதியார், காந்திஜி, ஸ்ரீ ரமண மஹரிஷி,
புதுக்கோட்டை சாந்தானந்த ஸ்வாமிகள், வடகுமரை அப்பண்ண ஸ்வாமிகள், திருக்கோவிலூர் ஞானானந்த ஸ்வாமிகள், யோகி ராம்சரத்குமார், போன்றோரின் அறிமுக மும், அணுக்கமும், என் தந்தையுடைய ஆன்மிக ஏற்றங்களுக்கு உகப்பாய் அமைந்தன.

என் தந்தைக்கு மெக்காலே கல்வி முறையில் ஏனோ நம்பிக்கை இருக்க வில்லை.  என் அண்ணன் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் உயர் மதிப்பெண்கள் பெற்ற போதும், அவனை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மாணவரில்லத்தில் சேர்த்து, ஆட்டோமொபைல் டிப்ளமொ படிக்கச் செய்தார். கல்லூரிப் பட்டத்தில் எப்படியோ மோகங்கொண்ட என் அண்ணன், வேண்டா வெறுப்பாக  டிப்ளமொ படித்து முடித்து வேலை பெற்றார்.  என் அக்காளும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் மாவட்ட அளவில் உயர் மதிப்பெண்கள் பெற்ற போதும், சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரி நிர்வாகத்தில் நெருக்கமும், உரிமையும் பெற்றவராக என் தந்தை இருந்த போதும், என் தமக்கையை பி.யூ.சி.யில் சேர்க்காமல், அக்கல்லூரி பௌதிக சோதனைச்சாலை அட்டெண்டராகப் பணி செய்ய வைத்து, Dignity of Labour என்பதை நடைமுறைப்படுத்தினார்.
  நான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த போதும், மேற்படிப்பு கொள்கை ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தமக்கு உகந்தது இல்லை எனக் கூறி, என்னைக் கல்லூரியில் சேர்க்கத் தயங்கினார்.  சேலம் அரசுக் கல்லூரியில், முதல்வராக இருந்த திரு. அச்சுதன் நாயர், சேலம் விஜயராகவச்சாரியார் பேரன் திரு. ஆர். டி. பார்த்தசாரதி, அப்போதைய சேலம் ஆட்சியரும் என் தந்தையின் பள்ளித் தோழருமான திரு மோணி ஆகியோர் முயற்சிகளால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை பெற்று, உயர்வகுப்பில் இளம் அறிவியல் பட்டம் பெற்றேன்.  காந்தி ஆசிரம ஊழியர் திரு.எம்.கே.வெங்கடராமன் மற்றும் தீரர் சத்தியமூர்த்தியின் உறவினரான பேராசிரியர் ஆர்.கே. விஸ்வநாதன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால்  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, தேசிய கல்விக் கடன் பெற்று, எம்.எஸ்சி. பட்டம் உயர்வகுப்பில் தேறினேன்.

எம்.எஸ்சி. முடித்த பின், என் தந்தை என்னிடம், 'என் விருப்பத்திற்¢கு மாறாக என்னை அறிந்தவர்கள் உதவியால் இந்த நிலைக்குப் படித்துள்ளாய்; ஆனால் இனி என் பெயரைப் பயன் படுத்தி, நீ ஏதும் வேலை தேடிக்கொண்டால், அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன்.' என்று அழுத்தம் திருத்தமாய் கூறினார். அதன்படியே, என் பணி தொடர்பாகவோ, என் தனிப் பட்ட முன்னேற்றங்களுக்காகவோ, நான், என் தந்தை பெயரைப் பயன் செய்ய வில்லை.  என் தம்பி கல்லூரி சேரும் காலம் வந்த போது, அவன் காட்டிய ஆர்வத்தினால்,  நாங்கள் அனைவருமாகவே முடிவெடுத்து அவனை கல்லூரியில் படிக்கச் செய்தோம். அவனும் சிறப்பாக படித்துப பட்டம் பெற்றான்.  என் தமக்கையின் திருமணம், வறுமையில் செம்மை என்ற வகையில் மிகச் சிறப்பாக, பல ஆன்மிக, தேசியச் சான்றோர்கள் ஆசியுடன், 1967ல் நிகழ்ந்தது.

என் தந்தையின் 68வது வயதில், என் அண்ணன் தனது 34வது வயதில், மூன்று குழந்தைகளைத் தவிக்க விட்டு 1977ல் அகால மரணமடைந்த ஒரு பெருந் துன்பம் தவிர, அவர் வாழ்வு பல நிலைகளிலும் நிறைவாகவே இருந்தது.

சுமார் நாற்பத்தியொரு ஆண்டுகள், காந்தி ஆசிரமத்தில் நிர்மாணப் பணிகளில் பங்கு பெற்று, 1971ல் பணி நிறைவு செய்து, 1973 முதல் தஞ்சை யில் என் வீட்டிலும என் தம்பி வீட்டிலும் வசிதது வந்தார். கிராமராஜ்யம், கலை மகள், கல்கி விகடன், சர்வோதயம் போன்ற பல பத்திரிகைகளுக்கு, விஷய தானம் செய்து வந்துள்ளார். அவர் பணி செய்த காலம் முழுவதும், தேசப்பணி, கதர்ப் பணி, ஆன்மிகப் பணி, பாரதி தமிழ்ப் பணி ஆகியவற்றில் சேலம் மாவட்டத்தில் முழு நேரமும் ஈடுபட்டதால், அவரோடு அளவளாவி அவர் பற்றி அறிய அவர எங்களுக்கு நேரம் ஒதுக்கியதில்லை.  அதே போல, அவர் எங்க ளோடு வசித்த போது, எங்களுடைய பணி, அதில் எங்கள் வளரச்சி பற்றிய வேகத்தில், அவருடன் அளவளாவ, எங்களாலும் நேரம் ஒதுக்க முடியவில்லை.

அண்மையில், வீட்டில் உள்ள பழையன, தேவையற்றன என்பவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு டயரி கிடைத்தது.  1984 ஜனவரி முதல் 1985 மார்ச்சு முடிய ஆன காலத்தில், தான் பிறந்தது முதலான சுயசரிதைக் குறிப்புக்களை அந்த டயரியில் பதிவு செயதுள்ளார்.
இக் குறிப்புகளில், அவர் பிறப்பு, குடும்பப் பின்னணி, சிறுவனாக தேசியக் கூட்டங்களில் பங்கேற்றது, காந்திய மாதாந்திர பஜனைகளில் பங்கேற்றது, பம்பாயில் தோள் சுமையாக கதர் விற்றது, விளாத்திகுளத்தில் மேஸ்திரியாகப் பணி செய்யும் போதே தேசியப் பணி செய்தது, சுதந்திரப் பிரகடனம் வாசித்தது, விமோசனம் பத்தரிகைக்கு சந்தா சேர்த்தது, காந்தி ஆசிரமப்பணி, சுதந்திரப் போராட்ட வீரர் புள்ளி விவரம் சேகரித்தது, பெங்களூர் அச்சகங்களில் தேசியப் பிரசுரங்கள் அச்சிட்டது, இரு முறை சிறை சென்றது போன்ற பல செய்திகள் மூலம், தேசியத் தொண்டராக அவர் பங்கைப் பலவாறாக அறிய முடிகிறது. 2008, என் தந்தை நூற்றாண்டு. இக் குறிப்பக்களை உலகுக்கு வெளிக் கொணர்வதே அவருக்கு என்
 நூற்றாண்டு அஞ்சலி.

கி.கண்ணன்.

10 comments:

 1. தந்தையாரைப் பற்றிய அருமையான அறிமுகம்..மற்ற பதிவுகளையும் படிக்கின்றேன் ஐயா.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. ஐயா,
  கமெண்ட் செக்சனில் Word verification-ஐ எடுத்து விடவும்..

  ReplyDelete
 3. பெரியவர் தியாகி கிருஷ்ணன் அவர்களை நேரில் பார்த்துப் பேசவும், பழகவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு கே.எம்.ஆர். அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவர் நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட விவரம் எல்லாம் அவரே என்னிடம் நேரில் சொன்னவை. மேலும் அவரும் வேறு சிலரும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கொல்லிமலை அடிவாரத்தில் தலைமறைவாக இருந்திருக்கிறார்கள். அப்போது நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் அக்கா மகன் டி.வி.ராமஸ்வாமி பிள்ளை (கரூர் எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர்) இவர் இளைஞனாக இருந்தபோது சைக்கிளில் பின்னால் சாப்பாடு பாத்திரத்தை வைத்து அதன் மேல் புல் கட்டை வைத்துக் கட்டி மறைத்து, தலையில் முண்டாசு கட்டி மேல் சட்டை யில்லாமல் வந்து சாப்பாடு கொடுத்த விவரத்தைச் சொன்னார். இந்த டி.வி.ராமஸ்வாமி பிள்ளையுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கரூரில் கிடைத்திருந்தது. அவர் என்னையும், என் போல வேலைக்குப் புதிதாக சேர்ந்திருந்த பலரையும் கரூர் ஆநிலையப்பர் ஆலயத்துக்கு ஞாயிறு தோறும் வந்து அங்கு நடக்கும் சொற்பொழிவைக் கேட்க வைத்த பெரியவர். சமீபத்தில் சென்னையில் கிட்டத்தட்ட 95 வயதில் காலமானார். கடைசி வரை முரட்டு கதரும், தூய தோற்றமும், நல்லொழுக்கமும் படைத்தவராக வாழ்ந்த தியாகி கிருஷ்ணனின் இறுதி யாத்திரையில் பங்கு கொண்டவர்களில் நானும் ஒருவன். வாழ்க அவர் புகழ்!

  ReplyDelete
 4. வணக்கம்.

  எந்தரோ மகானுபாவுலு, அந்தரிகி வந்தனமுலு!

  எதையெல்லாமோ படித்து வாழ்நாளை வீணடிக்கிறோமே, இந்த மாதிரி, உன்னத மனிதர்களை பற்றி, ஏன் இத்தனை காலமாக படிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் படருகிறது.

  படிக்கும் போது, மகிழ்ச்சி ஒரு புறம், வே தனை ஒரு புற்ம், எத்னை கடின வாழ்க்கை, இந்த நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த குடும்பம்!

  தெரிந்து கொள்வதே பாக்யமாக கருதுகிறேன்
  ஒரு சில விசயங்களிலாவது, கடைப்பிடிக்கிறேன். முடிந்ததை செய்கிறேன்.

  ஜெய் ஹிந்த்.

  ReplyDelete
 5. வணக்கம்... தங்கள் மெயில் கண்டேன்... இதைத்தான் தாங்கள் கேட்டீர்களா என்று தெரியவில்லை... இருந்தாலும் இதோ விளக்கம் :

  Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)

  (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')


  அன்புடன்
  திண்டுக்கல் தனபாலன்
  dindiguldhanabalan@yahoo.com
  9944345233

  ReplyDelete
 6. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்

  தங்களின் கட்டுரையை ஆழமாக படித்தேன். படித்தேன் என்பதைவிட சுவாசித்தேன் எனலாம்.

  அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். நல்ல பண்புகளோடும் ஒழுக்கத்தோடும் வாழ்வையே ஒரு யாகமாக

  வாழ்ந்தவர் வழித்தோன்றல் நீங்கள். அவர் செய்த பல நல்ல காரியங்களின் புண்ணியம் தங்களையும் தங்களின் வாரிசுகளையுமே வந்தடையும்.

  இதற்குமேல் இதைப்பற்றிப் பேச எனக்கெல்லாம் என்ன யோக்யதை இருந்துவிடப்போகிறது.

  வாழ்க நீவிரும் நீவிர் குலமும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

  நன்றி வணக்கம்

  கோ. நந்தகோபால்

  ReplyDelete
 7. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு தங்களின் பால்ய சிநேகிதன் கோ.நந்தகோபாலின் பணிவான வணக்கங்கள்.

  நாம் வகுப்பறை குருகுல வாசகர்கள் என்கின்ற அடிப்படையில் நான் தங்களின் சிநேகிதன். அதுவும் ஏறக்குறைய

  இரண்டு ஆண்டுகளுக்கப்புறம் தங்களின் ஆக்கத்தைப் படித்து தங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யப்போவதால்

  நான் பால்ய சிநேகிதனாகிவிட்டேன். ஏனென்றால் இந்த இரண்டு வருட கால கட்டத்தில் தங்களின் வளர்ச்சிப் பரிமாணாம்

  எத்தகையதாக இருக்குமோ என்கின்ற ஆவலும் ஆச்சரியமும் என்னை தங்களின் முன் இன்னும் பால்யனாகவே

  பாவிக்கவைக்கிறது.

  கடந்து போன இரண்டு வருட கால கட்டத்தில் நான் கோயம்புத்தூரில் வசித்து வந்ததால் குடும்ப பொறுப்புகளும்,

  மற்றும் ஏனைய ஸ்தாவர சங்கம சொத்துகள் பராமரிப்பிலும், பேராசிரியராக பணியாற்றும் எனது துணைவியாருக்கும் மற்றும் கல்லூரியில்

  இறுதியாண்டு கணனியியல் படிக்கும் எனது ஒரே ஆத்ம வாரிசான மகனுக்கும்

  உறுதுணையாக இருந்ததிலுமே கழிந்து விட்டது. மறந்தும் நான் கணணி பக்கம் போக முடியாதபடிக்கு அவர்கள் இருவரின் கணணி ஆக்ரமிப்பும்

  ஒரு காரணம். தங்களைப் போன்ற சான்றோர் தொடர்பு பெருமளவு விட்டுப்போய் விட்டதில் எனக்கு தாங்கவொண்ணா வருத்தமிருந்தபோதிலும்

  என்னால் அப்போதைக்கு ஏதும் செய்ய இயலாத நிலையிலிருந்தேன்.

  இந்த சமயத்திலேதான் ஆண்டவன் என்னை மறுபடியும் சவுதி அரேபியாவுக்கு வேலை நிமித்தம் செல்லப் பணித்தான். அரசாங்க உத்தியோகமென்பதாலும்

  குறைந்த வேலைப்பளுவில் நிரந்த ஊதியமென்பதாலும் ஒரு வருடம் மட்டும் உழைக்க எண்ணி இங்கு வந்துவிட்டேன். இங்கே எனக்கு அதிக ஓய்வு நேரம் மற்றும்

  கணணி வசதி இருப்பதால் தங்களுடனான தொடர்பைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டி இந்த கடிதம். இதையும் தங்களின் வலைப் பின்னூட்டத்திலே இடவேண்டிய

  சூழ்நிலை.

  தங்களின் பதிலை gnanda60@yahoo.co.uk விற்கு அனுப்பினீர்களேயானால் நான் மிகுந்த சந்தோசமடைவேன்.

  நன்றி

  வணக்கம்

  இப்படிக்கு

  கோ.நந்தகோபால்

  ReplyDelete
 8. Sir, It is an interesting post and I am happy to read this. I have heard a lot about Kadar kadai Krishna Iyer. Please let me know your phone no. Mine is 9380288980. Thanks. N.R.Ranganathan

  ReplyDelete
 9. தாங்கள் இவ்வளவு உயர்ந்த குணத்துடன் இருப்பதற்கான காரணம் தெரிந்து கொண்டேன.எல்லாம் தங்கள் தந்தையின் மரபணு.
  ஒரு நல்ல மனிதரைப் பற்றி தெரிந்து கொண்ட மகிழ்ச்சி.
  இப்படியெல்லாம் மிகுந்த நல்ல உள்ளத்தோடு வாழ்ந்திருக்கிறார்களே என்று வியப்பாகவும் உள்ளது.

  ReplyDelete
 10. தங்கள் தந்தையார் பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுகிறோம். நன்றி. கண்ணீர் வருகிறது..

  ReplyDelete